PUBLISHED ON : ஏப் 24, 2022

ஏப்., 29 பாரதிதாசன் பிறந்தநாள்
கங்கை புத்தக நிலைய வெளியீடான, 'படவுலகில் பாரதிதாசன்' நூலிலிருந்து:
பாவேந்தர் பாரதிதாசன், திரையுலகில் எழுதிய முதல் பாடல், ராமானுஜர் என்ற படத்தில் இடம்பெற்றது. இதை, மணிக்கொடி இலக்கிய அன்பர்கள் இணைந்து தயாரித்தனர். எழுத்தாளர், வ.ரா.,வும் இவர்களில் ஒருவர்.
'ராமானுஜர் படத்தை, பாரதி அன்பர்கள் சேர்ந்து உருவாக்குகின்றனர். தாங்கள் பாடல் எழுத, சென்னை வரவேண்டும்...' என, பாரதிதாசனை அழைத்தார், வ.ரா.,கடிதத்தின் சிறப்பு வாசகம்: பாடல்களுக்குப் பை நிறைய பணம் உண்டு.
அதை ஏற்று, சென்னை சென்று பாடல் எழுதினார், பாரதிதாசன். இந்த படம், 1938ல் தான் வெளிவந்தது.
டி.கே.எஸ்., சகோதரர்கள் தயாரித்த, பாலாமணி அல்லது பக்காத் திருடன் என்ற படத்திலும், பாரதிதாசன் பாடல் எழுதியிருந்தார். இது, 1937லிலேயே வெளிவந்து விட்டது. ஆக, பாரதிதாசன் எழுதி, முதலில் வெளியான திரைப்படம், பாலாமணி அல்லது பக்காத் திருடன் தான்.
இந்த படத்திற்கு, பாரதிதாசனுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், 'பாலாமணி அல்லது பக்காத் திருடன் மகத்தான மூன்றாவது வாரம். பாலாமணிக்கு பாடல் சேர்த்தவர், புதுவை ஸ்ரீபாரதிதாசன்...' என்று, விளம்பரம் செய்திருந்தனர்.
ஏவி.எம்.,மின், ஓர் இரவு படம், 1951ல் வெளிவந்தது. இதில், 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா' என்ற பாரதிதாசன் பாடலை பயன்படுத்திக் கொண்டனர்.
இதற்கு, கே.ஆர்.ராமசாமி மூலம், 1,000 ரூபாய் கொடுத்து அனுப்பினார், ஏவி.எம்., அந்த காலத்தில், ஒரு திரைப்பட பாடலுக்கு, 1,000 ரூபாய் வாங்கிய முதல் கவிஞர், பாரதிதாசன் தான்.
ஆர். ஆர். சந்திரன் தயாரித்த படம், நானே ராஜா. இந்த படத்தில், 'ஆடற்கலைக்கு அழகு தேடப் பிறந்தவள்...' என்ற பாரதிதாசன் பாடலை இடம்பெறச் செய்ய, அவரிடம், 500 ரூபாய் சன்மானம் கொடுக்க வந்தார், கண்ணதாசன்.
'எவ்வளவு பணம் கொண்டு வந்தாய்?'
'ஐநுாறு...'
'ஆயிரம் ரூபாயில் ஒரு காசு குறைஞ்சாலும் முடியாது...' என்று மறுத்தார், பாரதிதாசன்.
உடனே, பாரதிதாசனின் மகன், மன்னர் மன்னனை, கண்ணதாசன் சிபாரிசுக்கு அழைத்தார். உடனே அவரும், 'அதிக வசதி இல்லாமல் படம் எடுக்கிறாங்க...' என, அப்பாவிடம் சமாதானம் கூற, பிறகு, 'சரி, கொடு...' என, 500 ரூபாயை பெற்றுக்கொண்டாராம், பாரதிதாசன்.
சேலம், மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த, வளையாபதி படத்திற்காக, 'கமழ்ந்திடும் பூவில் எல்லாம் தேனருவி கண்டதனால் வண்டு காதலினால் நாதா தாவிடுதே இன்பம் மேலிடுதே...' என்ற பாடலை எழுதியிருந்தார், பாரதிதாசன்.
இதில், கமழ்ந்திடும் என்ற சொல், இசையமைப்புக்கு கடினமாக இருந்ததால், மார்டன் தியேட்டர் குழுவினர், அதற்கு மாற்றாக, 'குலுங்கிடும்' என்ற வார்த்தையை சேர்த்தனர்.
பாரதிதாசனுக்கு வந்ததே கோபம்... 'எவன்டா என் பாட்டை மாத்தியவன்... குலுங்கிடும் பூவில் எப்படித் தேனருவி வரும்...' என்று, கடுங்கோபம் கொண்டார்.
இந்த ஒரு சொல் மாற்றத்தால், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்று, அங்கிருந்தவர்கள் கூறிய சமாதானத்தை ஏற்கவில்லை, பாவேந்தர்.
மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன், 40 ஆயிரம் ரூபாய்க்கு தாம் செய்திருந்த ஒப்பந்தத்தை அப்போதே கிழித்தெறிந்துவிட்டு, இரவோடு இரவாக புதுவைக்கு திரும்பி விட்டார், பாரதிதாசன்.
பணத்திற்கு என்றும் அவர் விலை போகாதவர் என்று நிரூபித்தது இந்நிகழ்ச்சி.
'அய்யாவுடைய பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று, நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் இப்படி கண்டிப்பு போடுகிறீர்களே...' என, அவரிடம் சிலர் கேட்டனர்.
'என் பாடலைத் தலையில் துாக்கிக் கொண்டு போய், யார் வீட்டு வாசலிலும், நான் கூவி விற்பதில்லை. சரியான விலைக்கு அது விற்கிறது. படைப்பாளியை மட்டப்படுத்திக் காட்டும் எந்த முயற்சிக்கும் என் ஆதரவு இல்லை...' என்றார், பாரதிதாசன்.
நடுத்தெரு நாராயணன்
