PUBLISHED ON : ஜன 03, 2021

முன்கதை சுருக்கம்:
புவனாவை, 'பார்க் ஷெரட்டன்' ஹோட்டலில் வந்து சந்தித்தான், ராஜாராமன். புவனாவும், கார்த்திகேயனும் நேசிக்கும் விஷயம் அறிந்து, தான் முன் நின்று, திருமணத்தை நடத்தி வைப்பதாக கூறி, விலாச அட்டையை கொடுத்து சென்றான் -
''என்னப்பா சொல்ற நீ?'' பதறினார், சாம்பசிவம்.
அப்போது தான், நடராஜ சாஸ்திரிகள் வீட்டிற்கு போய், புவனாவின் ஜாதகம், ராஜாராமனின் ஜாதகம் இரண்டையும் கொடுத்து, திருமணத்திற்கு நல்ல நாள் குறித்து வந்தார்.
''பொண்ணுக்கும், பையனுக்கும் பேஷா பொருந்திப் போயிற்று. ரெண்டு பேருடையதும் அம்சமான ஜாதகம். அமோகமா வாழப்போறா...'' என்று, மாதம், தேதி, முகூர்த்த நேரம் எல்லாம் எழுதி, காகிதத்தின் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி கொடுத்தார், நடராஜ சாஸ்திரிகள்.
அதை வாங்கி, கண்களில் ஒற்றி, தட்டில், பூ, பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் தட்சிணை எல்லாம் வைத்துக் கொடுத்தார், சாம்பசிவம்.
''முன்ன நின்னு, நீங்க தான் நடத்திக் கொடுக்கணும்,'' என்றும் வேண்டிக் கொண்டார்.
''பேஷா... ஜமாய்ச்சுடலாம். கவலைப்படாமப் போங்கோ,'' என்று, வழியனுப்பி வைத்தார், நடராஜ சாஸ்திரிகள்.
அதை எடுத்து வந்து, பூஜை அறையில் வைத்து விட்டு, ஊஞ்சலிலேயே படுத்துக் கொண்டார், சாம்பசிவம்.
''ஒரு வழியா சாப்பிட்டு படுத்துக்கோங்களேன்,'' என்ற ராஜாம்பாளிடம், ''சித்த படுத்துண்டு வரேன், ராஜம்...'' என்றார்.
சிறிது கண்ணயர்ந்திருப்பார். அப்போது தான், கால்மாட்டில் வந்து நின்றான், ராஜாராமன்.
அவன் நிற்பதை உணர்ந்தவர், சடாரென்று எழுந்து உட்கார்ந்தார்.
''வா... வந்து பக்கத்துல உக்காரு.''
உட்கார்ந்து கொண்டான்.
''நாள் குறிச்சு குடுத்துட்டார், நடராஜ சாஸ்திரிகள். தானே முன்ன நின்னு எல்லாம் செய்யிறதா சொல்லியிருக்கார்.''
''அதுக்கெல்லாம் தேவையே இல்ல... இந்த திருமணம் நடக்காதுப்பா,'' என்றான், ராஜாராமன்.
அப்போது தான் அதிர்ந்து போய், ''என்னப்பா சொல்ற நீ?'' எனக் கேட்டார்.
அவரது குரல் கேட்டு, உள்ளேயிருந்து ஓடி வந்தாள், ராஜாம்பாள்.
தெளிவான குரலில், நிதானமாக, ''இந்த திருமணம் நடக்காதுப்பா,'' என்றான், ராஜாராமன்.
''ஏண்டா?''
''ஏன்னா, புவனா மனசுல நான் இல்ல. கார்த்திகேயன்னு ஒருத்தன் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கான்.''
''ரா... ஜா...'' என்ற ராஜாம்பாளின் குரலில், கேவல் இருந்தது.
''ஆசை ஆசையா காரை எடுத்துண்டு ஓடினாயேடா...''
''அது சரிம்மா... நான் ஆசைப்பட்டா மட்டும் போறுமா, அவள் ஆசைப்பட வேண்டாமா?''
அந்த அம்மாள் பேசாதிருக்க, ''ஆசைப்பட்டதையெல்லாம் அடையணும்ன்னு ஏதாவது இருக்காம்மா?'' என்றான்.
''என்ன ராஜா இப்படி பேசற?''
''ஆமாம்மா... ஆசைப்பட்டது கிடைக்காமல் போறதுலயும் ஒரு சுகம் இருக்கும்மா... காலமெல்லாம் அந்த நினைப்பு, கற்பூரம் மாதிரி மனசுக்குள்ள இருந்துண்டே இருக்கும்மா.''
''நீ பேசறது, எனக்கு புரியல ராஜா.''
''அப்பா... உங்களுக்கு புரிஞ்சுதா?'' என்று, அவர் முகத்தை பார்த்தான்.
''ஏதோ புரியற மாதிரி இருக்குப்பா... அப்போ நம்மை எதுக்கு பொண்ணு பார்க்க வரச்சொன்னா?''
''வரச்சொன்னது, குருமூர்த்தி சிவாச்சாரியார்தானே... புவனா இல்லையே?''
''அப்படின்னா...''
''குருமூர்த்தி சிவாச்சாரியாருக்கு, இன்னும் புவனா விஷயம் தெரியாதுப்பா...'' என்று ஆரம்பித்து, முழு விபரமும் சொல்லி முடித்தான்.
கேட்டு ஆடிப்போயினர், சாம்பசிவமும், ராஜாம்பாளும்.
''பாவம், குருமூர்த்தி சிவாச்சாரியார். ரொம்ப நல்ல மனுஷர். சாஸ்திர, சம்பிரதாயம் தவறாதவர். அந்த குடும்ப கவுரவத்தை குலைக்கவே இந்த பொண்ணு வந்து அவருக்கு பொறந்திருக்கு...'' என்றார், சாம்பசிவம்.
''பாவம்ப்பா புவனா... அவளை தப்பு சொல்லாதீங்க... ஜாதி, அந்தஸ்து, குலம், கோத்ரம் பார்த்துண்டா அன்பு ஏற்படறது... இதெல்லாம் காலம் காலமா இருக்கிற விஷயம்ப்பா... இன்னிக்கு, நேத்திக்கு ஏற்பட்ட விஷயமில்ல.''
''அது சரி, ராஜா... இனிமே நீ என்ன செய்யப் போற?''
''அவா ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்த்து வைக்கப் போறேன்.''
''என்னடா இது... கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாயிடுத்து... நமக்கேண்டா அந்த வம்பெல்லாம்... அந்தப் பையனோட அப்பாவ, எனக்கு தெரியும். மகா ரவுடிடா அவன்.''
''இருக்கட்டுமே, இதுக்கெல்லாம் பயந்தா எப்படிப்பா... எல்லாரும் ஒதுங்கிப் போனா, யார் தான் உதவி செய்யிறது?''
''ரா... ஜா...''
''அப்புறம், நான் அந்த பொண்ணு மேல வச்ச அன்புக்கு என்ன அர்த்தம்... எனக்கு கிடைக்கலேன்னா ஒதுங்கிடணுமா... அவ வாழ்க்கை நன்னா இருக்கணும்ன்னு, நான் ஆசைப்படக் கூடாதா?''
அவனை பார்த்த சாம்பசிவத்தின் பார்வையில் புது மரியாதையும், ஆச்சரியமும் தெரிந்தது.
''நீ என்ன சொல்ற ராஜா?''
''நான் அவா ரெண்டு பேருக்கும் ஒத்தாசை செய்யப் போறேன். அவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கப் போறேன்.''
அமைதியாக அவனை பார்த்தார்.
''நீங்க சம்மதிச்சா, தேவைப்பட்டா அவா ரெண்டு பேரையும் கூட்டிண்டு வந்து, நம்மாத்துல தங்க வைக்கலாம்ன்னு இருக்கேன். காதும் காதும் வச்ச மாதிரி, நம் கோவில்லயே திருமணம் பண்ணி வச்சுடலாம்ப்பா. என்ன சொல்றேள்?''
''எனக்கு ஒரு நாள் டயம் குடுப்பா. நான் யோசிச்சு சொல்றேன்,'' என்றார்.
''சரிப்பா... நிதானமா சொல்லுங்கோ,'' என்று நகர்ந்தான்.
யோசிக்க அவருக்கு நிறைய விஷயமிருந்தது. ராஜாராமன் சொல்கிற மாதிரியெல்லாம் செய்து விட முடியாது. அவன் செய்யலாம். அவர் செய்யக் கூடாது. ஒரு கோவிலின் தலைமை குருக்களுக்கென்று சில சட்ட திட்டங்கள் உண்டு.
எல்லா ஜாதியினருக்கும் சங்கம் இருக்கிற மாதிரி, குருக்களுக்கும் சங்கம் உண்டு. சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு அவர் அடங்கித்தான் நடக்க முடியும். கட்டுப்பட்டே ஆகவேண்டும்; மீற முடியாது. மீறினால் ஒதுக்கப்படுவார். கோவிலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்படுவார். கைங்கர்யம் செய்ய முடியாமல் போகும்.
தாத்தாவுக்கும் தாத்தா காலத்திலிருந்து, காலம் காலமாக செய்து கொண்டிருக்கிற பகவத் கைங்கர்யம். தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டிருக்கிறது. இப்போது, யாரோ ஒருத்திக்காக அவற்றையெல்லாம் விட்டுக் கொடுத்து விட முடியாது.
அதே சமயம், ராஜாராமனது எண்ணத்தையும் அவரால் ஒதுக்கிவிட முடியாது; புறம் தள்ள முடியாது. ராஜாராமன் என்பவன், அவருக்கு உயிர். தசரதருக்கு ராமன் மாதிரி. அவனும், ராமன் மாதிரி தான் இருந்தான்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாகவே வளர்ந்தான். கர்மத்தையும், சத்தியத்தையும் மீறாதவனாக இருந்தான். ஆகவே, அந்த பெண்ணிற்கு, அவர்களை சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுத்து வந்திருந்தால், நிச்சயம் அதை மீற மாட்டான். எப்பாடு பட்டாவது சேர்த்து வைப்பான்.
எவ்வளவு பெரிய மனசு அவனுக்கு. இந்த மனசு, தனக்கு உண்டா என்று யோசித்துப் பார்த்தார். நிச்சயமாக இல்லை. ராஜாராமனது மிகச்சிறந்த நல்ல குணங்களில் பல, அவரிடம் இல்லை. அவர் சற்று புரண்டு கொடுப்பார்; வளைந்து பேசுவார். சமயத்திற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்வார்.
ஆனால், அவை எதுவும் ராஜாராமனிடம் இல்லை. அவன் நாக்கு, சத்தியத்தை விட்டு புரண்டதில்லை; தர்மத்தை விட்டு விலகினதில்லை. இப்படிப்பட்ட பையனை அடைய, அந்த பெண்ணுக்கு கொடுப்பினை இல்லை.
நல்லவேளையாக எனக்கு கொடுப்பினை இருந்திருக்கிறது. எனக்கு வந்து பிள்ளையாக பிறந்திருக்கிறான். 'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்...' என்று நினைத்துக் கொண்டார். கூடவே, இந்த விஷயத்தில், ராஜாராமனுக்கு உதவி செய்யவும் முடிவு செய்தார்.
எப்படி செய்தால் சரியாக இருக்கும் என்ற ஆழமான யோசனையில் இறங்கினார்.
— தொடரும்
இந்துமதி

