தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/போவோமா சுற்றுலா!

போவோமா சுற்றுலா!

போவோமா சுற்றுலா!


PUBLISHED ON : ஏப் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேர்வு முடிந்து, விடுமுறை விட்டாச்சு... அடுத்து, சுற்றுலா கிளம்ப வேண்டியது தான். எங்கு செல்வது என்று, 'பிளான்' செய்து விட்டீர்களா? குறைந்த, 'பட்ஜெட்'டில், தமிழகத்திற்குள் எங்கெங்கு செல்லலாம் என்பதற்கு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவக்கூடும்...

பெலிக்கல்!

ஊட்டியில் இருந்து, 16 கி.மீ., துாரத்தில் உள்ளது, பெலிக்கல். இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான இவ்விடத்திற்கு செல்ல, ஊட்டியிலிருந்து பல கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும்.

இங்கிருந்து, மோயர் ஆறு, முதுமலை மற்றும் பந்திப்பூர் காடு போன்றவற்றை ரசிக்கலாம். இங்கு பைக் ஓட்டுதலும், மலையேற்றமும் சிறப்பு என்றாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பெலிக்கல் கிராமத்துக்கு நடந்து செல்வதே சுகமான அனுபவம்.

மழை அதிகம் இருக்கும் அக்டோபர், நவம்பர் மாதங்களை தவிர்த்து, ஆண்டு முழுதும் செல்லலாம்; இங்கு, தங்கும் விடுதிகள் உள்ளன. சைவ, அசைவ உணவு வகைகள் தயார் செய்து கொடுப்பர்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களி லிருந்து கோவைக்கு ரயில், பேருந்து வசதிகள் உள்ளன. அங்கிருந்து ரயில் மற்றும் பேருந்துகளில் ஊட்டி சென்று, பின், பேருந்து மற்றும் கார்களில் பெலிக்கல் செல்லலாம்.

அருகில் உள்ள ரயில் நிலையம் மேட்டுப்பாளையம்.

பார்க்க வேண்டிய இடங்கள்: பெலிக்கல் ஏரி, பைசன் பள்ளத்தாக்கு, கல்ஹாத்தி அருவி.

புதுச்சேரி சுண்ணாம்பாறு!

சென்னையிலிருந்து, 123 கி.மீ., துாரத்தில் இருக்கிறது, புதுச்சேரி; அங்கிருந்து, 8 கி.மீ., துாரத்திலுள்ளது, சுண்ணாம்பாறு. கடலிலிருந்து வந்த தண்ணீர் கழிமுகமாக மாறியிருக்கிறது.

இந்த கழிமுகத்தில் படகு சவாரி செய்ய, அதற்கான கட்டணத்தை செலுத்தி, அரை மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்தால், கடற்கரை வரும். அங்கு, தங்குவதற்கு வசதியாக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தங்கும் நேரத்தை பொறுத்து கட்டணம் செலுத்த வேண்டும்.

கடலில் குளித்து, மீண்டும் நல்ல தண்ணீரில் குளிக்கவும், உடை மாற்றவும் வசதி உள்ளது. நாம் விரும்பும்போது அங்கிருந்து கிளம்பி, எந்த படகிலும் ஏறி, மீண்டும் பழைய இடத்தை அடையலாம். காலை முதல் மாலை வரை பொழுது போக்க சிறந்த இடம்.

ஆண்டு முழுதும் செல்லலாம்; புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் உள்ளன.

கடற்கரையில் புதுச்சேரி சுற்றுலா துறை மூலம் சைவம், அசைவ உணவு வகைகள், தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் கிடைக்கின்றன.

வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்லலாம்; கடலில் குளிப்பதற்கு தேவையான துண்டு, மாற்றுத் துணிகள் எடுத்துச் செல்ல வேண்டும்.

சென்னையிலிருந்தும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்தும் புதுச்சேரிக்கு ரயில் மற்றும் பேருந்துகள் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள்: புதுச்சேரி கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், பாரதி அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா.

கல்லணை!

திருச்சியிலிருந்து, 24 கி.மீ., துாரத்தில் உள்ளது, கல்லணை; புழக்கத்தில் இருக்கும் அணைகளில் மிகவும் பழமையான அணை இது. 2,000 ஆண்டுகளுக்கு முன், கரிகால சோழனால் கட்டப்பட்டது. தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் மணலை அடித்தளமாக வைத்து கட்டப்பட்ட இந்த அணை, இன்றைக்கும், வியப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. அணைக்கு செல்லும் வழியில் அழகான, பசுமையான கிராமங்கள் உள்ளன. அணையை சுற்றியுள்ள மரங்களுக்கு அடியில் அமர்ந்தபடி கல்லணையை கண்டுகளிக்கலாம்.

வீட்டிலிருந்தே உணவை எடுத்துச் செல்ல வேண்டும்; தண்ணீர் பாட்டில், டீ, குளிர் பானங்கள் இங்கு கிடைக்கும்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து, திருச்சிக்கு ரயில், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து கல்லணைக்கு பேருந்தில் செல்ல வேண்டும்; திருச்சியில் தங்கும் விடுதிகள் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள்: முக்கொம்பு, மலைக்கோட்டை.

கொல்லி மலை!

நாமக்கல்லில் இருந்து, 53 கி.மீ., -சேலத்திலிருந்து, 100.கி.மீ., - திருச்சி விமான நிலையத்திலிருந்து, 90 கி.மீ., துாரத்திலும் இருக்கிறது, கொல்லி மலை. இது, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட பகுதி. 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தால், அடர்ந்த காடும், இதமான குளிரும் நிறைந்த இம்மலை வந்துவிடும். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோவில், வியூ பாயின்ட் மற்றும் ஏரியில் படகு சவாரி போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள்.

சேலம் வரை ரயில் மற்றும் பேருந்துகளில் பயணித்து, அங்கிருந்து கொல்லி மலைக்கு வேறொரு பேருந்தில் செல்ல வேண்டும். செப்டம்பர் முதல் மே மாதம் வரை சீசன் காலம்; மக்கள் அதிகமாக செல்லாத பகுதி என்பதால், மிகக் குறைந்த அளவிலே தங்கும் விடுதிகள் உள்ளன.

அன்னாசி, பலா பழம், மசாலா பொருட்கள் மற்றும் கறுப்பு மிளகு போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us