sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 24, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது, 48; என் மனைவி வயது, 36. எங்களுக்கு, 17 வயதில், ஒரு மகன் இருக்கிறான்.

நான் கடந்த, 18 ஆண்டுகளுக்கும் மேலாக, அறக்கட்டளை ஒன்றில் பணி முடித்து, தற்போது, மூன்று ஆண்டுகளாக பொறியியல் கல்லூரியில், அலுவலகப் பணியாளராக பணிபுரிறேன்.

நான், கவிதை, கட்டுரைகள் எழுதுவதுடன், மேடையிலும் நன்றாக பேசுவேன். நூறு பெண்களில் ஒருவள், அழகாக, குணமாக, அமைதியாக, அறிவாக தெரிந்தால், அவளுடன் கனிவாக பேசி, நட்பை ஏற்படுத்திக் கொள்வது என் வழக்கம். அவ்வாறு ஏற்பட்ட, ஆண், பெண் நண்பர்கள் இன்று வரை எனக்கு துணையாக இருக்கின்றனர்.

எனக்கு திருமணமான சமயம், ஒரு நாள், எங்கள் தென்னந்தோப்பில், என் உறவுக்கார பெண்ணை, அவள் மாமியாருடன் பார்த்தேன். அப்போது, அவளுக்கு திருமணமாகி, இரு மாதங்கள் ஆகியிருந்தன. தற்போது, அவள் வயது, 33. தூரத்து உறவுமுறை என்றாலும், அப்பெண்ணை அன்று தான் முதன்முதலாக பார்த்தேன். அன்றே என் மனதில் அவள் ஆழமாக பதிந்து விட்டாள். அப்பெண்ணின் கணவன், எனக்கு மைத்துனன் உறவு முறை. அவர்கள் வீடு, எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளது. இதனால், இரு குடும்பமும் நெருக்கமானது. அவள், என்னை, அண்ணன் என்றே அழைப்பாள்.

என் மைத்துனருக்கு திருமணமாகி, நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத சூழ்நிலையில், அவர்கள் இருவரையும், எனக்கு தெரிந்த பெண் மருத்துவரிடம் அழைத்து சென்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். தற்போது, அப்பெண்ணுக்கு, 14 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த, 18 ஆண்டுகளாக அப்பெண்ணுக்கும், அவளின் குடும்பத்திற்கும், நிறைய உதவிகள் செய்து வந்தேன். நான் இல்லாமல், அவர்கள் வீட்டில், எந்த காரியமும் செய்ய மாட்டார்கள்.

அவள் கணவன் கட்டடம் சார்ந்த துறையில் பணிபுரிவதால், அடிக்கடி வெளியூர்களில் தங்குவார்; ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தான், ஊருக்கு வருவார்.

இந்நிலையில், என் அலுவலகப் பணி காரணமாக, வெளியூரில் இரு நாட்கள் தங்க நேர்ந்தது. அப்போது அவளுக்கு போன் செய்து, என் மனதில் இருப்பதை எல்லாம் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அவள் மீது எனக்கிருக்கும் காதலை மட்டும் கூற முடியாமல் தவித்தேன். மறுநாள் இரவு, தெய்வத்தின் துணையோடு, என் காதலை, அவளிடம் கூறினேன். அவளும் என்னை, 14 ஆண்டுகளாக விரும்பி வந்ததாக கூறினாள். அதைக் கேட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அதன்பின், எங்கள் ஊருக்கு அருகில் உள்ள நகரத்தில், மிகப்பெரிய மருத்துவமனையில் பணி கிடைக்க ஏற்பாடு செய்தேன்; தற்சமயம், அவள் அம்மருத்துவமனையில் பணிபுரிகிறாள்.

கடந்த, நான்கு ஆண்டுகளாக நானும், அவளும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம். இருவரும் பல ஊர்களுக்கு சென்று தங்கி உள்ளோம். சகோதரனாக, 10 ஆண்டுகள், நண்பனாக நான்கு ஆண்டுகள், கணவனாக, நான்கு ஆண்டுகள் என, 18 ஆண்டுகளில், நான் பெரும் புண்ணியத்தை அடைந்து விட்டேன்.

இந்நிலையில், இரு மாதத்திற்கு முன், ஒருநாள், அவளை மொபைல்போனில் தொடர்பு கொண்ட போது, நீண்டநேரம் போனை எடுக்காமல் இருந்தாள். பலமுறை முயற்சி செய்தும், என்னுடன் பேசுவதை தவிர்த்தாள்.

கடந்த ஒரு மாதமாக, அவளுக்கு போன் செய்யும் போதெல்லாம், நீண்ட நேரம், யாருடனோ பேசுவது தெரிய வந்தது. 'யார்?' என்று கேட்ட போது, 'மருத்துவமனையில் உள்ள பெண்கள்...' என்று கூறினாள்.

ஒருநாள், 'உண்மையை சொல்...' என்றேன். 'நான் ஒருத்தரை ஆறு மாசமா காதலிக்கிறேன்; நாங்க ரெண்டு பேரும் புதுச்சேரியில் ஒரு ஓட்டலில் தங்கினோம். என்னை மன்னிச்சுடுங்க; இனிமே, உங்கள, கணவனாக என்னால் ஏற்க முடியாது. உங்கள அண்ணனாக, நண்பனாக தான் பார்க்கிறேன். என்னை மறந்துடுங்க. இந்த உண்மையைக் கூட, உங்களோடு, நாலு வருஷம் வாழ்ந்ததால் தான் கூறுறேன். வேறு யாரிடமும் இதைச் சொல்லிடாதீங்க...' என்றாள்.

அம்மா... அவள் என்னோடு இல்லாத வாழ்க்கையை நினைத்து நினைத்து அழுது, எந்த முடிவும் எடுக்க முடியாமல், நடைபிணமாக வாழ்கிறேன். அவள் புதிய வாழ்க்கையை அனுபவித்து, நிம்மதியாக இருக்கிறாள்.

நான் பழைய வாழ்க்கையை தேடி, நிம்மதியை இழக்கிறேன். எனக்கு தக்க ஆலோசனை கூறவும்.

இப்படிக்கு,

அன்பு மகன்.


அன்புள்ள மகனுக்கு —

இருபது ஆண்டுகள் மனைவியுடன் குடும்பம் நடத்தி, 17 வயது மகனுக்கு தந்தை நீ. நல்ல பணியில், கைநிறைய சம்பாதிக்கவும் செய்கிறாய். இப்படி, திருப்திகரமான வாழ்க்கை அமைந்தும், கள்ளக்காதலிக்காக உருகுகிறாய்.

திருமணமான பெண்ணுக்கு சகோதரனாய், நண்பனாய் இருந்து பின், கள்ளக் காதலனான நீ எப்படி, உன் கள்ளக் காதலிக்கு கணவனாக முடியும்?

கணவன் ஸ்தானம் உன்னதமானது; கள்ளக்காதலன் ஸ்தானம் அசுத்தமானது. குடிநீரையும், கழிவுநீரையும் ஒன்று சேர்க்க முயலாதே!

நீ, உன் மனைவிக்கும், அவள், அவளின் கணவனுக்கும் நம்பிக்கை துரோகம் செய்து, கள்ளக்காதலில் ஈடுபட்டீர்கள். இப்போது, அவளுக்கு பழைய கள்ளக்காதலன் புளித்துப் போனதால், புதிய கள்ளக்காதலில் ஈடுபடுகிறாள். அவளை குறை கூற உனக்கு என்ன அருகதை இருக்கிறது?

இருவரும் கூட்டாய் சேர்ந்து திருடுனீர்கள். உன் கூட்டாளி, புதிய கூட்டாளியுடன் சேர்ந்து, திருட ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு கள்ளக்காதலில் ருசி காண்பித்ததே நீதான். நல்ல பால் திரிந்து விட, நீயே காரணம்.

மேடை பேச்சாளன், கவிஞன், பெண்களை மயக்கி தோழி ஆக்கும் மந்திரம் தெரிந்தவன் என தற்பெருமை பேசும் நீ, தங்கை முறை கொண்ட பெண்ணை, ஆசை நாயகியாய் பாவித்திருக்கிறாய். மீண்டும் அவள் உன்னுடன் கள்ளக்காதலில் ஈடுபட யோசனையும் கேட்பாய் போல!

தெய்வத்தின் துணையோடு உன் காதலை அவளிடம் கூறியதாக சொல்லியிருக்கிறாய்... தங்கள் வாழ்க்கை துணைக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கும் கள்ளக்காதலர்களுக்கு எந்த தெய்வம் துணை நிற்கும்? திருடுபவன், கொலை செய்பவன் கூட சாமி கும்பிட்டு விட்டுதான் அவைகளில் ஈடுபடுகிறான். குற்றம் செய்பவர்கள், குற்ற செயல்களில் கடவுளையும், பங்குதாரராக ஆக்குகின்றனர். நீயும் அப்படித்தான் சொல்கிறாய்.

பணம், பொருள், வேலை வாய்ப்பு என, அவளுக்கு நீ செய்த உதவிகளுக்கு நன்றிக்கடனாய் தான், அவள் உன்னுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டாள். இப்போது, அவள் வேலை பார்க்கும் இடத்தில் நிறைய ஆண் நண்பர்கள் கிடைத்திருப்பர். அவர்களில் ஒருவரை, தன் இரண்டாவது கள்ளக்காதலனாக வரித்திருக்கிறாள். இதில் நீ கவலைப்பட என்ன இருக்கு?

மனைவிக்கு பிற ஆண் செய்யும் உதவிகளை, லஜ்ஜையின்றி ஏற்றுக் கொள்ளும் அவள் கணவனிடமும் பல குறைகள் உள்ளன. மனைவியுடன், இன்னொரு ஆண் கைபேசி மூலம் பேச, இணைப்பு பாலமாகவும், மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு, ஆண்மை இல்லாதவனாகவும் அவள் கணவன் இருக்கலாம். அவனது பலவீனங்களை, அவள் பயன்படுத்திக் கொண்டாள்.

கள்ளக் காதலிக்காக இவ்வளவு உருகுகிறாயே...

உன்னைப் போல் உன் மனைவியும் கள்ளக்காதலில் ஈடுபட்டால் தாங்கிக் கொள்வாயா? வெளி மைதானங்களில் விளையாடியது போதும்; 'ஹோம் கிரவுண்டு'க்கு திரும்பு. உன் காமதகனத்தை உன் மனைவி மூலம் மட்டும் செய். கள்ளக்காதலியின் நினைப்பை பிடுங்கி எறி. மனைவி தவிர பிற பெண்களுடன் நெருங்கி பழகாதே!

உள்நோக்கம் கொண்ட உதவிகள் செய்வதுடன், பிறரை குற்றம் சாட்டுவதற்கு முன், உன் முதுகிலுள்ள அழுக்கை அகற்றப் பார். ப்ளஸ் 2 படிக்கும் மகனின் எதிர்காலத்தை பிரகாசமாக்க முழு முயற்சியில் ஈடுபடு. தவறான வழியில் கிடைத்த சந்தோஷம், கிடைக்காமல் போனதற்கு அழுது புலம்பாதே! இனிமேலாவது, உன் மனைவிக்கு நல்ல கணவனாகவும், மகனுக்கு நல்ல தந்தையாகவும் வாழப் பார். செய்த தவறுக்கு, இறைவனிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்சு. திருந்தியவனுக்கு, நிச்சயம் மன்னிப்பு கிட்டும்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us