தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 37 வயது ஆண். தனியார் நிறுவன பணி. எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. தங்கை குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும், அவர்கள் அதை அனுசரித்து வாழ்கின்றனர்.

ஆனால், என் தம்பி விஷயம் அப்படியில்லை. 10வது வரை தான் படித்தான், தம்பி. எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டான். ஒரு நிறுவனத்தில், மாதம், 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான்.

தம்பிக்கு, 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. நாங்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் போகும் சபையில் சொல்லி வைத்து, சபையின் போதகர் தேர்ந்தெடுத்து, பெற்றோர், உறவினர் சம்மதத்தோடு தம்பியின் திருமணம் நடந்தது. ஆனால், அவர்கள் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இல்லை.

திருமணத்துக்கு நகைகள் எதுவும் போடாமல், இரண்டு லட்சம் பணம் கொடுத்து, வீடு ஒன்றை லீசுக்கு எடுத்து கொடுத்தனர், பெண் வீட்டினர். அந்த வீட்டில், தம்பியும், அவன் மனைவியும் குடியேறினர்.

அந்த பெண், அம்மா செல்லமாம்; அம்மாவை பிரிந்தே இருக்காதாம். இரவு துாங்கும்போது கூட அம்மாவுடன் தான் துாங்குமாம். பெண்ணுக்கு திருமணத்தில் ஈடுபாடு இருந்த மாதிரியே தெரியவில்லை.

தனக்கு திருமணமாகி, கணவர், மாமியார், நாத்தனார் உள்ளதும், உறவுகளை பற்றியும் அப்பெண்ணுக்கு தெரியவில்லை. அவளது அம்மா என்ன சொன்னாலும், அதை செய்து விடுவாள்.

வீட்டு வேலைகள் எதுவும் செய்வதில்லை. சரியாக சாப்பிட மாட்டாள். மாறாக, நொறுக்கு தீனி நன்றாக சாப்பிடுவாள்.

அப்பெண்ணின் நடவடிக்கையில் திருப்தி இல்லாததால், ஒருமுறை அவளின் அம்மாவை அழைத்து, 'உங்கள் மகளுக்கு மன மற்றும் உடல் ரீதியாக ஏதோ பிரச்னை உள்ளது. நாம் மருத்துவரை பார்ப்போம்...' என்று கேட்டோம்.

'அடுத்த மாதம் செல்வோம்...' என்று சொன்னார்.

ஒரு மாதம் கழித்து கேட்கும்போது, 'இரண்டு மாதம் போகட்டும்...' என்று சொல்லியே, எட்டு மாதங்களாக மருத்துவமனை வர தாமதம் செய்தபடி இருந்தனர்.

அதன்பின், என் தம்பி, ஒரு நாளை தேர்ந்தெடுத்து, 'இந்த நாளில் நாம் இருவரும் மருத்துவரை பார்க்க போகிறோம். நீ வரவில்லையென்றால் வலுக்கட்டாயமாக உன்னை அழைத்துச் செல்ல நேரிடும்...' என்று, தீர்க்கமாக கூறி விட்டான்.

உடனே, அவளின் அம்மாவை வரவழைத்தாள், அப்பெண். என்னையும், என் மாமாவையும் வரவழைத்தான், தம்பி.

நாங்கள் எல்லாரும் போய், 'மருத்துவமனைக்கு போவோம் வா...' என்று அழைத்தோம்.

'என் மகள் மருத்துவமனைக்கு வரமாட்டாள். அவளுக்கு எந்த குறையும் இல்லை. என் மகள், இதன் பிறகும் இங்கே இருக்க மாட்டாள்...' என்று சொல்லி, மகளின் துணிகள், திருமண சான்று, கல்வி சான்று என, எல்லாவற்றையும் எடுத்து, கிளம்பி விட்டார், அவளது அம்மா.

சில மாதங்களுக்கு பின் வருவார் என்று காத்திருந்தோம். வரவில்லை. எங்களுக்கும் நேரில் போக விருப்பமில்லை. ஏழு ஆண்டுகள் ஆனது. அதன்பின், விவாகரத்து பற்றி பேச, வக்கீலை பார்த்தோம்.

'திருமண சான்று கண்டிப்பாக வேண்டும். அது இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது...' என்று கூறி விட்டார்.

திருமணம் நடந்த சபையில் ஒன்று இருக்கும். ஆனால், அவர்கள் அதை தரமாட்டார்கள். மற்றொன்று, தம்பி மாமியார் வசம் உள்ளது.

* திருமண சான்று இல்லாமல் விவாகரத்து செய்ய முடியுமா?

* இவர்கள் பிரிந்தே ஏழு ஆண்டுகள் ஆகிறது. இதுவே போதுமா, இதை தவிர்த்து சட்டப்படி என்ன வழிமுறைகள் இருக்கிறது.

தாங்கள் தான் என் தம்பி வாழ்வுக்கு நல்வழி காட்ட வேண்டும்.

இப்படிக்கு

ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகர்


அன்பு மகனுக்கு —

உன் தம்பி மனைவிக்கு, மனநோய் இருக்க வாய்ப்பிருக்கிறது. தவிர, 'ஹைபோ கோனடிஸம்' என்ற பருவமடைவதில் தாமதம் என்ற உடல் பிரச்னையும் இருக்கலாம். முழு உடல், மன பரிசோதனை செய்தால், மருத்துவ உண்மைகள் அப்பட்டமாகும்.

உங்கள் குடும்பத்தாருக்கும் நீங்கள் சார்ந்திருக்கும் திருச்சபைக்கும் இடையே உறவுமுறை சீராக, சுமூகமாக தானே இருக்கிறது? வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பிரார்த்தனை கூட்டத்துக்கு போய் வருகிறீர்கள் தானே?

திருச்சபைக்கு மாதா மாதம் உரிய சந்தாத்தொகை கட்டுகிறீர்களா? திருச்சபையில் பெண் வீட்டார் உங்கள் மீது எதாவது எழுத்துப்பூர்வ புகார் கொடுத்துள்ளனரா?

திருமண சான்று நகல் பெறுவது, மிக சிரமமான காரியம் இல்லை. இந்திய கிறிஸ்துவ திருமண சட்டம், 1872 பிரிவு 5ன் படி, கிறிஸ்துவ திருமணங்களை தகுதியுள்ள குருமார்களோ அல்லது அரசு உரிமம் பெற்ற நபர்களோ நடத்தி, திருமணத்தை பதிவேட்டில் பதிவு செய்வர்.

நீங்களே, உங்கள் திருச்சபையில் எழுத்துப்பூர்வ விண்ணப்பம் அளித்து, திருமண நகல் சான்று பெறலாம் அல்லது திருமண சான்று ஆவணங்கள் பதிவு துறை தலைவர் அலுவலகத்தில் இருக்கும்.

ஒன்பது மண்டலங்களில் உள்ள துணை பதிவுத்துறை தலைவர்கள் அலுவலகத்தில் வழக்கறிஞர் துணையுடன் விண்ணப்பித்து, திருமண பதிவு நகல் பெறலாம்.

*   தம்பிக்கும், தம்பி மனைவிக்கும் இடையே விவாகரத்து பெற, ஏழு ஆண்டுகள் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு ஆண்டுகள் பிரிந்திருந்தாலே போதுமானது.

பிரிந்த இந்த ஏழு ஆண்டுகளில் தம்பி மனைவி, பெற்றோர் வீட்டில் என்ன செய்கிறாள்? படிக்கிறாளா, எதாவது ஒரு வேலைக்கு போகிறாளா அல்லது வீட்டிலேயே இருந்து ரகசியமாக மருத்துவம் பார்த்துக் கொள்கிறாளா?

பிரிந்திருந்த ஏழு ஆண்டுகளில் போதிய மனப்பக்குவம் பெற்று, கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறாளா? நம்பிக்கையான உளவாளியை விட்டு, தம்பி மனைவி பற்றி தற்போதைய நிலை பற்றி முழுமையாக அறிய முயற்சி செய்

* உன் தம்பியின் அந்தரங்க நடவடிக்கைகளில் எதாவது கறுப்பு பக்கம் உண்டா என்பதையும் பார். உங்கள் குடும்பத்தினரின் வேண்டாத செயல்கள், தம்பி மனைவிக்கு பிடிக்காமல் போய் விட்டதா என, யோசியுங்கள். விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் முன், பெண் வீட்டாரிடம் கடைசி முறையாக பேசி பார். தம்பியும், தம்பி மனைவியும் சேர்ந்து வாழ, 1 சதவீத சாத்தியம் இருந்தாலும் அதை நிறைவேற்ற பார்

* தம்பி மனைவி வீட்டாருக்கும், விவாகரத்து வாங்குவதில் ஆர்வம் இருந்தால், அவர்களுடன் அமைதியாக பேசி, பரஸ்பர உடன்பாட்டுடன் விவாகரத்து கோரலாம். குற்றச்சாட்டுகளை அள்ளி வீசாமல் அமைதியாக விவாகரத்து பெற்று, அவரவர் வழியில் போகலாம்.

விவாகரத்துக்கு பிறகு, தம்பி மனைவியின் எதிர்காலம் சிறப்பாக அமைய, கர்த்தரிடம் பிரார்த்தனை செய். தம்பிக்கு மறுமணம் செய்யும்போது கவனமாக செயல்படு.

என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us