PUBLISHED ON : மே 01, 2016

இறைவனிடம், 'இதைக் கொடு, அதைக் கொடு...' என வேண்டுவது தான் வழக்கம். ஆனால், இறைவனே, 'அவனுக்கு இதைக் கொடு...' என கடிதம் எழுதிய அற்புதம் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளது.
சங்கீதத்தில் மேதாவியான ஹேமநாத பாகவதர், தான் எனும் அகம்பாவத்தில், மதுரையில் இருந்த சங்கீத வித்வான்களைப் போட்டிக்கு அழைத்தபோது, பாணபத்திரரை போட்டியில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தினார் அந்நாட்டு மன்னன். ஹேமநாத பாகவதருடன் போட்டி போடப் போவதை நினைத்து மனம் கலங்கினார், பாணபத்திரர். அவர் மனக் கஷ்டத்தை போக்கவும், ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்கவும், சிவபெருமானே, ஹேமநாத பாகவதர் முன் சென்று பாடல் பாடி, அவரது கர்வத்தை அழித்த வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே!
சிவபெருமானை உள்ளம் உருகப் பாடுவதில் சிறந்தவர் பாணபத்திரர்; நற்குணசீலரான அவர், 'என் தேவையறிந்து கொடுக்கும் என் இறைவன் சொக்கநாதர் இருக்க, சொற்ப திரவியம் கேட்டு, அடுத்தவரிடம் ஏன் கை ஏந்த வேண்டும்...' எனும் கொள்கை உடையவர்.
ஒருசமயம் பொருள் இன்மையால், மிகுந்த சிரமப்பட்டார், பாணபத்திரர். அவரின் துன்பத்தை நீக்கும் பொருட்டு, கடிதம் எழுதி, அதை, அரசன் சேரமான் பெருமாளிடம் கொடுக்கும்படி கட்டளையிட்டார், சிவபெருமான். கடிதத்தை சேரமான் பெருமாளிடம் கொடுத்தார் பாணபத்திரர். அதை வாங்கி பிரித்த சேரமான், அதில் எழுதியிருந்ததைப் படித்ததும் வியந்தார்.
அனுப்புனர் பெயர், விலாசம் குறிக்கப்பட்டு, ஆலவாயிலில் இருக்கும் சிவபெருமான் எழுதியிருக்கிறேன் என ஆரம்பித்து, 'சேரலன் காண்க...' எனத் துவங்கி, 'பாணப்பத்திரன் மிகவும் பண்பு மிகுந்தவன்; யாழ் வாசிப்பவன்; உன்னைப் போலவே, என்னிடம் பக்தி செலுத்தும் அன்பன். இவனை, உன்னிடம் அனுப்பியுள்ளேன். இவன் துன்பம் நீங்க பொருள் கொடு; பொருள் கொடுத்த பின், அவனை உன்னருகிலேயே இருத்திக் கொள்ளாமல் மறுபடியும் மதுரைக்கே அனுப்பிவிடு...' என எழுதியிருந்தார்.
தன்னையே கதி என நம்பிய பக்தனின் துன்பம் நீங்க, எப்போதும் தன்னையே துதிக்கும் மற்றொரு பக்தனிடம் அனுப்பி, அவனுக்கு அள்ளிக் கொடுக்கச் சொன்ன இறைவன், எங்கே பாணபத்திரரை, சேரமான், தன்னுடனேயே தங்க வைத்து விடுவானோ என்று எண்ணி, பாணபத்திரரை மறுபடியும் தன் இருப்பிடமான மதுரைக்கே அனுப்பி வைக்கும்படி, கூறியிருக்கிறார். இதிலிருந்து, இறைவனுக்கு பாணபத்திரர் மீது இருந்த கருணையைச் சொல்வதா அல்லது இறைவனின் கருணைக்கு பாத்திரமான பாணபத்திரரின் பக்தியைச் சொல்வதா...
எப்படியோ, பக்தன், இறைவனை நினைப்பதை விட, இறைவன், தன் அடியவர்களை நினைத்தபடி, அவர்கள் தேவையறிந்து அருள்புரிகிறார்!
பி.என்.பரசுராமன்

