PUBLISHED ON : ஏப் 09, 2017

ஜெயகாந்தன் எழுதிய, 'நினைத்துப் பார்க்கிறேன்' நூலிலிருந்து: என்னை தெரிந்தவர்களும், நண்பர்களும் ஆச்சரியப்படும் விதமாய், நான் ஒரு காரியம் செய்தேன்... அது, மாலை போட்டு, 40 நாட்கள் விரதம் இருந்து, 'சாமியே சரணம் ஐயப்பா...' என்று கூவியபடியே, இருமுடி சுமந்து, சபரிமலைக்கு போய் வந்ததுதான்.
மலையேறும் போது, கால் வலித்தது; மூச்சு வாங்கியது. 'சரி... ஏதோ ஆசைக்கு வந்தோம்; இதோடு போதும்; நமக்கு தாங்காது...' என்று கூட நினைத்தேன். ஆனால், இப்போது பாருங்கள்... மனமும், உடலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது.
இரண்டு நாட்கள் நடுக்காட்டில் வாசம்; இரவும், பகலும் சாமியே சரணம் கோஷம். சில குறத்திகள், வயதானவர்கள், குழந்தைகளை தவிர, பெண்களைப் பார்க்கக் கூட இல்லை. காலில் செருப்பில்லாமல், பம்பை ஆற்று மணலில் நடக்கும் போது, குளிரில் கன்றிப் போய் எரிந்தன, பாதங்கள்.
மூன்று வயது குழந்தை ஒன்று, 'ஆமியே அரணம்...' என்று கூவியபடியே, மலையேறி நடந்தது. கையில் தடியூன்றி, கூன் முதுகுடன் ஒரு கிழவர், பாதி வழியில் நின்று, ஏக்கத்தோடு அண்ணாந்து, மீதி வழியை பார்த்து, பெருமூச்செறிந்த பின், 'சாமியே...' என்ற கூவலுடன், ஆவேசத்துடன், வேகமாக ஏறி, என்னை கடந்து போய் விட்டார். எனக்கு கால் வலித்தது; தண்டனை மாதிரி மலை ஏறினேன்; அவர்களுக்கெல்லாம் இருக்கிற பக்தி எனக்கில்லை.
பின், ஏன் போனேன்... எனக்குப் பிடித்த நண்பரொருவர், ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு போகிறார் என்ற விஷயம், சென்ற ஆண்டு தான் எனக்குத் தெரிந்தது. அப்போதெல்லாம், ஒருநாள் கூட, என்னால் குடிக்காமல் இருக்க முடியாது. அதனால், என்னால் குடிக்காதிருக்கவும், அவ்விரதங்களை அனுஷ்டிக்கவும் முடியாது என்று பலர் சந்தேகப்பட்டனர். ஆனால், நானே ஆச்சரியப்படும்படியாக, மதுவிலக்கை ஒத்திவைத்த நாள் முதல், குடி மீதிருந்த தாகம் எனக்கு தணிந்து போயிற்று. அந்த நண்பருடன் சேர்ந்து உல்லாசங்களிலும், கேளிக்கைகளிலும் கலந்து கொள்கிற நான், இந்த விரதத்திலும் கலந்து கொண்டால் என்ன என்று, நினைத்தேன்.
எனக்கு, கேளிக்கைகள் மற்றும் உல்லாசங்களை பலரோடு சேர்ந்து அனுபவிக்க பிடிக்காது. என் வருத்தங்களும், சந்தோஷங்களும் மிகவும் தனிமை மிகுந்தவை. ஒரு நாகரிகத்துக்காகவும், அன்பிற்காகவும், என் அந்த குணத்தை, சிலரிடம் என்னால் தவிர்த்து கொள்ள முடிகிற போது, அதே நண்பருடன், இந்த விரதத்தில் சேர்ந்து கொள்வதில் மட்டும் என்ன யோசனை?
ஒருவர் கேட்டார்... 'இதெல்லாம் என்ன ஐயா வேஷம்?'
'ஒரு இந்தியனுக்கு, இதெல்லாம் வேஷமே இல்ல...'
'இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?'
கேட்ட நண்பருக்கு பெரிய மீசை உண்டு; 'நீங்கள் மீசை வைத்திருக்கிறீர்களே... அதில் என்ன நம்பிக்கை உங்களுக்கு...' இப்படி ஏதோ ஒரு பதிலை எல்லாருக்கும் சொல்கிறேன். ஆனால், எதற்கு போனேன்?
உடலில், வர்ணப்பொடி தூவி, வேஷம் போட்டு, தலையில் கிரீடம் வைத்து, கையில் வில் அம்புடன், 'சாமி தந்தனத்தோம்... ஐயப்ப தந்தனத்தோம்...' என்று தெருவெல்லாம் ஆடினேன். மலையில் மாடு மேய்க்கப் போய், காணாமல் போன சொந்த குழந்தையை கூப்பிடுவது மாதிரி, 'சாமியேய்...' என்று கூவி அழைத்தேன். ஆனால், எனக்கு அது வேண்டும்; இது வேண்டும் என்றெல்லாம், சாமியிடம் நான் வேண்டவில்லை.
எனக்கு என்ன வேண்டும் என்று, எனக்கென்ன தெரியும்? ஆனாலும், ஏனோ, இப்போது, மீண்டும் மீண்டும் போகலாம் என்று,தோன்றுகிறது.
நடுத்தெரு நாராயணன்
