
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எதிரிகள் எங்குமில்லை...
கல் எறிந்தவர்கள் மீது
கல் எறிந்தால்
கலவரம் மூளும்!
தடி எடுத்தவர்கள் மீது
தடியடி நடத்தினால்
உயிர்ச்சேதம் உண்டாகும்!
கத்தி எடுத்தவர்களை
எதிர்த்து, கத்தி எடுத்தால்
கை, கால்கள் வெட்டுப்படும்!
கற்களை வீசினாலும்
காய் கனிகளை
பரிசாக தருகின்றன
மரங்கள்!
எதிரி
எந்த ஆயுதம் எடுத்து வந்தாலும்
அன்பு - எனும் ஆயுதம் முன்
அனைத்தும் வலுவிழந்து போகும்!
நம் எதிரில் இருப்பவர்கள்
எதிரியா
நண்பரா என்பதை
நம் வார்த்தைகள் தான்
தீர்மானிக்கின்றன!
சண்டையிட்டு
வாழ்வதில்
சந்தோஷம் ஏது?
ஒற்றுமையாய் வாழ்ந்து பார்
ஒருபோதும் இல்லை தீது!
நீயா, நானா
பார்ப்போம் வா - என்று
சண்டையிடுவதில்
ஒருவர் வெல்வார்!
நீயும், நானும்
ஒன்று - என்று
சமாதானமாகிப் போ
இருவரும் வெல்லலாம்!
பி.சி. ரகு, விழுப்புரம்.

