தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பேனா மருத்துவமனை!

பேனா மருத்துவமனை!

பேனா மருத்துவமனை!


PUBLISHED ON : ஜூலை 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டா தர்மதலா மெட்ரோ நிலைய கேட் எண் நான்கின் வழியாக வெளியேறும்போது, 'பென் ஹாஸ்பிடல்' - பேனா மருத்துவமனை என்று, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தை பார்க்காமல் இருக்க முடியாது.

விளம்பரத்தின் பழமை மற்றும் அதில் உள்ள எழுத்தின் மங்கிய தன்மையை வைத்து, அது நிச்சயம் பழங்கால மருத்துவமனையாகத்தான் இருக்கும் என்று யூகித்தது சரி தான்.

விளம்பரம் உள்ள சுவருக்கு பக்கத்தில் உள்ள சிறிய கடையில், பேனாவின் நிப்பை ஆபரேஷன் செய்தபடி இருந்தார், ஒருவர். தன் பெயர் இம்தியாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, 'பேனா மருத்துவனையின் கதை, 77 ஆண்டுகள் பாரம்பரியமானது...' என, கடையின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்:

ஒரு காலத்தில் அனைவரும், 'இங்க்' பேனா பிரியர்களாகவே இருந்தனர். குறிப்பாக, எழுத்தாளர்கள், தங்கள் பொக்கிஷமாகவே, 'இங்க்' பேனாக்களை பாதுகாத்தனர்.

80 ஆண்டுகளுக்கு முன், நம் ஊர் பேனா பிரியர்களை சந்தோஷப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து, 'வாட்டர்மேன், ஷெப்பர்ட், பியர் கார்டா' மற்றும் 'வில்சன்' வகை பேனாக்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

அந்தப் பேனாக்கள் கொஞ்சம் விலை கூடுதல் என்றாலும், கொடுத்த காசுக்கு உழைக்கவும் செய்தன. எதற்குமே தேய்மானம் உண்டு தானே... எழுதி எழுதி பேனா நிப்புகளும், மற்ற சில பாகங்களும் பழுதாகிவிடும். ராசி காரணமாக, துாக்கி எறிய மனமில்லாமலும், இந்த பேனாவை மீண்டும் எழுதும் வகையில் உயிர்பித்து தரும்படி கேட்டுக் கொண்டனர், பலர்.

இதுபோன்ற கோரிக்கைகள் வலுக்கவே, இப்போது இங்குள்ள பேனா மருத்துவமனையை, என் தாத்தா முகமது துவங்கினார். அதன்பின் என் அப்பா, கடையை நடத்தினார். நிறைய வாடிக்கையாளர்கள், தங்களது பேனாவிற்கு வைத்தியம் பார்த்து, திருப்தியுடன் சென்றனர்.

வெளிநாட்டு பேனாக்கள் மட்டுமின்றி, உள்நாட்டு பேனாக்களும் சிகிச்சைக்கு வந்து குணம் பெற்று சென்றன. இதையடுத்து, வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த, தந்தையின் வழியில் நானும், என் தம்பி ரியாசும், பேனா மருத்துவர்களானோம்.

காலம் கரைந்தது; தந்தையும், சகோதரனும் காலமாகிவிட, இப்போது நானும், பழைய காலத்து பேனாக்கள் கொஞ்சம் மட்டுமே, கடையில் மிஞ்சியிருக்கிறோம்.

'இங்க்' பேனா கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. ஒரு முறை உபயோகித்துவிட்டு துாக்கி எறியும் பேனாக்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. கம்ப்யூட்டர் வந்த பின், ஒருமுறை எழுதி துாக்கி எறியும் பேனாக்களுக்கும் பெரிதாக மதிப்பில்லை.

'இங்க்' பேனாவில் தான் எழுதுவேன் என்று, இன்னமும் விடாப்பிடியாக உள்ள பழைய காலத்து ஆட்கள் மற்றும் தாத்தா, அப்பா ஞாபகமாக அவர் உபயோகித்த பேனாவிற்கு உயிர் கொடுக்க முடியுமா என கேட்டு வருபவர்களும் தான், இப்போது என் வாடிக்கையாளர்கள்.

இதனால், என் குடும்ப வயிற்று பசியை தீர்க்க முடியாது. மேலும், பழம் பொருள் விரும்பிகள், பழைய காலத்து பேனாவை வாங்க வருவர். அவர்களாலும் தான் காலம் ஓடுகிறது என்றவர், கண்ணில் லென்சை பொருத்தி, பேனா ஆபரேஷனுக்கு தயாரானார்.

எல். முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us