PUBLISHED ON : செப் 03, 2023

கன்னித் தமிழை தங்கக் கற்கண்டாய்
கற்றுத்தந்தது இந்த ஆசிரியர் கூட்டம் - அது
அன்னைத் தமிழை அகிலம் எடுத்துச் சென்ற
ஆனந்த அறிவு பூந்தோட்டம்!
கல்வி மீதினில் களங்கம் கொள்ளாத
காதல் கொண்டது இந்த ஆசிரியர் கூட்டம் - அது
சொல்லிக் கொடுத்து சுவை கூட்டுவதில்
சொக்கத் தங்க தேரோட்டம்!
அறிவு துாண்களாய் அடியில் நின்று
ஆகாய பந்தலிட்டது இந்த ஆசிரியர் கூட்டம்
அணி அணியாய் மாணவச் செல்வங்களை
மதில் மேல் ஏற்றிவிட்டது மந்திரி கூட்டம்!
சமுதாயம் சந்தித்த சீர்கேட்டை சந்தன
கோட்டையாக்கியது இந்த ஆசிரியர் கூட்டம்
சாதனைகள் பல செதுக்கி சரித்திரத்தில்
வேதனைகள் வீழ்த்துவதே அவர்களது நாட்டம்!
அணையாத அறிவொளிக்கு நிலவிளக்காய்
இணைந்து நின்றது இந்த ஆசிரியர் கூட்டம்
இனிக்காத செவிக்கெல்லாம் செந்தமிழூற்றி
இன்ப தேன் சிந்த செய்யும் கவித்தோட்டம்!
எழுத்தறிவித்தவன் இவன் இறைவனென்று
பகுத்தறிவில்லாதவருக்கு பறை சாற்றுவோம்
கல்வி வளர்த்தவன் இவன் கடவுளென்று
கல்லாதவரையும் நாம் கரை ஏற்றுவோம்!
இன்னொரு ஜென்மம் இருக்குமேயானால்
இவ்வாசிரியர் இனமே இவ்வுலகாள வேண்டும்
என்னொரு காலமிது இனிய பொற்காலமிது
என்றொரு சொல் இனிதே பாய வேண்டும்!
கல்வியறிவு கற்று தந்த கலை மேதைகளை
காணும் நேரம் கனிவாய் நாம் கை குவிப்போம்
அறிவொளி ஏற்றிய அந்த ஆசிரியப் பெருமக்களை
அகிலம் உள்ள வரை, நெஞ்சில் நாம் சுமப்போம்!
— க. அழகர்சாமி, கொச்சி.
