தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெயகாந்தன் எழுதுகிறார்: 'என் குடும்பத்தில் என் தந்தையோ, அவரது சகோதரர்களோ, யாருமே குடிப்பழக்கம் உள்ளவர்கள் அல்ல. அந்த காலத்தில், குடிப்பது சட்ட விரோதமும் அல்ல. சட்ட பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், குடிக்காமல் இருந்தும் கூட, எங்கள் குடும்பம் நிர்மூலமாக ஆனதற்கு, என் தந்தையே காரணமாக இருந்தார்.

பரஸ்பரம் சகோதரர்களிடையே நிலவிய பகைமையினாலும், அறியாமையால் விளைகிற ஆத்திரத்தாலும், கோபத்தாலும், என் செல்வந்த குடும்பம், சிறுகச் சிறுக அழிந்து சிதைந்ததை, நான் நேரில் கண்டேன். விபசாரத்தாலும், குடியினாலும் குடும்பம் அழிகிற மாதிரி, கோபத்தால் அழிந்த குடும்பங்கள் எத்தனை? எனவே, கோபிக்கக் கூடாது என்றொரு சட்டம் போட்டால், எப்படி இருக்கும் என்று நான் காரணத்தோடு நினைப்பது எவ்வளவு நகைப்புக்குரியது. அது மிகவும், 'சப்ஜக்டிவ் அப்ரோச்' அல்லவா?

இந்த பிரச்னைகளை வேறொரு கோணத்திலிருந்து அணுக வேண்டும். ஏனெனில், நெறிகளும், தர்மங்களும்,

நல்லொழுக்கங்களும் சட்டத்தின் நுனியில் மட்டும் நிற்பன அல்ல. எல்லா மக்களும் விபசாரத்தில் ஈடுபட்டிருப்பதன் காரணம், விபசாரம் தடை செய்யப்பட்டிருப்பதால், மட்டும் தானா?

எல்லாரும் குடிக்காமல் இருப்பது, மதுவிலக்குச் சட்டத்தால் தானா? இல்லை... அவரவர் பண்பால்.

இப்போது, நான் பெரிய மனிதர்கள் தரும் விருந்துகள், விழாக்கள் முதலியவற்றில் கலந்து கொள்கிறேன். அங்கேயெல்லாம், குடிப்பது எவ்வளவு நாகரிகமாக, ஒரு மரபுடன் நடக்கிறது! இப்படியும் சில நெறிமுறைகளை கடைப்பிடிப்பதுதான், எதிலுமே முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது. ஜீவகாருண்யம் சிறந்தது தான். இதற்காக, கசாப்புக் கடைகளை தடை செய்யவில்லை என்பதால், கண்ட இடங்களிலும், கோவில்களிலும், கசாப்புக் கடையை அனுமதிக்கலாகாது. நெறிகளும், முறைகளும் எதற்கும் தேவையாகிறது. அது இல்லாத போது, அழிவும், அனர்த்தமும் நேரிடுகின்றன!

***

வ. உ.சிதம்பரம் பிள்ளை, இந்த கதையை, தன் நண்பர் மாசிலாமணிப் பிள்ளையிடம் கூறினார்...

ஒரு நாள் காலை, கம்பர் எழுந்து உலாவச் சென்றார். வழியில், ஒரு வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. அந்த அழுகையின் ஊடே, ஒப்பாரியாக, 'சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், அவள் வாயினின்று வெளிக் கிளம்பியதும், அடுத்த வார்த்தை வெளி வராதவாறு, அவள் வாயை யாரோ பொத்தி, அழுகையை அடக்கி விட்டனர்.

அதை அறிந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர், 'சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், கவிச்சுவை பொருந்தியதாக இருந்ததால், அதன்பின், அவள் சொல்ல விரும்பியது எதுவாக இருக்கும் என்பதை அறிய, ஆவல் கொண்டார். ஆனால், அவரது கற்பனைக்கு அது எட்டவில்லை. அக்கம் பக்கத்து வீட்டார்களை அணுகி, அதைத் தெரிந்து கொள்ள என்ன செய்யலாம் என்று கேட்டார்.

அவர்கள், 'அந்த அழுகுரல், சமீபத்தில், தன் கணவனை இழந்த இளம் விதவையினுடையது. கணவனை இழந்த பெண்கள், அதிகாலையில் விழித்தெழுந்து அழுது வருவது வழக்கம். அவ்வாறு அழுவதை நிறுத்துவது, அவர்களது பக்கத்திலிருக்கும் வயதான பெண்களின் கடமை...' எனத் தெரிவித்தனர்.

மறுதினமும், அதிகாலையில் அங்கே சென்று, அந்த வீட்டின் தெருத் திண்ணையில் தங்கியிருந்தார் கம்பர். வழக்கம் போல் அழுகைக் குரல், ஒப்பாரி ஓசையுடன் வெளிக் கிளம்பிற்று. அதிர்ஷ்ட வசமாக, பெண்ணின் வாயைப் பொத்த, ஆட்கள் சற்றுப் பின் தங்கி வர நேரிட்டது. எனவே, அந்த விதவைப் பெண் ஒப்பாரியில், 'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...' என்று பெருமூச்செறித்து புலம்பி அழுதாள்.

இந்தக் கதையைச் சொன்னபோது, வ.உ.சி.,யின் கண்களில் நீர் தளும்பியது.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us