PUBLISHED ON : ஏப் 22, 2018

'சிறந்த மனைவியாக விளங்க என்ன செய்ய வேண்டும்?' வாத்ஸ்யாயனரின், 'காமசூத்திரம்' நுாலிலிருந்து:
* ஒரு பெண், வீட்டை சுத்தமாகவும், மலர்களால் அலங்கரித்து அழகாகவும் வைத்திருக்க வேண்டும்; மனதுக்கு ரம்யமாக இருக்கும் வீட்டை தவிர, ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியூட்டுவது வேறொன்றுமில்லை
*எக்காரணத்தை கொண்டும் வேலைக்கார பெண்ணை, தன் கணவனுக்கு பணிவிடை செய்ய அனுமதிக்கவே கூடாது. கணவனுக்குரிய பணிவிடைகளை தானே செய்ய வேண்டும்
* வீட்டு வாசலில் நின்று, தெருவை பார்த்துக் கொண்டிருப்பதோ, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெகுநேரம் தனியாக நின்று கொண்டிருக்கவோ கூடாது. இப்படியெல்லாம் செய்தால், இவளை எளிதில் அடைந்து விடலாம் என்ற எண்ணம், பிற ஆண்களுக்கு தோன்றும்
* தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், கணவனின் விருப்பத்துக்கு ஈடு கொடுத்து, திருப்தி படுத்த வேண்டியது மனைவியின் கடமை
* கணவனின் சம்மத மின்றி, யாருக்கும் பரிசளிக்கக் கூடாது; பெற்ற பிள்ளைக்கு கூட கணவனின் அனுமதியின்றி எந்த பொருளையும் கொடுக்கக் கூடாது
* தாம்பத்ய உறவில் எவ்வளவு ஆர்வம் இருந்தாலும், தானாக ஆடவனை நெருங்கக் கூடாது. அப்படி நெருங்கினால், அவள், தன் கம்பீரத்தையும், வசீகரத்தையும் இழந்து விடுவாள்
* திருவிழா, துக்கம் விசாரித்தல் போன்ற தவிர்க்க முடியாத, நியாயமான காரணம் எதுவுமில்லாமல் ஒரு பெண், தன் பிறந்த வீட்டுக்கு போகக் கூடாது.
ஒருவர், அன்று காலை வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன், தன் மனைவியிடம், 'இன்று காலை, தாய்லாந்து பிரதமரை, விமான நிலையத்திற்கு சென்று வரவேற்க வேண்டும்; பின், சட்டசபை கூட்டத்திற்கு போக வேண்டும். மதியம், கவர்னர் மாளிகையில், துணை ஜனாதிபதிக்கு அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும். சாயங்காலம், ஒரு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா. அதன்பின், ஒரு நாட்டிய நிகழ்ச்சி; எப்படியும், நான் திரும்பி வர இரவு, 11:00 மணி ஆகிவிடும்...' என்று கூறி, புறப்பட்டு சென்றார். இந்த பிரமுகர் யாராக இருக்கும்?
- ஒரு அமைச்சரின் கார் டிரைவர் தான்!
கி.வா.ஜ., எழுதிய, 'உண்பதும் ஒரு கலை' எனும் கட்டுரையிலிருந்து: ராமபிரானுக்கு எத்தனையோ திறமைகள் உண்டு. அதில், சுவை அறிந்து, சாப்பிடுவதும் ஒன்று. அதனால் தான், 'சாப்பாட்டு ராமன்' என்ற திருநாமம் அவருக்கு உண்டாயிற்று.
வனவாச காலத்தின் போது, காய், கனி, கிழங்குகளையே உண்டு வந்தார், ராமர். சீதையை பிரிந்த பின், சுவையே பாராமல், எப்படியோ கால் வயிற்றை நிரப்பி வந்தார். ராவண சம்ஹாரம் முடிந்து, தன் படைகளுடன் திரும்பும் வழியில், பரத்வாஜ் முனிவர் ஆசிரமத்தில் தங்கினார்.
அப்போது ராமருக்கு மிகவும் சுவையான விருந்து வழங்கினார், முனிவர். அதை சுவைத்து உண்பதில் ஈடுபட்டபோது, அயோத்திக்கு போவதில் தாமதம் உண்டாகலாம் என்று கருதி, அனுமனை அனுப்பி, தானும், பிறரும் வந்து கொண்டிருப்பதை பரதனுக்கு சொல்லச் சொன்னார்.
பரத்வாஜர் ஆசிரமத்தில், பெருமான் சாப்பாட்டு ராமனாக இருந்தமையால், அவருக்கு இப்பெயர் உண்டாயிற்று.
நடுத்தெரு நாராயணன்
