தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கடவுளை நம்பினோர்...

கடவுளை நம்பினோர்...

கடவுளை நம்பினோர்...


PUBLISHED ON : ஜூலை 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெய்வீக நுால்கள் பலவும் பலவிதமான பாடங்களை, கதை வடிவில் சொல்லிக் கொடுத்திருக்கின்றன.

அனைத்திலும் பார்த்தால், நல்லவர்கள் கஷ்டப்பட்டிருக்கின்றனர்; ஓர் இடத்தில் தங்காமல், இடம்விட்டு இடம் பெயர்ந்து அவர்கள் பட்ட துயர் பல. காரணம், நல்லவர்களின் தவமும், தீயவர்களின் தீமையும் தான் என்கின்றன, ஞான நுால்கள். அந்த அடிப்படை உண்மையை, மகாபாரத கதையின் வாயிலாக அறியலாம்.

பஞ்ச பாண்டவர்களையும், அவர்களின் தாயான குந்தியையும் அரக்கு மாளிகையில் தீயிட்டுக் கொளுத்த ஏற்பாடு செய்தான், துரியோதனன். அது, பலிக்கவில்லை; பாண்டவர்கள் தப்பிப் பிழைத்தனர். அதன்பின், வேறு ஊரில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.

அங்கிருந்து சற்று தொலைவிலிருந்த காட்டில், பகாசுரன் எனும் அசுரன் இருந்தான். அவனுக்கு, ஊரில் உள்ளவர்கள், தினமும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும், இரு மாடுகள் பூட்டிய வண்டி நிறைய உணவு, அதை ஓட்டிச்செல்ல ஓர் ஆள் அனுப்ப வேண்டும். உணவுடன் இரு மாடுகளையும், வண்டியை ஓட்டிச்செல்லும் ஆளையும் சேர்த்தே உண்பான், பகாசுரன்.

பாண்டவர்கள் தங்கியிருந்த வீட்டுக்காரர்கள், உணவு அனுப்ப வேண்டிய முறை வந்தது. அவர்கள் வீட்டில் நான்கு பேர் இருந்தனர்; ஒவ்வொருவரும், 'பகாசுரனுக்கு நான் உணவாகப் போகிறேன்...' என்றனர்.

அந்த நேரத்தில் குந்திதேவி தலையிட்டு, பீமனை அனுப்புவதாக சொல்லி வாதிட்டு, வெற்றியும் பெற்றாள். தாயின் உத்தரவை ஏற்று, வண்டி நிறைய உணவுடன், அசுரனை நாடிச் சென்றான், பீமன்.

அசுரனின் இருப்பிடத்தை அடைந்ததும், முதலில், வண்டியில் இருந்த உணவை காலி செய்தான்; பின், அசுரனையும் காலி செய்தான், பீமன்.

அசுரன் கொடுமையில் இருந்து மீண்ட ஊரே, பீமனை வாழ்த்தியது.

தெய்வீக அவதாரங்களும், சக்தி படைத்தவர்களுமான பாண்டவர்களுக்கு, துயரங்கள் வந்தன என்றால், அவைகளுக்குக் காரணமான துரியோதனன் முதலானோரின் முடிவு மட்டுமே காரணமல்ல; இடிம்பாசுரன், பகாசுரன் முதலான தீயவர்களிடமிருந்து நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், துயர் அனுபவித்தனர், பாண்டவர்கள்.

ஸ்ரீராமர் வந்தது, ராவண சம்ஹாரத்திற்காக என்றாலும், அதற்காக மட்டும் வரவில்லை. வனத்தில் வாழும் முனிவர்கள், சுக்ரீவன், விபீஷணன் முதலானோருக்கு அருள் புரியவும் வந்தார். அதற்காகத்தான் வனவாசமும் மேற்கொண்டார்.

ஆகையால், நல்லவர்களுக்கும் கஷ்டங்கள் வருகின்றன என்று, நம்பிக்கையை இழக்க வேண்டாம். தெய்வம் ஒருபோதும் நம்மை கை விடாது. காப்பாற்றும் என்ற எண்ணம் அழுத்தமாக இருந்தால் போதும்; அல்லல்கள் விலகி ஓடும்.

பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!

பூஜை செய்யும் போது, கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தை, பூக்களால் மறைத்து விடக் கூடாது. முகமும், பாதமும் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us