தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஏப் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறைந்த இயக்குனர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒரு பேட்டியில்: என்னுடைய, குறத்தி மகன் படத்தைப் பார்த்த பலர், 'அரசை எதிர்த்து, இப்படி ஒரு படம் எடுக்க ரொம்பத் துணிச்சல் வேண்டும்...' என்று சொன்னார்கள்.

அப்படத்தை, காமராஜருக்கு போட்டுக் காட்டினேன். ஒரு பிரபல நடிகரின் பெயரைச் சொல்லி, 'அவர் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...' என்று, அவர், தன் கருத்தை சொன்னபோது, 'அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகள் இப்படத்தில் இருப்பதால், அந்த நடிகர், நடிக்க மறுத்து விட்டார்...' என்றேன்.

உடனே, காமராஜர் பெரிதாக சிரித்து, 'அரசாங்கத்தை யாராலேயும் எதிர்க்க முடியாது; அது கடவுள் மாதிரி. அரசாங்கத்தை நடத்தற கட்சியை வேணுமானா எதிர்க்கலாம்...' என்றார்.

அவர் சொன்ன கருத்து புதுமையாக இருந்தது.

திரு.வி.க., தமது, 'வாழ்க்கை குறிப்புகள்' நுாலிலிருந்து: காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து கொண்டே, காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய உறுதி கொண்டார், ஈ.வெ.ராமசாமி. அவரது, 'குடியரசு' இதழ், பொதுவாக காங்கிரசையும், சிறப்பாக, என்னையும் மனம் போனவாறு தாக்கும். அத்தாக்குதல் எப்படியிருக்கும் என்றால், அதுபோன்ற தாக்குதலை என் வாழ்க்கையில் கண்டதே இல்லை எனும் அளவிற்கு இருக்கும்.

என்னைத் தாக்கித் திட்டுவதில், 'குடியரசு' தேர்ச்சி பெற்றது; அதன் நா தழும்பேறியது; அதன் தாக்குதலை ஏற்று, பொறுப்பதில் யான் தேறுதல் அடைந்தேன். என் உடலும்,

உள்ளமும் மறத்தன. திட்டை கேட்கும் அனுபவத்தையும் பெறுதல் வேண்டுமன்றோ... அது, நண்பர் வாயிலாக நிறைவேறலாயிற்று; எல்லாம் ஆண்டவன் அருள்!

'மேதைகள் தமாஷ்' நுாலிலிருந்து: ஒருமுறை லண்டன் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார், சார்லி சாப்ளின். அவரின் நகைச்சுவை, நிமிடத்திற்கு நிமிடம் விறுவிறுப்பாக இருந்தது. திடீரென்று, தொலைக்காட்சியில் சத்தம் வருவது நின்றது. திரையில் அவர் பேசும் காட்சி, ஊமைப் படம் போல் தெரிந்தது. அது நேரடி புரோகிராம் என்பதால், அதிகாரிகள் பதறி, விழுந்தடித்து ஓடி, என்ன கோளாறு என்று பார்த்தனர்; எல்லாம் சரியாகவே இருந்தது. இரண்டு நிமிடங்கள் கழித்து, 'கடகட'வென சிரித்தார், சாப்ளின். தொடர்ந்து ஒலியும் கிடைத்தது. அப்போதுதான் புரிந்தது, அந்த இரண்டு நிமிடங்களும் அவர் பேசாமல், வெறும் வாயை மட்டுமே அசைத்து, எல்லாரையும் திணறடித்திருக்கிறார் என்று!

'பாரதியார் வாழ்வில் சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து: கருங்கல்பாளையத்தில் உள்ள நுாலக ஆண்டு விழாவில், பாரதியாரை பேச அழைத்திருந்தார், ஈரோட்டில் வழக்கறிஞராக இருந்த தேச பக்தர், தங்கபெருமாள் பிள்ளை. ரயில் நிலையத்திலிருந்து பாரதியாரை அழைத்து வர, ச.து.சு.யோகியாருடன் மற்றொரு இளைஞரையும் அனுப்பி இருந்தார். இரு இளைஞர்களும், ரயில் நிலையம் சென்றனர்.

குடுமி, சரிகை அங்கவஸ்திரம், மகர கண்டி என்று பழங்காலக் கவிராயர் போன்ற தோற்றத்தில் பாரதியார் இருப்பார் என நினைத்தனர், அந்த இளைஞர்கள். அத்தகையோர் எவரும் வண்டியிலிருந்து இறங்காததால், பாரதியார் வரவில்லை என நினைத்து, ஏமாற்றத்தோடு, இருவரும் இல்லம் திரும்பினர். ஆனால், ரயிலை விட்டு இறங்கிய பாரதியார், தாமே வண்டி பிடித்து, தங்கபெருமாள் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்.

இது தெரியாமல், தங்கபெருமாளிடம், 'ஐயா... பாரதியார் இந்த ரயிலில் வரவில்லை...' என்றனர்.

உடனே, அங்கு முன்பே வந்து அமர்ந்திருந்த பாரதி, 'யாரடா வரவில்லை; பாரடா பாரதியை... வண்டி வந்தது; சென்றது; பாரதி வந்தான்; இருக்கிறான்...' என்றார். இளைஞர்கள் இருவரும், வியப்பில் வாயடைத்துப் போயினர். அஞ்சி, கூனிக் குறுகி, குழைந்து, கும்பிடு போட்டனர். உடனே பாரதியார், 'டேய்... கூனாதே; குழையாதே; கும்பிடு போடாதே... நிமிர்ந்து நில்; நேர்படப் பேசு...' என்றார்.

குஷ்வந்த் சிங் எழுதிய, 'இந்தியா' நுாலிலிருந்து: அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு மேலாக எந்த விமானமும் பறந்து செல்லாது; கோவிலைச் சுற்றிக் கொண்டுதான் செல்லும். சீக்கியர்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக, இந்த ஏற்பாடு.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us