PUBLISHED ON : ஏப் 08, 2018

''ச ரவணா... இந்த சாப்பாட்ட கொண்டு போய் உங்க தாத்தாட்ட குடு,'' என்றாள் அம்மா.
தொலைகாட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்த சரவணன், ''என்னம்மா... எப்பப் பாத்தாலும் எதாச்சும் வேலை சொல்லிட்டே இருக்க... முழுசா ஒரு படத்த பாக்க விடுரீயா,'' என்று முணு முணுத்தபடி சாப்பாட்டை எடுத்து, தாத்தாவின் அறைக்கு சென்றான்.
ஈசிச் சேரில் சாய்ந்து, கண் மூடி, பழைய நினைவுகளை அசை போடும் விதமாய் அமர்ந்திருந்தார், தாத்தா.
''தாத்தா... சாப்பாடு வச்சிருக்கேன்; சாப்பிடு,'' என்ற சத்தத்தை கேட்டு கண் திறந்தவர், ''சரவணனா... எப்பயா வந்தே...'' என்றார்.
''நேத்து நைட் வந்தேன் தாத்தா...''
''நல்லா இருக்கியா?''
''நல்லாயிருக்கேன்; நீ சாப்பிடு,'' என்றவன், நின்றிருந்தால், எதையாவது பேசிகிட்டே இருப்பார் என நினைத்து, அறையை விட்டு வெளியேறினான்.
ராமேஸ்வரத்தில், ஒரு வங்கியில், துணை மேலாளராக பணிபுரிகிறான், சரவணன். வேலைக்கு சேர்ந்து, ஓர் ஆண்டு ஆகிறது. இந்நிலையில், மதுரையில் உள்ள பயிற்சி மையத்தில், ஒரு வாரம் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்கான ஆர்டர் வந்திருந்தது. உள்ளூர் வாசியாக இருந்தாலும், பயிற்சியின் போது விடுதியில் தான் தங்க வேண்டும் என்பது பயிற்சி மையத்தின் விதிமுறை என்பதால், மதுரையில் உள்ள தன் வீட்டிற்கு வந்திருந்தான், சரவணன்.
''சரவணா... கொஞ்சம் தண்ணி கொண்டாயா...'' என்றார் அறைக்குள்ளிருந்து தாத்தா.
'இவரோட தொல்ல தாங்க முடியல...' என்று எரிச்சலுடன், தண்ணீரை எடுத்துப் போய், அவருக்கென இருந்த செம்பில் ஊற்றினான்.
''சரவணா... தாங்க முடியாத பாரம் எதுன்னு தெரியுமா?'' என்று கேட்டார். அடிக்கடி அவனிடம் அவர் விடுகதை சொல்வது வழக்கம். 'இவருக்கு வேற வேல இல்ல...' என்று மனதில் நினைத்தபடி, ''தெரியல தாத்தா... நீயே சொல்லு,'' என்றான்.
''நாளைக்கு யோசிச்சு சொல்லுயா,'' என்றார்.
''சரி தாத்தா,'' என்றவன், அறையை விட்டு வெளியே வந்தான்.
சிறு வயதில், தாத்தாவுடன் வெளியே செல்வதென்றால் சரவணனுக்கு அலாதி பிரியம். அடிக்கடி தாத்தாவுடன் குளக்கரைக்கும், வயல் வெளிகளுக்கும் செல்வதுண்டு. அப்படி செல்லும்போது, சரவணனுக்கு விடுகதைகளையும், புராணக் கதைகளையும் சொல்லி, கடவுள் வர்ணிப்புகளை பாடிக் காட்டுவார். 'உங்க தாத்தனுக்கு பின், நீயாச்சும் இந்த வர்ணிப்பையெல்லாம் கத்துக்கய்யா...' என்று அவரின் நண்பர்கள் சொல்வர்.
சரவணனும், 'கண்டிப்பா கத்துகிடுறேன்...' என்று, அவர்களிடம் ஆர்வமாக சொல்வான். தாத்தா சொல்லும் விடுகதைகளை நண்பர்களிடம் கேட்டு விளையாடுவான். அவர்களிடம் கேட்பதற்காகவே, தினமும் ஒரு விடுகதையை தாத்தாவிடம், அவன் கேட்பதுண்டு.
படிப்பின் காரணமாக, சரவணனுக்கும், தாத்தாவிற்குமான இடைவெளி அதிகமானது.
தற்போது, தாத்தாவிற்கு, அவரது அறையும், வீட்டின் முன்புறம் உள்ள வேப்ப மரத்துத் திண்ணையும் தான் உலகம். அவர் உழுது பயிர் செய்த வயல்களும், நீந்தி விளையாண்ட குளங்களும் இன்று கான்கிரீட் சுவர்களாக மாறியிருந்தன. அதைக் காணும்போதெல்லாம் அவரது கனத்த இதயத்திற்கு மேலும் வலி சேர்க்கும். இதனாலேயே அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்புவதில்லை. பகல் முழுதும் அந்த திண்ணையிலேயே பொழுதை கழிப்பார். சில நேரம் ஆடுபுலி ஆட்டத்தை, அவரே ஆடாகவும், புலியாகவும் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்பார். சில நேரம் திண்ணையில் அமர்ந்து, கடவுள் வர்ணிப்புகளை பாடியபடி இருப்பார்.
அலுவலகத்திலிருந்து வந்த அப்பா, அம்மாவிடம், ''எங்கப்பா சாப்பிட்டாரா?'' என்று கேட்டார்.
''அது ஆச்சு, ஏழு மணிக்கே,'' என்றாள், அம்மா.
''நீ, நாளைக்கு எப்படா டிரெயினிங் கிளம்புற,'' என்றார் சரவணனை பார்த்து!
''பத்து மணிக்கு அங்க இருக்கணும்.''
''உங்க பேங்க்ல மட்டும்தாண்டா புதுசு புதுசா ரூல்ஸ் போடுறானுங்க... உள்ளூர்காரனும் ஹாஸ்டல்ல தங்கணும்ன்னு... சரி, காலையில சீக்கிரம் கிளம்பிரு; நான் வண்டியில கொண்டு போய் இறக்கி விட்டுறேன்,'' என்றார்.
''சரி...''
அப்பாவின் கேள்விக்கு, பெரும்பாலும், ஒரு வார்த்தையே சரவணனின் பதிலாய் இருக்கும்.
மறுநாள் காலை அப்பாவின் பைக்கில் ஏறிய சரவணன், வேப்ப மர திண்ணையில், தாத்தா அமர்ந்திருந்ததை கவனிக்காமல், அம்மாவிடம் மட்டும் விடைபெற்று சென்றான். வண்டி பார்வையிலிருந்து மறையும் வரை, தாத்தாவின் கண்கள் இமைக்கவில்லை. அவர் இன்னும் சரவணனை பள்ளி செல்லும் சிறுவனாகவே எண்ணி, முச்சந்தியில் திரும்பும்போது, தன்னை பார்த்து கையசைப்பான் என்று நினைத்தார்.
மூன்று நாட்களுக்கு பின், சரவணனை மொபைல் போனில் அழைத்த, அவனது அப்பா, ''தாத்தாவுக்கு உடம்புக்கு முடியல; ஆஸ்பத்திரியில சேத்திருக்கோம்,'' என்றார்.
''ஏன், நல்லாதான இருந்தாரு...''
''கொஞ்ச நாளாவே, மூட்டு வலியில இருந்திருக்காரு... நம்மகிட்ட சொல்லாம இவரா மெடிக்கல்ல மாத்தரைய வாங்கி சாப்பிட்டுருக்காரு... ரெண்டு நாளா எது சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தார். ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனேன்... 'மாத்தர ஏதும் குடுத்தீங்களா'ன்னு டாக்டர் கேட்டாரு... அப்பதான், மூட்டு வலிக்கு மாத்தர சாப்பிட்ட விஷயத்தை சொல்றாரு... அந்த மாத்தரய அதிகமா சாப்பிட்டதால, குடல்ல ஓட்ட விழுந்திருச்சாம்; உடனே ஆபரேஷன் செய்யணும்ன்னு சொல்றாங்க. அதான், காலையில, கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில சேக்கலாம்ன்னு இருக்கோம்,'' என்றார்.
''ஏன், இப்ப, 'ட்ரீட் மென்ட்' எடுக்கிற ஆஸ்பிடல்லயே பாக்க வேண்டியது தானே...''
''அறுபதாயிரம் ரூபா செலவாகுமாம்... அப்படியே ஆபரேஷன் செய்தாலும், பொழப்பாருன்னு சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க... அதான், எதுக்கு காசு செலவு செய்துட்டு... பேசாம, ஜி.எச்.,ல சேத்துருவோம்ன்னு உங்கம்மா சொல்றா...'' என்றார்.
''சரி... பாத்துக்கங்க; நான், ராத்திரி பேசுறேன்...'' என்று போனை வைத்தான்.
மாலையில், சரவணனுக்கு போன் செய்த அவனின் அப்பா,''தாத்தாவுக்கு ஆபரேஷன் முடிஞ்சிருச்சுடா... பொழைக்கிறது கஷ்டம், காலைல தான் எதுவும் சொல்ல முடியும்ன்னு சொல்லிருக்காங்க...'' என்றார்.
அன்று இரவு, சரவணனுக்கு சரியாக துாக்கம் வரவில்லை. கடைசியாக, தாத்தாவை எப்ப பார்த்தோம் என்று யோசித்தான்.
'வீட்டிலிருந்து கிளம்பி வரும்போது திண்ணையில் உட்கார்ந்திருந்தாரே... அடடா... அவர்கிட்ட போயிட்டு வர்றேன்னு ஒரு வார்த்தை சொல்லவே இல்லியே... கடைசியாக, என்கிட்ட என்ன பேசினாரு... 'தாங்க முடியா பாரம் எது'ன்னு கேட்டாரே, அது என்னவா இருக்கும்...' என்று யோசித்தவாறு துாங்கி விட்டான்.
மறுநாள் காலை, 11:00 மணி -
அப்பா போன் செய்து, தாத்தா இறந்து விட்ட தகவலை சொன்னதும், சரவணனின் இதயம் கனத்தது.
பயிற்சி மைய இயக்குனரிடம் சென்று, ''சார், தாத்தா இறந்திட்டார்... நான் உடனே கிளம்பணும்; நாளைக்கு ஒருநாள் லீவு வேணும்,'' என்றான்.
'ஈவினிங், 'சாப்ட் ஸ்கில்' கிளாஸ் இருக்கு; முடிச்சிட்டு போங்க,'' என்றார் இயக்குனர்.
ஈவினிங், வகுப்பை முடித்து, இரவே வீட்டிற்கு கிளம்பினான்.
வீட்டின் வெளியே பந்தல் போடப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் கூட்டம் நிறைந்திருந்தது.
உறவினர்களின் அழுகை சத்தத்திற்கு இடையில் வீட்டிற்குள் நுழைந்தான், சரவணன். வீட்டின் நடு அறையில், ஐஸ் பெட்டியில், சடலமாக வைக்கப்பட்டிருந்த தாத்தாவை பார்த்ததும், அவனது மனம் கலங்கியது. அடுத்த நாள், மேள தாளத்துடன் அடக்கம் செய்யப்பட்டார். உறவினர்கள் கூட்டமும் குறைந்தது.
தாத்தாவின் அறைக்குள் நுழைந்தான், சரவணன். அங்கே, சில நோட்டு புத்தகங்கள் இருந்தன. அதில் ஒன்று, சரவணன், 6ம் வகுப்பு படிக்கும்போது பயன்படுத்திய நோட்டு. அதில், எழுதாமல் மீதம் இருந்த பக்கங்களில் கடவுள் வர்ணிப்புகளை எழுதியிருந்தார், தாத்தா. அவை அனைத்தும், சரவணன் சிறு வயதில், தாத்தாவிடம் விரும்பிக் கேட்டவை. சிறிது நேரம், ஈசிச் சேரில் அமர்ந்து, வர்ணிப்புகளை வாசிக்க துவங்கினான். அதை படிக்கும்போது, சிறு வயதில், தனக்கும், தாத்தாவுக்கும் இருந்த உறவு, கண் முன் வந்து போனது. தாத்தாவின் உறவை தொலைத்து விட்டோமோ என்று அவன் இதயம் கனத்தது.
ஒரு வாரத்திற்கு பின் -
அலுவலகத்திற்குள் நுழைந்த சரவணனின் பார்வை, ஆபீசை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த அமாவாசையின் மீது விழுந்தது. அமாவாசை, அவன் தாத்தாவின் வயதை ஒத்தவர். தினமும் ஆபீசை கூட்டி, சுத்தம் செய்வார். இரண்டு, மூன்று அலுவலகங்களில் இந்த வேலையை செய்கிறார்.
அவரை பார்த்ததும், சரவணனுக்கு தன் தாத்தாவின் ஞாபகம் வந்தது.
தன்னைப் பார்த்து எழுந்து நின்றவரிடம், மென்மையாக புன்னகைத்து, தன் அறைக்குள் நுழைந்தவன், ஜன்னல் கதவுகளை திறந்தான்.
''சாமி, விடுங்க; நான் திறக்கிறேன்,'' என்றார், அமாவாசை. அது இறுகி இருந்ததால், வலிந்து இழுத்தார்.
''வயசான காலத்துல ரெஸ்ட் எடுக்காம, எதுக்கு வேலைக்கு வர்றீங்க... உங்க புள்ளைங்கல்லாம் என்ன பண்றாங்க?'' என்று கேட்டான்.
''இருக்காங்க சாமி...'' என்று அவர்களை பற்றி பேச விரும்பாதவராய் பதிலளித்தார். அப்போது, அவனுக்கு தன் தாத்தா தன்னிடம் சொன்ன விடுகதை நினைவுக்கு வர, அதைப் பற்றி அவரிடம் கேட்டான்.
''தாங்க முடியாத பாரமா... நான், கடலுக்குள்ள மீன் புடிக்க போகயில, வலையில மீன் விழுந்ததும், இரண்டு மூணு பேரு சேந்து இழுக்குற பாரத்த, நான் ஒத்தயா இழுப்பேன்; ஆனா, அந்த பாரமெல்லாம் எனக்கு பெரிசில்ல; புள்ள குட்டிங்க பக்கத்தில இருந்தும், என்ன ஏதுன்னு கேக்க ஒரு ஆள் இல்லேங்கறத நெனக்கும்போது தான், மனசு ரொம்ப பாரமா இருக்கு. இந்த பாரத்ததான் சாமி தாங்க முடியல,'' என்ற போது, அமாவாசையின் கண்கள் கலங்கின.
தன் தாத்தா சொன்ன, தாங்க முடியா பாரம் என்னவென்று புரிந்தது, சரவணனுக்கு! குற்ற உணர்வில் மனம் கனத்தது.
அன்று முழுவதும், அமாவாசை சொன்னதே, சரவணன் மனதில் ஓடியது.
'நடக்க முடியாம தாத்தா கஷ்டப்பட்ட போது, 'என்னாச்சு தாத்தா'ன்னு கேட்ருந்தா, 'மூட்டு வலி'ன்னு சொல்லியிருப்பாரு... வைத்தியம் செய்து சரி செய்திருக்கலாம்; கேக்காம விட்டுட்டோமே...' என்று வருந்தினான்.
அன்று, அமாவாசை அலுவலகத்திற்கு வரவில்லை. விசாரித்த போது, அவர் இறந்து விட்டதாக சொன்னதும், அவனை அறியாமல் கண்களில் நீர் பெருக, வாய் விட்டு அழுதான். அது, அவனது தாத்தாவிற்கான அழுகை!
அந்த வார விடுமுறையில், தன் வீட்டிற்கு வந்தவன், சமையல் அறையில் இருந்த அம்மாவிடம், ''ஏம்மா, உனக்கு அடிக்கடி இடது கை வலிக்குதுன்னு சொன்னேல்ல... இன்னைக்கு ஆஸ்பிடல் போய், 'செக் அப்' பண்ணிட்டு வருவோமா...'' என்றான்.
''என்னடா திடீர்னு... சரி போவோம்; நீ போய் குளிச்சிட்டு வா, சாப்பாடு ரெடி பண்ணிட்டேன், சாப்பிடலாம்,'' என்றாள்.
என்றுமில்லாமல், மகன், தன் உடல் நலத்தில் அக்கறை காட்டியது அவன் தாய்க்கு மிகுந்த சந்தோஷத்தை தந்தது.
திங்கட்கிழமை காலை, ராமேஸ்வரம் செல்வதற்காக, பேருந்து நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்த போது, தன்னை வழியனுப்ப வந்திருந்த தந்தையிடம்,''அப்பா, வாங்க டீ குடிப்போம்,'' என்றான், சரவணன்.
இருவரும் டீ கடையை நோக்கி நடந்தனர்.
''அண்ணே... ரெண்டு டீ, ஒன்னு சுகர் இல்லாம,'' என்றவன், ''ஏம்ப்பா... உங்களுக்கு சுகர் இருக்குல, மாத்தர சாப்பிடுறீங்களா... சுகர் இப்போ நார்மலா இருக்குல...'' என்று விசாரித்த போது, அவன் தந்தையின் கண்கள் விரிந்தன. முதல் முறையாக தன்னை பற்றி, மகன் விசாரிப்பதை நினைத்து, உள்ளம் மகிழ்ந்தார்.
''எனக்கு சுகர் இருக்கறது உனக்கு தெரியுமாடா...'' என்றார், ஆச்சரியமாக!
''தெரியும்பா...'' என்று புன்னகைத்தவன், ''இன்னைக்கு டீ நல்லா இருக்குலப்பா... இனிமே, நாம அடிக்கடி இப்படி கடையில வந்து டீ குடிக்கணும்,'' என்ற மகனைப் பார்த்து, மென்மையாக புன்னகைத்தார்.
''சரிப்பா, பஸ் வந்திருச்சு, நான் கிளம்புறேன்; உடம்ப பாத்துக்கங்க,'' என்று கூறி, பஸ்சில் ஏறினான்.
இருவரின் மனதுகுள்ளும், ஏதோ பாரம் குறைந்து, லேசானது போல் இருந்தது.
க.சண்முக சுந்தரம்
