PUBLISHED ON : ஏப் 24, 2022

அன்பு மகளுக்கு —
எனக்கு, மூன்று மகள்கள். முதல் மகளை, என் தம்பி பையனுக்கும், அடுத்தவளை, நாத்தனார் பையனுக்கும் திருமணம் செய்து கொடுத்தோம். கடைசி மகளுக்கும் திருமணம் செய்து வைத்தோம்.
கடைசிப் பெண்ணுக்கு உடல் நலம் சரியில்லை. வலிப்பு நோய் வந்து கீழே விழுந்து விடுவாள். கை, கால்கள் கோணல் மாணலாக இழுக்கும். வாயிலிருந்து எச்சில் வழியும். உதட்டைக் கடித்துக் கொள்வதால் உதடெல்லாம் புண்ணாகும். ஒரு வாரம் வரை படுத்த படுக்கையாகக் கிடப்பாள்.
உணவு ஊட்டுவது, குளித்து, தலை சீவுவது, உடை மாற்றுவது, கழிவறைக்கு கூட்டிப் போவதென அனைத்தையும் நான் தான் கவனித்துக் கொண்டேன். வீட்டு வேலை, சமையல் வேலைகளுக்கிடையே இதையும் செய்ய வேண்டும்.
ஒரு நாளல்ல இரு நாளல்ல, ஐந்து வயதிலிருந்து அவளது, இப்போதைய, 45 வயது வரை செய்திருக்கிறேன். குழந்தை பெற வீட்டுக்கு வந்தவள், திரும்பிப் போகவில்லை. அவளை வேண்டாமென்று சொல்லி விட்டனர், கணவன் வீட்டார். இவளும் போக மறுத்து விட்டாள்.
இன்று, என் பேத்தி, கல்லுாரியில், 'விஸ்காம்' படிக்கிறாள். இதுவரை நான் தான் வளர்த்தேன்.
எங்கள் பெரிய வீட்டை இடித்து, அடுக்கு மாடி கட்டடமாக்கினர். அப்போது, பிற்காலத்தில் அவளுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கருதி, எனக்குத் தர இருந்த வீட்டை அவள் பெயருக்கு, 'ரிஜிஸ்டர்' செய்தேன். என் நகை மற்றும் பணம் அனைத்தும் அவளுக்கே தந்தேன்.
என் கணவர் மறைந்த பின், என்னை வைத்துக் கொள்வதில் மூன்று பெண்களுக்கும் தகராறு.
'அவளுக்கு தானே எல்லாம் கொடுத்தாய். அவளிடமே போ...' என்று, இரு பெண்களும் அனுப்பி விட்டனர்.
இவளோ, 'எனக்கே உடம்பு சரியில்லை. இந்த லட்சணத்தில் உன்னை எங்கே கவனிக்க முடியும்?' என்று விரட்டுகிறாள். என் வயது: 78. இந்த வயதில் நான் என்ன செய்ய... எங்கு போக முடியும்? ஒரு வழி சொல்லுவாயா மகளே!
— இப்படிக்கு,
அன்பு மகள்.
என் பிரிய அம்மாவே —
'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்று அனுபவிக்காமலா கூறினர், நம் முன்னோர். அம்மாக்கள் என்றுமே அப்பாவிகள்; பிள்ளைகள் என்றுமே புத்திசாலிகள் தான். காதலி கேட்டால் என்பதற்காக, தாயின் இதயத்தைக் கொண்டு போன கயவனின் கதையை அறிந்திருப்பீர் அல்லவா?
இன்றைய உலகமும், உறவுகளும் இப்படித்தான் இருக்கிறது. அதனால் தான் வாழும் காலம் வரை நமக்குச் சொந்தமான எதையும் பிரித்துக் கொடுத்து விடக் கூடாது என்கின்றனர்.
உங்களின் சுயநலம் பிடித்த கடைசிப் பெண்ணிடம் பேசுங்கள்.
'நான் உனக்கு பாரமாக இருக்க பிரியப்படவில்லை. ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுகிறேன். அதற்கான கட்டணத்தை நீதான் செலுத்த வேண்டும். என் பெயருக்கு வர வேண்டிய வீட்டைக் கூட உனக்குத் தான், பதிவு பண்ணிக் கொடுத்துள்ளேன். ஆகவே, நீதான் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்...' என்று கூறி, கிளம்பி விடுங்கள்.
முதியோர் இல்லத்தில் என்றால், உங்கள் வயதை ஒத்தவர்கள் இருப்பர்; உங்களைப் போல கை விடப்பட்டவர்கள் இருப்பர். பேச்சுத் துணை கிடைக்கும். வேளா வேளை சாப்பாடு கிடைக்கும். மனது சில நாட்கள் தான் கஷ்டப்படும். பின்னர் சரியாகி விடும்; மனசு பக்குவப்பட்டு விடும்.
யோசியுங்கள் அம்மா... நல்ல முடிவாக எடுங்கள். எனக்கு இது தான் சரி என்றும், நல்ல முடிவாகவும் படுகிறது. இனி, எதிர் காலம் உங்கள் கைகளில்.
— என்றென்றும் அன்புடன்,
சகுந்தலா கோபிநாத்.
