தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூலை 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாம்பிகை அண்ணாதுரை எழுதிய, 'படித்ததில் சுவைத்தது!' நுாலிலிருந்து:

ஒருசமயம், பள்ளி விழா ஒன்றுக்கு சென்றிருந்தார், லால்பகதுார் சாஸ்திரி.

'மைக்' முன் நின்று, 'எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று, இங்கே அழைத்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா...' என்று கேட்டார்.

'தெரியும் தெரியும்...' என, ஒரே சமயத்தில் பல குரல்கள் ஒலித்தன.

'எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்...' என்றார்.

'நீங்கள், இந்த நாட்டின் பிரதம மந்திரி. அதனால், அழைத்திருக்கின்றனர்...' என்றனர்.

அவர் சிரித்தவாறு, 'அது ஒரு காரணம். ஆனால், இன்னொரு காரணம், நானும் உங்களைப் போல் குட்டையாக மெலிந்து, சிறு பையனை போல் காட்சி தருகிறேன். அந்த தகுதியில் என்னை அழைத்திருக்கலாம்.

'ஆனால், ஒன்று, நான் குள்ளமாக இருந்தபோதும், இந்நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்துள்ளேன். அதுபோல நீங்களும் உயர வேண்டும்; இந்த நாட்டையும் உயர்த்த வேண்டும்...' என்றார், சாஸ்திரி.

***

ஒருமுறை, விவேகானந்தரை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார், அமெரிக்க நாட்டு பெண்மணி.

அவர், விவேகானந்தரிடம், பரம்பொருளை பற்றி பேச ஆரம்பித்தார்.

'இறைவன் எல்லை கடந்தவர்; அருவமாகிய அப்பரம்பொருளுக்கு இந்தியாவில் உருவம் வைத்து வழிபடுகின்றனர். இதை எப்படி ஏற்றுக் கொள்வது...' என்று கேட்டார்.

அப்பெண்மணியின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த முதியவரின் ஓவியத்தை காட்டி, 'இது யார்...' என்று கேட்டார், விவேகானந்தர்.

'அது என் தந்தையார்...' என்று பதில் கூறினாள், அப்பெண்மணி.

'வெறும் மரத்தாலான சட்டமும், வண்ணங்களை கொண்டு எழுதப்பட்ட ஓவியம் தானே அது. உயிரற்ற இந்த ஓவியம் எப்படி உன் தந்தையாக இருக்க முடியும்...' என்றார், விவேகானந்தர்.

'இது, என் தந்தை அல்ல; தந்தையை நினைப்பூட்டுகிற ஓர் அடையாளம் அல்லவா...' என்றார், அப்பெண்.

'அதுபோலத் தான் எங்கள் நாட்டில் உள்ள விக்கிரகங்களும் இறைவனை நினைப்பூட்டுகிற, மனதில் நிலை நிறுத்துகிற அடையாளங்கள்...' என்றார், விவேகானந்தர்.

அதை ஒப்புக்கொண்டார், அப்பெண்மணி.

***

இப்படிப்பட்டவர் உண்டா என்று கேள்வி எழுப்பினால், உண்டு என்பதே பதில்.

இந்திய பழங்கதை:

சிறு குடிசை, ஒரு தாய், குழந்தை ஒன்றை இடுப்பில் சுமந்தபடி, கொஞ்சம் வளர்ந்த பிள்ளை ஒன்றுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கிறாள். சாலையில் பெருங்கூச்சல் கேட்கிறது.

கொள்ளையர் படையுடன் ஈவு இரக்கமின்றி, எதிர்ப்பட்ட எல்லாரையும் வெட்டிக் கொன்று வெறி பிடித்தவனாய் வருகிறான், கொடுங்கோல் மன்னன். இதைக் கேட்ட மக்கள், பதுங்கி ஒதுங்கி, ஓடி ஒளிகின்றனர்.

அச்சமடைந்த தாய், இடுப்பில் பிள்ளையை ஒடுக்கியபடி, உணவருந்திய பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

பகைவர் அருகில் வரவே, ஒரு குழந்தையை வீசி விட்டு, ஒரு குழந்தையுடன் ஓடினாள்.

அவளை பிடித்து, 'ஏன் ஒரு குழந்தையை மட்டும் துாக்கிக் கொண்டு ஓடினாய்...' என்று கேட்டான், கொடுங்கோலன்.

'நான் வீசி விட்டு வந்தது, என் குழந்தை. இந்த குழந்தையை பக்கத்து வீட்டு பெண், பார்த்துக் கொள்ளுமாறு, அடைக்கலமாக கொடுத்தாள். அடைக்கல பொருளை காக்கவே இக்குழந்தையுடன் ஓடினேன்...' என்றாள்.

'தருமத்தில் நாட்டமுடைய இந்த மக்களை, நாம் அடக்கியாள முடியாது...' என்று கருதி, படையெடுப்பை நிறுத்தி விட்டு போய் விட்டான்.

இவன், செங்கிஸ்தான் என்றும், தைமூர் என்றும் வரலாறு பேசுகிறது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us