PUBLISHED ON : ஜூலை 18, 2021

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டு திருமண விழாவில், கலை உலகினர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருந்தில், அவர்களுடன் கலைவாணரும் அமர்ந்தார்.
உணவு உண்ணும்போது, சோற்றில் இருந்த கல் ஒன்று, கலைவாணரின் வாயில் அகப்பட்டது. அந்த கல்லை கையில் எடுத்து வைத்து, சமையல்காரரை கூப்பிட்டார்.
அவர் வந்ததும், 'தம்பி, விருந்தில் உன் முதலாளியை மட்டும் தனியாக கவனிக்க கூடாது. அப்படி கவனித்தால், விருந்துக்கு வந்த மற்றவர்களை அலட்சியப்படுத்தற மாதிரி நினைச்சுக்க மாட்டாங்களா...
'விருந்து என்றால், எல்லாரையும் ஒரே மாதிரி கவனிக்க வேண்டும். உன் முதலாளிக்கு மட்டும் சோற்றில் கல்லை போட்டிருக்கியே... இது சரியா...' என்று சொல்லியபடியே, சமையல் செய்தவரிடம் கல்லை காண்பித்தார்.
மற்றவர்களும், அவரது நகைச்சுவையை ரசித்தபடியே, உணவை கவனமாக சுவைத்தனர்.
சமையல்காரரின் தவறை நாசூக்காக உணர்த்த, கலைவாணர் கையாண்ட உத்தி நகைச்சுவையானது மட்டுமல்ல, பண்பாடு மிக்கதும் கூட.
'500 குட்டிக் குட்டி செய்திகள்' நுாலிலிருந்து: இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த நேரம். ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள், குண்டு வீச்சால் நாசமடைந்திருந்த சூழல்.
குண்டுகளை கண்டுபிடித்த, ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் என்ற பிரபல விஞ்ஞானியிடம், 'மூன்றாம் உலகப் போரில் எந்த ஆயுதத்தை வீசுவர்...' என்றனர், நிருபர்கள்.
'மூன்றாம் உலகப் போரில், எந்த ஆயுதத்தை வீசுவர் என்று, எனக்கு தெரியாது. ஆனால், நான்காம் உலகப் போரில் எதை வீசுவர் என்று, எனக்கு தெரியும்...' என்றார்.
'சொல்லும்... எந்த வகை ஆயுதத்தை வீசுவர்...' என்றனர்.
'மூன்றாம் உலகப் போரில் தான், மனித இனமே அழிந்து போயிருக்கும். அதன்பின், ஆதி மனிதர்கள் எதை வீசுவர், கல், ஈட்டி, அம்புகளை தான்...' என சொல்லி, முடித்தார்.
'பிரபலமானவர்களின் வாழ்வில்' நுாலிலிருந்து: பிரபல எழுத்தாளர், மார்க் ட்வைன். அவரின் பழைய குடையை வேண்டாமென, குப்பையில் வீசி எறிந்தார்.
அடுத்த நாள், அந்த குடையுடன் வந்து நின்றார், பக்கத்து வீட்டுக்காரர்.
'சார்... உங்க குடையை யாரோ எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டிருக்காங்க. இதோ, உங்க குடை...' என்று, கொடுத்துச் சென்றார்.
கடுப்பான மார்க் ட்வைன், அதை எடுத்து போய் பாழுங்கிணற்றில் போட்டார்.
அடுத்த நாள், அவரது வீட்டு வாசலில் வந்து நின்ற, துார் வாரும் ஆசாமி, 'சார்... இதோ உங்க குடை. யாரோ கிணத்துல வீசி எறிஞ்சுட்டாங்க...' என்று, கொடுத்து விட்டு போனார்.
'இதை எப்படி ஒழிச்சு கட்டுறது...' என, இரவு முழுவதும் யோசித்தார், மார்க் ட்வைன்.
யோசனை ஒன்று உதயமானது. அடுத்த நாள், அந்த குடையை ஒருவருக்கு, 'ஓசி'யாக கொடுத்தார். அப்புறமென்ன, அது, திரும்பி வரவே இல்லை.
'பெருந்தலைவர் காமராஜர்' நுாலிலிருந்து: ஒருமுறை, எதிர்பாராத விதமாய் தேர்தலில் தோற்று விட்டார், காமராஜர்.
அவரை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், 'உங்களின் தேர்தல் தோல்விக்கு எது காரணம்... யார், யார் காரணம்... முக்கியமான காரணம் என்ன...' என்றனர்
அனைவரையும் அமர வைத்து, 'நான், தேர்தலில் தோற்றதற்கு முக்கியமான காரணம், மக்கள். என் கட்சிக்கு ஓட்டு போடவில்லை. அது தான் தேர்தல் தோல்விக்கு காரணம்...' என்றார், காமராஜர்.
நடுத்தெரு நாராயணன்
