
என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை உணர்வதற்குள், ஏதோ ஒன்று ஆட்டிப் படைக்கிறது. கடைசியில், விபரமறிந்த ஒருவர் வந்து, குறை தீர்க்கிறார். தொலைத்த மகிழ்ச்சி திரும்புகிறது. இதை விளக்கும் வரலாறு:
சுமன் எனும் ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று, மூன்று ஆண்டு தீவிரமாக ஞான நுால்களில் பயிற்சி பெற்று, பலராலும் பாராட்டும்படியாக இருந்தது.
எட்டு வயதான சுமன், ஒருநாள் காட்டுக்கு போய், திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, அவனையறியாமலே, பேய் ஒன்று அவனை பிடித்துக் கொண்டது. ஒரு வழியாக தட்டுத் தடுமாறி, வீடு திரும்பினான்.
நாளாக நாளாக, சுமனுக்கு, அறிவு தடுமாறியது; கண்கள் சுழன்றன; வார்த்தைகள் பிதற்றலாக வெளிப்பட்டன; திடீர் திடீரென்று, 'ஓ'வென்று கத்தி கூச்சலிட்டான்.
பைத்தியம் பிடித்தாற் போல் இருந்த மகனின் நிலை கண்டு வருந்தினார், அப்பா. கோவில்களுக்கு போய், அல்லல் நீங்க முறையிடுவதை தவிர வேறு வழியில்லை என தீர்மானித்தவர், மகனை அழைத்து, பற்பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.
ஒருமுறை, பொதிய மலையருகே, சுமனும், அவன் அப்பாவும் போய்க்கொண்டிருந்தபோது, எதிர்பட்டார், அகத்திய முனிவர்.
இருவரும், அகத்தியர் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தனர்.
'மாமுனிவரே... சித்த புருஷரே... சுமன் எனும் இவன், என் மகன். குழந்தை செல்வம் இல்லாமல், பல காலம் துயரப்பட்டு, விரதங்கள் இருந்து பிறந்தவன். இப்போது, எட்டு வயதாகிறது.
'என்ன ஆயிற்றோ தெரியவில்லை, திடீரென்று, இப்படி ஆகி விட்டது. தாங்கள், என் மனக்குறையை தீர்த்தருள வேண்டும்...' என, வேண்டினார், சுமனின் அப்பா.
சுமனை ஒருமுறை உற்றுப் பார்த்தார், அகத்தியர்; உண்மை புரிந்தது.
'உன் மகனான இவன், பல பிறவிகளில் செய்த பாவங்கள் அளவில்லாதவை; அதற்காக விட்டுவிட முடியுமா...
'சேதுவிற்கு போ... அங்கே, வேதாள வரத தீர்த்தம் இருக்கிறது. அதில் வடகிழக்கு திசையில், இவனை முழுகச் செய். தீவினைகள் அனைத்தும் நீங்கும். தெளிவு பெறுவான்...' என்று வழிகாட்டினார், அகத்தியர்.
மகன் சுமனை அழைத்து, ராமேஸ்வரம் சென்றார். அங்கே, அகத்தியர் சொன்னபடி, புண்ணிய தீர்த்தத்தில், முறைப்படி, மகனை நீராடச் செய்தார்; தாமும் நீராடினார்.
சுமனை பிடித்திருந்த தீவினைகள் எல்லாம் அகன்றன; தெளிவு பெற்றான். மூன்று நாட்கள் அங்கேயே தங்கி, வழிபாடு செய்து, நான்காவது நாள், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
நல்ல வழிகாட்டிகள் சொன்னபடி செயல்படுவோம்; அல்லல் படுத்தும் தீவினைகளை ஓட்டி விடுவோம்!
ஆன்மீக தகவல்கள்!
பசுக்களுக்கு வாழைப்பழம் கொடுத்தால், கோடி புண்ணியம் சேரும். பசுக்களிடம், குபேரன் குடி கொண்டுள்ளதால், கோ மாதா பூஜை செய்வது, குபேர பூஜை செய்த பலனை தரும்.
பி. என். பரசுராமன்

