
பத்திரிகையாளர், பி.வி.கிரி எழுதிய, 'ராஜாஜி' எனும் நூலிலிருந்து: ராஜாஜிக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர், ராஜகோபாலன்; திருமணமாகி, குடும்பத் தலைவரான பின், கோபாலாசாரி என்றழைக்கப்பட்டார். வழக்கறிஞராகி, சமூக மனிதரான பின், ராஜகோபாலாசாரியார் எனப்பட்டார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பின்னரோ, ஆசாரியார் என்று குறிப்பிடப்பட்டார். அரசியலில், ஆசாரியாரின் செல்வாக்கு ஓங்கத் துவங்கியதும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்று அழைக்கலாயிற்று, அறிஞர் உலகம்.
ஆங்கில மரபின் தாக்கத்தால், அறிஞர்களின் பெயர்களை இரண்டு அல்லது மூன்று எழுத்துக்களால் குறிப்பிடும் வழக்கம் இந்தியர்களிடையே ஏற்பட்ட போது, சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார், சி.ஆர்., ஆனார்.
கயாவில்,காங்கிரஸ் மாநாடு நடைபெற்றபோது, அம்மாநாட்டில், 'ராஜாஜி' என்று அழைக்கப்பட்டார்.
எழுத்தாளர் ஆர்.சி.சம்பத் எழுதிய, 'இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி' நூலிலிருந்து: இந்தியாவின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை விளக்க, 'இந்திய விழா' என்ற பெயரில், உலகின் பல்வேறு நாடுகளில், இந்திய கலாசார விழாக்களை ஏற்பாடு செய்திருந்தது, இந்திய அரசு.
ரஷ்யாவின் தலைநகர், மாஸ்கோவில் நடைபெற்ற இந்த விழாவின் துவக்க நாளன்று, எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடுவதாக ஏற்பாடு...
ரஷ்யாவின் முன்னணி பத்திரிகையாளர் ஒருவர், 'இந்த, 70 வயது பெண்மணியா பாடப்போகிறார்... இந்த வயதில் தெளிவாக பேசுவதே சிரமம்; இவரால் பாடக் கூட முடியுமா...' என்று கேட்டார், அங்கிருந்த இந்திய குழுவைச் சேர்ந்த ஒருவரிடம்!
உடனே அவர், எம்.எஸ்., லயித்துப் பாடியிருந்த,'சங்கர ஸ்ருதி' ஒலி நாடாவைப் போட்டுக் காட்டினார். அதைக் கேட்ட ரஷ்ய பத்திரிகையாளர், 'இதை, என்னால் நம்பவே முடியல; அற்புதமான பெண்மணி தான்...' என்றார்.
அதுபோல், லண்டன், 'இந்திய விழா'வில் கச்சேரி செய்ய, எம்.எஸ்., சென்றிருந்தபோது இன்னொரு சம்பவம் நடந்தது.
இந்தியாவைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல இசையமைப்பாளர் ஜுபின் மேத்தாவும் இவ்விழாவில் கச்சேரி செய்ய வந்திருந்தார்.
எம்.எஸ்., கச்சேரியை அடுத்து, ஜுபின் மேத்தாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகி இருந்தது.
தன் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து, வழக்கம்போல் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டார், எம்.எஸ்.,
புளகாங்கிதம் அடைந்து, 'என்ன அற்புதமான குரல்... அருமையான நாதம்... இவரது கச்சேரியை கேட்டவர்கள், அடுத்து, என் கச்சேரியை எப்படி ரசிப்பர்... இவரது கச்சேரியை அடுத்து, என் கச்சேரியை துவங்கும் விஷப் பரீட்சையில் இறங்க மாட்டேன்...' என்று சொல்லி, கச்சேரியை ஒத்திவைக்கச் சொல்லி விட்டார், ஜுபின் மேத்தா.
கண்ணதாசன் எழுதிய, 'எனது சுய சரிதம்' நூலிலிருந்து: சிவகங்கை சீமை படத்துக்காக எழுதிய சில பாடல்களை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன். மருது பாண்டியரும், ராணி வேலு நாச்சியாரும் திண்டுக்கல்லில் இருந்து ஹைதர் அலியை சந்திக்கப் போவதாக ஒரு காட்சி. அந்த கட்டத்தில், குடை நிழலிலிருந்து கும்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தாங்கே நடக்கின்றார்... என்று ஒரு பாடல்!
இப்படத்தில், அப்பாடல் இடம்பெறவில்லை. அதே மெட்டில், பாகப் பிரிவினை படத்தில், தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ... என்ற பாடலை எழுதினேன்.
அதுபோல, வேறொரு கம்பெனிக்காக, மண்ணில் கிடந்தாலும், மடியில் இருந்தாலும் பொன்னின் நிறம் மாறுமா... என்று எழுதிய பாடல், படமாக்கப்படாததால், பாசமலர் படத்தில், மலர்ந்தும் மலராத பாதி மலர் போல... என்ற பாடலை, அதே மெட்டில் எழுதிக் கொடுத்தேன்.
நடுத்தெரு நாராயணன்

