PUBLISHED ON : ஜூலை 17, 2022

முன்கதை சுருக்கம்: தீப்தியிடம் தருண் குறித்த விபரத்தை கேட்டறிந்தார், ஏ.சி.பி., செழியன் -
உதவி போலீஸ் கமிஷனர் செழியனை, ஓர் ஆச்சர்யப் பார்வையால் நனைத்தாள், தீப்தி.
''சார்... தருணுக்கு நான் போன் பண்ணிப் பேசினா, அவர் இருக்கிற இடத்தை உங்களால எப்படி கண்டுபிடிக்க முடியும்?''
''உங்க மொபைல் போன், 'கேலக்ஸி டெல் கம்பெனி'யோடது தானே?''
''ஆமா சார்!''
''உங்க மொபைல் எண்ணை அந்தக் கம்பெனியோட, 'மானிட்டரிங் அண்ட் ட்ராக்கிங் சிஸ்டம்ஸ்'கிட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன். தருணுக்கு போன் பண்ணினா, நீங்க ரெண்டு பேரும் பேசற உரையாடல் எல்லாமே அங்கே பதிவாயிடும். தருண் எங்கே இருக்கார்ங்கிற, 'லொகேஷனும்' தெரிஞ்சுடும்.''
தீப்தி சில விநாடிகள் மவுனமாய் இருந்து, தன் மொபைலை எடுத்து, தருணின் எண்ணைத் தொடர்பு கொண்டாள். நீண்ட, 'டயல்டோனு'க்குப் பிறகே, இணைப்பு கிடைத்தது.
''ஹலோ...'' மெலிதாய் குரல் கொடுத்தாள்.
மறுமுனையில் தருண் பதட்டமாய், ''என்ன தீப்தி... இந்த நேரத்துக்கு போன்?''
''என் அம்மாவுக்கு திடீர்ன்னு உடம்புக்கு ரொம்பவும் முடியாம போயிடுச்சு, தருண். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.''
''ஹாஸ்பிடலுக்கு கொண்டு போக வேண்டியது தானே?''
''அந்த குட்ஹோப் ஹாஸ்பிடல் வேண்டாம்ன்னு, எம் மனசுக்குப்படுது. வேற ஏதாவது ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிடலாம்ன்னு நினைக்கிறேன். உனக்கு தெரிஞ்ச நல்ல ஹாஸ்பிடல் எதுன்னு சொல்லு.''
''எனக்குத் தெரியாது... நீயே வேற யாரையாவது கேட்டு முடிவு எடு; அங்கே கொண்டு போய், 'அட்மிட்' பண்ணு.''
''சரி... நீ இப்ப எங்கேயிருக்கே?''
''எங்கே இருப்பேன், வீட்ல தான். நல்லாத் துாங்கிட்டிருந்தேன். போன் பண்ணி துாக்கத்தைக் கெடுத்துட்டே,'' என, சிடுசிடுத்தான், தருண்.
''சாரி, தருண்.''
''எழுப்பிட்டு சாரி என்ன வேண்டிகிடக்கு. மொதல்ல போனை வை. எதுவாயிருந்தாலும் நாளைக்கு காலையில பேசிக்கலாம்,'' சொன்ன தருண் உடனே இணைப்பைத் துண்டித்துவிட, செழியனைப் பார்த்தாள், தீப்தி.
''மிஸ் தீப்தி... நீங்க ரெண்டு பேரும் காதலர்கள்ன்னு சொன்னீங்க. ஆனா, அவர் பேசின பேச்சில் அந்த உணர்வே இல்லையே... ஏதோ வேண்டா வெறுப்பா வேற யார்கிட்டேயோ பேசற மாதிரி இருக்கே?'' என்றார்.
கசப்பான புன்னகையொன்றை உதடுகளில் தவழவிட்டபடி, ''சார்... 'பை போலார் டிஸ்ஆர்டர்' என்ற மனநோயால் பாதிப்படைந்த நபர்கள்கிட்டயிருந்து, இது மாதிரியான வார்த்தைகள்தான் வரும்ன்னு, டாக்டர் யாதகிரி சொன்னபோது, நான் நம்பலை... இப்ப நம்ப வேண்டியிருக்கு,'' என்றாள், தீப்தி.
தீப்தி சொல்லி கொண்டிருக்கும் போதே செழியனின் மொபைல் போன், 'வைபரேஷ'னில், 'விர்ர்ர்' என்றது. எடுத்து, அழைப்பது யாரென்று பார்க்க, 'மானிட்டரிங் அண்ட் ட்ராக்கிங் சிஸ்டம்ஸ்' என்ற வார்த்தை, ஆங்கில எழுத்துக்களோடு மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது.
மொபைல் போனை, 'ஆன்' செய்து காதுக்குக் கொடுத்து, ''எஸ்...'' என்றார்.
மறுமுனையில், ''சார்... நீங்க, ஏ.சி.பி., மிஸ்டர் செழியன்தானே?''
''ஆமா.''
''சார்... கேலக்ஸி டெல் கம்பெனி, எம் அண்ட் டி சிஸ்டத்திலிருந்து சீப் ஆபரேட்டர் ஹரிகிருஷ்ணா பேசறேன்.''
''சொல்லுங்க ஹரி... நானே உங்களுக்கு போன் பண்ணலாம்ன்னு நினைச்சுட்டிருந்தேன். நீங்களே லைன்ல வந்துட்டீங்க. தீப்தி இப்பத்தான் தருணுக்கு போன் பண்ணிப் பேசினாங்க... தருண் இப்ப எங்கேயிருந்து பேசினார்ங்கிறதை, 'ட்ராக்கிங்' பண்ண முடிஞ்சுதா?''
''எஸ் சார்... அவர் எந்த லொகேஷன்ல இருக்கார்ங்கிறதை, 'ட்ரேஸ் அவுட்' பண்ணிட்டோம்.''
''எங்கே?''
''பொள்ளாச்சிக்குப் பக்கத்துல, 'டாப்ஸ்லிப்'ங்கிற, 'பாரஸ்ட் ஏரியா'வில் இருந்து, அவர் பேசியிருக்கார்.''
''தட்ஸ் பைன்... ஹரி... 'டாப்ஸ்லிப்'ல அது எந்த இடம்ன்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?''
''அப்படி சொல்ல முடியாது சார்... 'லொகேஷனை' மட்டும்தான், 'சிஸ்டம்' காட்டும். தருண் அந்த, 'லொகேஷனில்' எந்த இடத்தில் இருக்கார்ங்கிறதை, 'ட்ரேஸ் அவுட்' பண்றது கஷ்டம்.''
''கோவையிலிருந்து, 'டாப்ஸ்லிப்'க்கு ஒன்றரை மணி நேரத்துக்குள்ளே போயிடலாமா?''
''போயிடலாம் சார்... 70 கி.மீ., துாரம் தான்.''
செழியன் தன் மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தபடி நாற்காலியிலிருந்து எழுந்தார். தீப்திக்கு ஒரு நன்றியை சொல்லி, வீட்டைவிட்டு வேகமாய் வெளியேறி, வாசலில் நின்றிருந்த ஜீப்பை நோக்கிப் போனார்.
டாப் ஸ்லிப்!
அரையிருட்டான அந்த மாடிப்படிகளில், முகிலா மெல்ல நடை போட்டு இறங்குவதைப் பார்த்த இக்பால், தருண் மற்றும் ஜோஷ் என, மூன்று பேரும் அதிர்ச்சியோடு எழுந்து நின்றனர். பாதி போதை, காணாமல் போயிருந்தது.
''ஜோஷ்... வர்றது முகிலா தானே?''
''அவளே தான்!''
''பென்டாஜோஸின் ஊசியைப் போட்டு, அவளைக் கட்டிலோடு சேர்த்து கட்டி, வாயில் பிளாஸ்டரை ஒட்டச் சொன்னேனே... சொன்னபடி செஞ்சியா?''
''என்ன இக்பால்... இப்படி கேட்டுட்டே, நீ சொன்னபடி நான் செய்யாம இருப்பேனா?''
''அப்புறம் எப்படி முகிலா, இவ்வளவு தெளிவா இறங்கி வர்றா.''
''தெரியலையே?''
''அதைப்பத்தியெல்லாம் இப்ப பேசிட்டிருக்க நேரமில்ல, இக்பால் வா, அவளைப் போய் மடக்குவோம்,'' என, படபடத்தான், தருண்.
மூன்று பேரும் மாடிப்படிகளை நோக்கி வேகமாய் நடக்க முயன்று முடியாமல், அவர்களின் ரத்தத்தில் கலந்திருந்த மீதியிருந்த போதையின் தாலாட்டில் தடுமாறி விழுந்தனர்.
''ரத்தினம்...'' பெரிதாய் கத்தினான், இக்பால்.
வீட்டுக்கு வெளியே வாசற்படியில் நின்றிருந்த வாட்ச்மேன் ரத்தினம், கதவைத் திறந்து, ஓட்டமும் நடையுமாய் உள்ளே வந்தான்.
''அய்யா...''
''அவளைப் பிடி.''
ரத்தினம் திகைத்த பார்வையோடு குழப்பமாய் சுற்றும் முற்றும் பார்க்க, கத்தினான், ஜோஷ்.
''முட்டாள்... மாடியைப் பாரு... இறங்கி வர்ற அந்த முகிலாவை மடக்கு.''
ரத்தினம் மாடிப்படிகளை ஏறிட்டுப் பார்த்து, தயக்கமான குரலில், ''அய்யா, மாடிப்படிகளில் யாருமில்லையே,'' என்றான்.
மூன்று பேரும் பார்வைகளை மாடிப்படிகள் பக்கமாய் கொண்டு போய் சட்டென்று முகம் மாறினர்.
மாடிப்படிகள் வெறுமையாய் அரையிருட்டில் தெரிந்தன.
தட்டுத்தடுமாறி எழுந்து நின்றபடி அலறினான், தருண்.
''ரத்தினம் பேசிகிட்டு நிக்காதே... அந்த முகிலா, மயக்கம் தெளிஞ்சு, தப்பிச்சுப் போறதுக்காக மாடிப்படிகளில் இறங்கிட்டிருந்தா. நாங்க பார்த்துட்டு சத்தம் போட்டதுமே, மேலே ஓடிட்டான்னு நினைக்கிறேன். மாடியில் மூணு அறை இருக்கு. அந்த மூணு அறையில் ஏதாவது ஒன்றில் தான் அவ ஒளிஞ்சிட்டிருக்கணும்... போய் பிடி.''
''சரிங்கய்யா,'' தலையாட்டிவிட்டு மாடிப்படிகளில் வேகமாய் ஏற ஆரம்பித்தான், ரத்தினம்.
தருணின் தோளைப் பற்றிக் கொண்டான், இக்பால்.
''தருண்... உண்மையிலேயே முகிலா மாடிப்படிகளில் இறங்கி வந்துட்டிருந்தாளா... இல்லையா... அது பிரமையா?''
''நான் பார்த்தேனே... அவதான்... நான் எவ்வளவு குடிச்சுட்டு போதையில் மிதந்தாலும், என் மூளையை எப்பவுமே, 'ஷார்ப்'பா வெச்சுக்குவேன். முகிலா ஒரு பூனை மாதிரி சத்தமில்லாம மெல்லமா நடந்து மாடிப்படி இறங்கிட்டு இருந்தாளே... நீ என்ன சொல்றே ஜோஷ்?'' என, தருண் கேட்க, அவன் தலையசைத்தான்.
''ஆமா... நானும் பார்த்தேன். முகிலாவுக்கு நான் போட்ட, 'இஞ்செக் ஷன்' மருந்துக்கு வீரியம் அதிகம். இவ்வளவு சீக்கிரத்துல அவளுக்கு சுய உணர்வு திரும்ப வாய்ப்பேயில்லை. அதுவுமில்லாம அவளைக் கட்டிலோடு சேர்த்து கட்டிப் போட்டிருந்தேன். எப்படி அவளால கட்டுகளையெல்லாம் அவிழ்த்துகிட்டு அறையை விட்டு வெளியே வர முடிஞ்சதுன்னு எனக்கு தெரியலை.''
''வாட்ச்மேன் ரத்தினம் மாடிக்கு போயிருக்கான். வா, நாமும் மேல போவோம்.''
மூவரும் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு வேகமாய் மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தனர்.
''இனிமே, 'அரேபியன் கிரேப்ஸ்' விஸ்கியை சாப்பிடக் கூடாது. ஒரு ஸ்மால் லார்ஜ் அடிச்சாலே, ஏதோ காத்துல மிதந்து போற மாதிரி இருக்கு. ஒழுங்கா படியைப் பார்த்து ஏற முடியலை.''
மூவரும் மாடிப்படிகளில் ஏறிக்கொண்டு இருக்கும்போதே, ஏதோ ஒரு பொருள், 'ப்ச்சலீர்ர்ர்' என்ற சத்தத்தோடு உடைவது, அவர்களின் காதுச் செவிப்பறைகளை அதிர வைத்தது.
அதிர்ந்து போனவனாய் வியர்த்து வழிந்தபடி, வேகவேகமாய் படிகளில் தாவி, முதல் நபராய் மாடி வராந்தாவுக்கு வந்தான், தருண்.
அந்த நீளமான வராந்தா இருட்டும், வெளிச்சமும் கலந்து மசமசப்பாய் தெரிய, அதன் மையத்தில் வாட்ச்மேன் ரத்தினம் குப்புற விழுந்து, உடம்பில் சிறிதும் சலனமில்லாமல் பார்வைக்குத் தட்டுப்பட்டான்.
மூவரின் ஒட்டுமொத்த போதையும் சட்டென்று ஆவியாக, ஓட்டமும் நடையுமாய் போய் அவனருகே குனிந்தனர்.
இக்பால், ரத்தினத்தை புரட்டிப் போட, உடல் மல்லாந்தது. அவன் முகம் முழுவதும் ரத்தம் திட்டுத்திட்டாய் தெரிய, ரத்தினத்தின் தோள்பட்டையைப் பிடித்து உலுக்கினான், தருண்.
''ரத்தினம் என்னாச்சு... முகிலா எங்கே?''
ரத்தினம் தன்னுடைய கண்ணிமைகளை சிரமப்பட்டுப் பிரித்தான். ஏதோ பேச முயன்று முடியாமல் வலது கையை மெல்ல உயர்த்தி எதிர்ப்பக்கமாய் கையைக் காட்டினான். மூவரும் திரும்பிப் பார்த்தனர்.
க்ரில் கம்பி இல்லாத ஜன்னல் ஒரு பெரிய துவாரத்தை காட்டியது. வேகமாய் போய் வெளியே எட்டிப் பார்த்தான், இக்பால். ஜன்னலை ஒட்டியிருந்த அந்த மா மரம் காற்றில், இருட்டின் பின்னணியில் தன்னுடைய கிளைகளை அசைத்துக் கொண்டிருக்க, வெறிபிடித்தவன் போல் கத்தினான், இக்பால்.
''தப்பிச்சுட்டா.''
ஆவேசமாகி அரை மயக்கத்தில் இருந்த ரத்தினத்தின் உடம்பை எட்டி உதைத்தான், ஜோஷ்.
''காட்டெருமை மாதிரி உடம்பை வளர்த்து வெச்சுக்கிட்டு, ஒரு பொண்ணை மடக்க முடியாம இப்படி விழுந்து கிடக்கறியே செத்துப்போடா, நாயே.'' கையமர்த்தினான், தருண்.
''ஜோஷ்... ரத்தினம் மேல கோபப்பட்டோ, ஆத்திரப்பட்டோ எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நாமதான் முகிலாவை சரியானபடி, 'ஹேண்டில்' பண்ணலை. அவ காலேஜில் படிக்கும்போதே, 'இண்டர் ஸ்டேட் அதெலடிக்ஸ் சேம்பியன் ஷிப் கப்'பை மூணு தடவை வாங்கியிருக்கா. அதுவுமில்லாம, அவளுக்கு கராத்தேவும் தெரியும். எல்லாப் பெண்களை போல் அவளையும் நினைச்சுட்டோம். தப்பு நம்ம பேர்ல தான்.''
''இப்ப என்ன பண்ணலாம் சொல்லு.''
''முகிலா இந்த மாடியிலிருந்து தப்பிச்சுட்டாலும், 2 ஏக்கர் பரப்புள்ள இந்த வீட்டை விட்டு, அவ்வளவு சுலபத்துல தப்பிக்க முடியாது. வீட்டைச் சுத்தியும், 10 அடி உயர ராட்சச காம்பவுன்ட் சுவர். அதே உயரத்துக்கு எஃகு இரும்பு கேட்.
''இந்த வீட்டோட ஒவ்வொரு இடமும் நமக்குத் தெரியும். ஆனா, அவளுக்குத் தெரியாது. நாம மூணு பேரும், 'ஸ்டன் கன் டார்ச்சு'களை எடுத்துகிட்டு, ஒரு சுற்று வந்தா போதும்... அவ எந்த மூலை முடுக்கில் ஒளிஞ்சிருந்தாலும் சரி, கண்டுபிடிச்சு துாக்கிடலாம். ஜோஷ், போய் டார்ச்சுகளை எடுத்துட்டு வா.''
''ஒரு நிமிஷம்...'' குறுக்கிட்டான், இக்பால்.
''என்ன?''
''நம்ம மூணு பேர்ல யார் முதல்ல அவளைப் பார்த்தாலும் சரி, அந்த விநாடியே அவளை அடிச்சே கொல்லணும்.''
- தொடரும்
ராஜேஷ்குமார்
