sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பத்மாவதி!

/

பத்மாவதி!

பத்மாவதி!

பத்மாவதி!


PUBLISHED ON : டிச 27, 2020

Google News

PUBLISHED ON : டிச 27, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''முடிவாக சொல்கிறேன், அத்தையை அழைத்து கொண்டு இந்த வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம். நீங்கள் இருவரும் இங்கு வந்து, என்னால் அவமானப்படுவதாக சொல்கிறீர்கள். என்னால் அப்படித்தான் நடக்க முடியும்.

''உங்கள் இருவரிடமும் நான் பேசுவதோ, பேசாமல் இருப்பதோ என் விருப்பம். இங்கு அடிக்கடி வந்து, இந்த மாதிரி புகார் சொல்வதை இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது,'' என்று, மருமகள் உமா சொல்வதை, திகைப்புடன் பார்த்தார், கிருஷ்ணமூர்த்தி; மாநில அரசு துறையில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவர்.

நல்லவேளை, மனைவி பத்மா, அன்று வரவில்லை; மகன் மகேஷும் அந்த நேரத்தில் இல்லை. இப்போதும் காதுகளில் அந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அறிவு ஏற்றுக்கொண்டாலும், மனது ஏற்க மறுக்கிறது. பேரனும், பேத்தியும் அவரையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒன்றும் பேசாமல் மகன் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

மகனும், மருமகளும் தங்கள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழட்டும் என்று எண்ணித்தானே, ஒரே ஊர் என்றாலும், நானும், மனைவி பத்மாவும், 10 கி.மீ., துாரத்தில் இருக்கிறோம்.

இந்த செய்தியை, பத்மாவிடம் எப்படி சொல்வேன்... கேட்டதும் அவளால் தாங்க முடியுமா... எப்படியெல்லாம் வளர்த்த அருமையான பிள்ளை வீட்டுக்கு இனி, நானும், பத்மாவும் ஆயுள் முழுவதும் போகவே முடியாதா... இறைவா, இது என்ன சோதனை?

மருமகளின் வார்த்தைகளை கேட்டதும், உயிரை விட்டு விடலாம் என்று தோன்றுகிறது. நான் இந்த உலகை விட்டு போய் விட்டால், பத்மா அனாதையாகி விடுவாளே... இந்த ஒரு காரணத்திற்காகவாவது இன்னும் சிறிது காலம், நான் உயிருடன் இருந்தாக வேண்டும்.

வயதான நபர்களுக்கு பொதுவாக வரும் எல்லாவிதமான உடல் பிரச்னைகளுடன் வாழ்ந்து வருகிறாள், பத்மா. தேவைப்படும்போதெல்லாம், அவளை மருத்துவரிடம் நான் தான் அழைத்துச் செல்கிறேன். 'பென்ஷன்' வருகிறது. பென்ஷனும் இல்லையென்றால், யார் மதிப்பர்...

பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையை, இன்று வரை, எனக்கும், மனைவிக்கும் இறைவன் கொடுக்கவில்லை. நானும், அவளும், மகன் வீட்டுக்கு வரும்போதெல்லாம், கடந்த சில ஆண்டுகளாக, மருமகள் எங்களை அவமானப்படுத்துவது போல நடந்து கொள்கிறாள் என்று, சில சமயங்களில் மகேஷ் சொல்வதுண்டு.

நானும், பத்மாவும் அப்படியென்ன தவறு செய்து விட்டோம்... காரணம் தான் தெரியவில்லையே என, வருந்தினார், கிருஷ்ணமூர்த்தி.

தலை சுற்றுவது போலிருக்கவே, காபி சாப்பிடலாம் என்று, அருகில் இருந்த ஓட்டலில் காரை நிறுத்தி இறங்கினார்.

''கிருஷ்ணா, என்ன இந்த நேரத்தில் இங்கே... என்ன, ஒரு மாதிரியாக இருக்கிறாய்,'' என்று, நீண்ட நாள் நண்பன் ஜெயராமன் கேட்டதும், அவரது கண்கள் கலங்கின.

உடனே, ''இப்போது ஒன்றும் சொல்ல வேண்டாம். முதலில் காரில் ஏறு...'' என்று, அன்பு கட்டளையிட்டு, தன் மனைவி ஜானகியிடம், மொபைல் போனில், ''நம் வீட்டுக்கு நண்பர் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து வருகிறேன். முதலில் காபி, அப்புறம் சாப்பாடு தயார் பண்ணி வை,'' என்றார், ஜெயராமன்.

ஜெயராமனுடைய வீடு நோக்கி சென்றது, கார்.

கிருஷ்ணமூர்த்தியும், ஜெயராமனும் பள்ளி நாட்களிலேயே தோழர்கள். அதாவது, 60 ஆண்டுகளாக பழக்கம்.

கிருஷ்ணமூர்த்தி குடும்பம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் ஜெயராமனுக்கும், அவர் மனைவி ஜானகிக்கும் தெரியும். அவர்களுக்கு, ஆண் ஒன்று, பெண் ஒன்று, என, இரு குழந்தைகள். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

'பெண் குழந்தையை பெற்றவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்...' என்று, அடிக்கடி சொல்வாள், பத்மா.

''வாருங்கள் அண்ணா... அண்ணி எப்படியிருக்கிறார்... ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்...'' என்று, கேள்விகளை அடுக்கி, வரவேற்றாள், ஜானகி.

''என்ன ஜானகி... வீட்டுக்கு வந்தவரிடம் இப்படியா கேள்வி மேல் கேட்டு தொந்தரவு செய்வாய். கிருஷ்ணா முதலில் உள்ளே வந்து, சிறிது ஓய்வெடுக்கட்டும்; எல்லாரும் சாப்பிட்ட பின் மெதுவாக பேசலாம்,'' என்றார், ஜெயராமன்.

'மகேஷ் வீட்டுக்கு போகிறீர்கள், மதிய உணவை அங்கு சாப்பிட்டு விடுங்கள்...' என்று, பத்மா சொன்னதை நினைத்து, ''இன்று இங்கு தான் சாப்பிட போகிறேன்,'' என்றார், கிருஷ்ணமூர்த்தி.

''இதோ, முதலில் காபி. அடுத்த அரை மணி நேரத்தில், சாப்பாடு தயாராகி விடும். எல்லாரும் சாப்பிடலாம். அதற்குள் நீங்கள் இருவரும் முகம், கை, கால் கழுவி வாருங்கள்,'' என்றாள், ஜானகி.

மூவரும் அமர்ந்து உணவருந்திய பின், வரவேற்பறை சோபாவில் அமர்ந்தனர்.

''கிருஷ்ணா, இப்போது சொல், என்ன பிரச்னை, என்னவாயிற்று... ஏன் இப்படி இருக்கிறாய்?'' என்றார், ஜெயராமன்.

கிருஷ்ணமூர்த்திக்கு அழுகையே வந்து விட்டது. கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

'என்ன இது, குழந்தை மாதிரி கண்ணீர் சிந்தாதீர்... என்ன நடந்தது என்று சொல்லுங்கள்...' என்றனர், ஜெயராமனும், ஜானகியும்.

மகன் வீட்டில் நடந்தவற்றை விபரமாக சொன்னார்; அவர்களால் நம்ப முடியவில்லை.

''உமாவா இப்படி சொன்னாள்... அத்தையை அழைத்து இனி இந்த வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொல்லியிருக்க கூடாது. அதன் பின்விளைவுகளை அவள் யோசித்துப் பார்த்தாளா...

''நீங்கள் இருவரும் வர முடியாத வீட்டுக்கு, உங்களது மற்ற இரு மகன்கள் மற்றும் உங்கள் சம்பந்தப்பட்ட உறவினர்கள் இனி வருவரா... எல்லாருக்கும் தெரிந்தால், மகேஷுக்கும், எவ்வளவு பெரிய அவமானம்,'' என்றாள், ஜானகி.

''முகத்தை கடுமையாக வைத்து படபடவென்று பேசி விட்டாள், உமா...'' என்றார்.

''எப்படி ஒரு சராசரி பெண்ணால் இதுபோல நடந்துகொள்ள முடிகிறது. நல்லாத்தானே இருந்தாள், உமா. திடீரென்று என்னவாயிற்று, அண்ணா... 10 ஆண்டுகளுக்கு முன், நாம் எல்லாரும் போய், இந்த உமாவை பெண் பார்க்க சென்றோம். எவ்வளவு பவ்யமாக, நாசூக்காக நடந்து கொண்டாள்.

''அன்று பார்த்த உமா, இன்று இப்படி நடந்து கொண்டாள் என்று, நீங்கள் சொல்லும்போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது; நம்ப முடியவில்லை,'' என்றாள் ஜானகி.

''கிருஷ்ணா, உன் மனைவியிடம் என்ன சொல்லப் போகிறாய்... இன்றே சொல்லப் போகிறாயா, இல்லை சில நாட்களுக்கு பின் சொல்லலாம் என்று நினைக்கிறாயா,'' என்றார், ஜெயராமன்.

''ஜெயராமா, உமா சொன்ன வார்த்தைகளை சொல்லி, பத்மாவின் மனம் பாதிப்படைய நான் விரும்பவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை, நீங்கள் இருவரும் தான் சொல்ல வேண்டும். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை,'' என்றார், கிருஷ்ணமூர்த்தி.

''என்ன அண்ணா சொன்னீர்கள்... பத்மாவுடைய மனம் பாதிப்படையக் கூடாது என்று, நீங்கள் நினைக்கிறீர்களா... வேடிக்கையாக இல்லை. அண்ணா என்று உங்களை அழைக்கும் உரிமையுடன், சில விஷயங்களை வெளிப்படையாக சொல்கிறேன்,'' என்ற ஜானகி தொடர்ந்தாள்...

''பத்மாவுடைய, 16 வயதில், 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு ஒரு வாரம் முன், அவளுடைய அம்மா மஞ்சள் காமாலை நோயால் இறந்து விட்டார். சின்ன வயது என்பதாலும், அம்மா இறந்த அதிர்ச்சியில், காய்ச்சலால் சிரமப்பட்டு, தேர்வு எழுதி, 'பாஸ்' பண்ணி விட்டாள். 16 வயதில், பெற்ற தாயை பிரிந்தபோது, அவளுடைய மனது, முதன் முதலாக பாதிக்கப்பட்டது.

''பத்மாவுடன் கூட பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்தனர். அம்மா இறந்த ஒரு ஆண்டுக்குள், பத்மாவின் பாட்டி, அவள் அப்பாவுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சியால், இரண்டாவது முறையாக, அவளது மனது பாதிக்கப்பட்டது.

''இதெல்லாம், பத்மாவின் திருமணத்திற்கு முன் நடந்த விஷயங்கள். உங்களுக்கும் தெரியும் என்று எண்ணுகிறேன். திருமணமாகி, பத்மா புகுந்த வீடு, மாடியில் அமைந்திருந்தது. வீட்டில் மின்சாரம், தண்ணீர் வசதிகள் எதுவும் கிடையாது.

''கீழே இருந்த அடி பம்பிலிருந்து தண்ணீர் அடித்து எடுத்து வரவேண்டும். ஐந்து ஆண்டுகள் இந்த வீட்டில் தான் வாழ்ந்தாள், பத்மா.

''இதில் நோய்வாய்பட்ட மாமியார், கோபக்கார மாமனார், எந்தவிதமான ஆதரவுகளும் தராத நாத்தனார்கள். தன் கணவருடன் பேசுவதையோ, வெளியூர் செல்வதையோ கொஞ்சமும் விரும்பாத கணவரின் உறவினர்கள் என்று, வாழ்க்கை அமைந்ததில், மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்டது, பத்மாவின் மனம்.

''நாத்தனார்கள் ஏதோ சொல்லிக் கொடுத்ததால், முதன் முறையாக வீட்டுக்கு வந்த, தன் மேல் அதிக பிரியம் கொண்டிருந்த பாட்டியிடம், கணவர் சரியாக பேசாததால், உடனே அவர் ஊருக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. சில மாதங்களில் பாட்டி இறந்தபோது, தான் அனாதையாகி விட்டோம் என்று எண்ணிய பத்மாவின் மனம், நான்காவது முறையாக பாதிக்கப்பட்டது.

''அமெரிக்காவில் வசிக்கும் இரண்டாவது மகன் வீட்டுக்கு சென்றபோது, மருமகள் நடந்து கொண்ட விதத்தில், ஐந்தாவது முறையாக பாதிக்கப்பட்டது.

''இந்தியா வந்தவுடன், சம்பந்தியிடம், அமெரிக்காவில் நடந்த கொடுமைகளை சொல்லியும், அவர்கள் அலட்சியமாக இருந்தது, பிற்காலத்தில் தீராத விரோதமாகியது. மகன் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்று நினைக்கும் சந்தர்ப்பத்தில், பத்மாவின் மனம், ஆறாவது முறையாக பாதிக்கப்பட்டது,'' என்ற ஜானகி, பேச்சை நிறுத்தி, காபி எடுத்து வர சமையலறை சென்றாள்.

''என்ன கிருஷ்ணா, ஒன்றும் பேசாமல் இருக்கிறாய்... எனக்கு மறதி அதிகம். ஜானகி சொல்வதெல்லாம் உண்மையா,'' என்றார், ஜெயராமன்.

''ஜெயராமா... ஜானகி சொல்வதெல்லாம் உண்மை தான். எங்கள் திருமணம் முடிந்து, இல்வாழ்க்கை துவங்கும்போது, நானும் பல சந்தர்பங்களில் கவனக்குறைவாக இருந்து விட்டேனோ என்று, எனக்கு இப்போது குற்ற உணர்வு மேலோங்குகிறது,'' என்றார்.

காபியை தந்தபடியே, ''அண்ணா, இதுவரை நான் சொன்னதெல்லாம் சரிதானா, இல்லையா?'' என்றாள், ஜானகி.

மவுனமாக தலையசைத்தார், கிருஷ்ணமூர்த்தி. அவரது கண்கள் கலங்கின. பரிதாபமாக, நண்பன் ஜெயராமனை பார்த்தார்.

நண்பனின் தோளை தட்டிக் கொடுத்து, கண்களாலேயே ஆறுதல் சொன்னார், ஜெயராமன்.

''ஜெயராமா, ஜானகி நீங்கள் இருவரும் இதுவரை சொன்னது, நுாற்றுக்கு நுாறு உண்மை. என்ன இருந்தாலும், எந்த தவறும் செய்யாத பத்மாவுக்கு ஏன் இறைவன் இந்த தண்டனை கொடுக்கிறார் என்று புரியவில்லை.

''பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம், ஒரு பெண்ணின் மனதில் இருக்கும்போது, வீட்டுக்கு வந்த மருமகள்கள், பத்மாவை அம்மாவாக நினைக்க வேண்டாம், தன்னைப் போல ஒரு பெண், அவளுக்கும் மனது என்ற ஒன்று உண்டு. அவள் மனம் சங்கடப்படுவது போல் நடந்து கொள்ளக் கூடாது என்று, ஏன் நினைப்பதில்லை, எனக்கு புரியவில்லை...

''எங்கள் மகன்கள், தங்கள் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழட்டும் என்ற முடிவுடன், நாங்கள் இருவரும் துாரத்திலிருந்து பார்க்கத்தானே விரும்புகிறோம்.

''அந்த எண்ணத்தில்தானே, முதுமை காலத்திலும் நாங்கள் தனியாக வாழ்ந்து வருகிறோம். ஏன், எங்கள் இருவரையும் இறைவன் இப்படி சோதிக்கிறார். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று, நீங்கள் இருவரும் எதிர்பார்க்கிறீர்கள்,'' என்று கேட்டார், கிருஷ்ணமூர்த்தி.

''அண்ணா, எதை நினைத்தும் நீங்கள் வருத்தப்படாதீர்கள். எங்களுக்கு நன்றாக தெரியும். அண்ணியை விட, எப்போதும் நீங்கள் தான், எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அதிகமாக வருந்துவீர்கள்; மன வேதனைப்படுவீர்கள். முதலில் உங்கள் மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள்.

''இப்போது உங்கள் வீட்டுக்கு போய், உமா சொன்னதை அண்ணியிடம் அப்படியே சொல்லுங்கள். அண்ணி என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்து, நாம் எல்லாரும் காத்திருப்போம்,'' என்றாள், ஜானகி.

ஓரளவு மனம் நிம்மதியடைந்தது போல தெரிந்தது, கிருஷ்ணமூர்த்திக்கு. சிந்தனைகளுடன் வீட்டின் முன் வந்து நின்றார். கதவு திறந்ததும், சிறிது தயக்கத்துடன், பத்மாவை பார்த்து புன்னகைத்தார்.

''என்னங்க, ஒரு மாதிரி இருக்கீங்க... மருமகள் ஏதாவது சொன்னாளா,'' என்றாள், பத்மா.

''நம் மருமகள் உமா, 'உன்னை அழைத்து எங்க வீட்டுக்கு இனிமேல் வராதீங்க'ன்னு, சொல்லி விட்டாள்,'' என்றபோது அழுது விட்டார்.

அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும், கண்ணீரையும் மறைத்து, ''என்னங்க, இப்ப என்ன நடந்து விட்டது. சிறு குழந்தை மாதிரி... இதற்கெல்லாம் ஒரு ஆண் அழலாமா... உங்க பக்கத்தில் நான் இருக்கிறேன்.

''எனக்கு நீங்க இருக்கறீங்க. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துப்பார். கவலைப்படாதீங்க,'' என்றபடி, கைகளை பிடித்த மனைவி பத்மாவை, பெருமையுடன் நிமிர்ந்து பார்த்தார்.

ஆமாம், குடும்ப விஷயங்களில் இந்த பெண்களுக்குண்டான மனப்பக்குவம், ஒரு ஆணுக்கு எப்போது வரப்போகிறது!

கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

படிப்பு: பி.எஸ்சி., - பி.எட்., - சி.ஏ.ஐ.ஐ.பி., கனரா வங்கி - முதுநிலை மேலாளர் (விருப்ப ஓய்வு)

தமிழ், ஆங்கிலம் இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர். சமுதாயப் பிரச்னை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் நகைச்சுவை கதைகள் எழுதுவார். இசை, ஓவியம், சிற்பம் போன்ற கலைகளை ரசிப்பதில் பிரியமுள்ளவர். சிறந்த பேச்சாளர்.






      Dinamalar
      Follow us