PUBLISHED ON : ஏப் 23, 2023

முனைவர் எஸ்.சந்திரா எழுதிய, 'அறிஞர்கள் வாழ்வில்...' நுாலிலிருந்து:
சார்லி சாப்ளின் நடித்து, இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தபோது, அடுத்ததாக, லெஹர்மேன் என்பவர் இயக்கத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மறுத்தார்.
முதலாளி மேக் சென்னட்டோவிடம் சென்று, 'என்னிடம் ஒரு கதை இருக்கிறது. நானே நடித்து, நானே இயக்க விரும்புகிறேன். அது பெரிய வெற்றிப் படமாக அமையும்...' என, மிகத் தெளிவாக கூறினார்.
முதலில் மறுத்த முதலாளி, பின்னர் சம்மதித்து, 'படம் தோல்வியடைந்தால், தயாரிப்புச் செலவு முழுவதையும் வட்டியோடு திருப்பித் தரவேண்டும்...' என்ற நிபந்தனையும் விதித்தார்.
அதற்கு அஞ்சாமல், தன்னம்பிக்கையுடன், 'என் படம் தோல்வியடைந்தால், நான் உங்களுக்கு முழு பணத்தையும் திருப்பித் தருவதுடன், ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்...' என, பதில் சவால் விடுத்தார், சார்லி சாப்ளின்.
அதன்படி, அவர் நடித்து இயக்கிய, காட் இன் த ரெய்ன் என்ற ஒரு, 'ரீல்' படம், மகத்தான வெற்றி பெற்றது.
'இழப்பதற்கு துணிச்சல் உள்ளவனே, வெற்றி பெறுவதற்கும் தகுதி உடையவன் ஆகிறான்...' என்ற வாசகத்தை நிரூபித்து விட்டார், சார்லி சாப்ளின்.
***
ஒரு பள்ளியில், 'பூமி, உருண்டை வடிவமுடையது என்பதைப் பற்றி, நம் முன்னோர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறதே...' என்று கூறினார், ஒரு ஆசிரியர்.
மற்றொருவர், 'வெள்ளைக்காரன் வந்து தானே, பூமி உருண்டை என்பதை எடுத்துக் காட்ட வேண்டியிருந்தது...' என்றார்.
அவர்கள் பேசுவதைக் கேட்டு, வருத்தப்பட்ட ஒரு மாணவன், நேரே அவர்களிடம் சென்று, 'பூமி உருண்டை என்பது உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நம் முன்னோருக்குத் தெரியும்...' என்று கூறி, சிறிய புத்தகம் ஒன்றைத் திறந்து காட்டினான்.
'இது, இரண்டணா விலை. கோபால கிருஷ்ண கோனார் கடையில் வாங்கியது. இதில், பூமியைப் பற்றி வரும் ஒரு பாட்டில், 'அண்ட கோளம்' என, வருகிறது. அண்டம் என்றால், முட்டை; கோளம் என்றால், உருண்டை. 'ஓவல் ஷேப்' என, ஆங்கிலத்தில் சொல்வதைத்தான், 'அண்ட கோளம்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பாடல் ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பே பாடப்பட்டது...' என்றான், அந்த மாணவன்.
ஆசிரியர்கள், தங்கள் தவறை உணருமாறு செய்த அந்த மாணவன் தான், பின்னாளில், 'தேச பக்தியும், தெய்வ பக்தியும் நம் இரு கண்களாகத் திகழ வேண்டும்...' என, வீர முழக்கமிட்ட, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
***
எஸ்.எஸ்.மாரிசாமி எழுதிய, 'ராஜாஜியுடன் 1000 நாட்கள்' நுாலிலிருந்து:
ராஜாஜி முதல்வராக இருந்த மந்திரி சபையில், கல்வி அமைச்சராக இருந்தவர், டாக்டர் கிருஷ்ணராவ்.
ஒருசமயம், பள்ளிக்கூடம் ஒன்றை திறந்து வைக்க அவரை அழைத்தனர். திறப்பு விழாவிற்கு செல்ல அனுமதி கேட்டு, ராஜாஜியிடம் சென்றார், கிருஷ்ணராவ்.
அவர் சொன்னதையெல்லாம் கேட்டு விட்டு, கடைசியில் அவர் போக அனுமதி தரவில்லை, ராஜாஜி.
அவர் அனுமதிக்காததற்கு காரணம், டாக்டர் கிருஷ்ணராவுக்கு முதலில் புரியவில்லை,
அப்போது ராஜாஜி, 'உங்களுக்கு பதில், அதே ஊரைச் சேர்ந்த யாராவது ஒரு பெரிய மனிதர் அந்தப் பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தால், ஏதாவது ஒரு பெருந்தொகையை நன்கொடையாக கொடுப்பார்.
'மேலும், தான் திறந்து வைத்த பள்ளியாயிற்றே என்று, அதன் வளர்ச்சிக்கும் அவ்வப்போது உதவுவார். ஒரு மந்திரியால் அவ்வாறு உதவ முடியுமா?' என்றார்.
***
நடுத்தெரு நாராயணன்
