
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 52; இளநிலை பட்டம் பெற்று, தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். என் கணவர் வயது, 54; தனியார் துறையில் உயர் பதவியில் உள்ளார். அடிக்கடி பணி நிமித்தமாக வெளியூர் செல்வார்; பொறுமைசாலி. எங்களுக்கு, இரு பெண்கள்; கல்லூரியில் படிக்கின்றனர்.
என் மாமனார் தங்கமானவர்; மாமியாருக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வரும். குடும்பத்தினர் அனைவரிடமும் மிகுந்த பாசம் உள்ளவர் என் கணவர். பல சமயங்களில், அம்மாவுக்காக, என்னிடம் கோபித்துக் கொள்வாரே தவிர, என்னிடம், ரொம்ப பிரியமாக இருப்பார். ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து வந்த என்னை, நன்றாக வைத்திருக்கிறார். எங்கள் தாம்பத்ய வாழ்க்கையும் மிக நன்றாக இருந்தது.
மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில், தற்போது புயல் வீசுகிறது. காரணம், நான் செய்த இமாலயத் தவறு!
என் உடன் பணிபுரியும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது பேச்சும், அனைவருக்கும் உதவும் குணமும், என்னை அவர்பால் ஈர்த்தது. அவருக்கும் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவியும், என்னிடம் பிரியமாக இருப்பாள்.
தவறு செய்கிறேன் என தெரிந்தே, தவறு செய்து விட்டேன். மிக ரகசியமாக சென்று கொண்டிருந்த எங்கள் உறவு, தற்போது, என் கணவருக்கு தெரிந்து விட்டது. நான், அவரிடம் பேசியதை, ஏதேச்சையாக கேட்டு விட்டார் என் கணவர்.
மிகுந்த கோபம் கொண்டு அடித்தார். மேலும், அன்றிலிருந்து என்னிடம் பேசுவதும் இல்லை. குடும்ப கவுரவத்துக்காகவும், பிள்ளைகளுக்காகவும் என்னுடன் இருப்பதாக கூறி, வாழ்ந்து வருகிறார்.
எனக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் போல் இருக்கிறது. நல்ல வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறேன். அவனை விட்டு பிரிந்து விட எண்ணுகிறேன். என் சூழ்நிலை தெரியாமல், அவன் என்னையே சுற்றி சுற்றி வருகிறான். என் கணவர் என்னை வேலையை விடுமாறு கூறுகிறார். 25 ஆண்டுகள் தாம்பத்ய வாழ்க்கையில் என்னை சந்தேகப்படாத கணவர், தற்போது, அனைத்து வகைகளிலும் கண்காணிக்கிறார். 'இனிமேல் அவனிடம் பேசினாலே விவாகரத்து தான்...' எனக் கூறி விட்டார்.
அவனை எப்படி தவிர்ப்பது என தெரியவில்லை. குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது; அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கிறேன்.
என் கணவரும், மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். ஒரு இளைஞனைப் போல் உற்சாகமாக இருக்கும், 'என்னவர்' இப்போது முடங்கிப்போய் கிடக்கிறார்; யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.
'கவுன்சிலிங் போகலாம்...' எனக் கூறுகிறார். யாருக்கும் தெரியாத என் தவறை, வேறு ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள மனம் தயங்குகிறது.
குழம்பிப் போய் மிகுந்த மன உளைச்சலில் உள்ள என்னை தெளிவு படுத்துங்கள். என் கணவர் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா? இந்தப் பிரச்னையில் இருந்து மீண்டு வருவது எப்படி? அவனை எப்படி தவிர்ப்பது? கவுன்சிலிங் போகலாமா? என் வாழ்வில் மீண்டும் வசந்தம் வருமா?
என் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு வழிகாட்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்புள்ள மகளுக்கு —
கொடிய போதை பழக்கம் போன்றது, கள்ளக் காதல். ஒருமுறை தொட்டுப் பார்த்தால் என்ன என்ற சபலத்துடன், திருமண பந்தம் மீறிய உறவை தொட்டு விட்டால், அது முதுகில் தொற்றிக் கொள்ளும்; அது தரும் கட்டளைகளை, தயக்கமின்றி செய்யும் மனோபாவம் வந்து விடும்.
பொதுவாக, 30 - 34 வயதில் தான், திருமண பந்தம் மீறிய உறவுகளில் அதிகம் ஈடுபடுவர் பெண்கள். நீ விதிவிலக்கு; 52 வயதில் ஈடுபட்டிருக்கிறாய். இந்த வயதிலும், உன் உடலழகை பேணி பாதுகாத்திருக்கிறாய். உன் கள்ளக் காதலன், உன்னை விட வயது குறைந்தவர் என நம்புகிறேன். சில இளைஞர்களுக்கு, முதிய பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள பிடிக்கும். சில முதிய பெண்களுக்கு, இளைஞர்களுடன் உறவு வைத்துக் கொள்ள ஆசை வரும். இவ்வகை விபரீத ஆசைக்கு, நீயோ, அவனோ பலி ஆகி விட்டீர்கள்.
ருசி கண்ட பூனை, பால் சட்டியை சுற்றிச் சுற்றி தான் வரும். பூனையை அடித்து விரட்டி, பால் சட்டியை நன்றாக மூடி வைக்க வேண்டும். கள்ளக் காதலனின் எண்ணை, கைபேசியிலிருந்து அகற்று; உன் கைபேசி எண்ணையும் மாற்று. தற்கொலை எண்ணத்தை விடு. அதீத ஒப்பனையிலிருந்து விடுபடு.
'நாம் முதியவளாக இருந்தும், இளைஞர்கள் நம்மை விருப்பமாய் பார்க்கின்றனரே... இளம் வயதில் தான் கற்பு, அது, இது என யோக்கியமாக இருந்து விட்டோம்; இப்போதாவது திருட்டு மாங்காயை ருசித்து பார்ப்போம்...' என்ற மனோபாவத்தை, விட்டொழி!
இரு மகள்களின் படிப்பு, வேலை மற்றும் திருமணம் ஆகியவற்றில் கவனம் செலுத்து. தாம்பத்ய வேட்கை எழுந்தால், கணவனிடம் தீர்த்துக் கொள். கணவனுடன் கோவிலுக்கு சென்று, இறைவன் முன்னிலையில் பாவ மன்னிப்பு கேள்.
நீ, திருந்தி விட்டாய் என்ற முழு நம்பிக்கையை உன் கணவருக்கு ஏற்படுத்து. அதற்கேற்ப, உன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள். அவர், உன்னை நிச்சயம் மன்னிப்பார்.
இந்தப் பிரச்னையிலிருந்து மீண்டு வருவது உன் கையில் தான் உள்ளது. உன் கள்ளக் காதலனை தவிர்க்க, விருப்ப ஓய்வே சிறந்தது.
மகளே... இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய வயதில் உள்ள உனக்கு எதற்கு தனியே ஆலோசனை? மனசாட்சி சொல்படி நட; அது போதும்!
செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, திருந்தி, உன் கணவரிடம் மன்னிப்பு கேள்; நிச்சயம் மீண்டும் வசந்தம் வரும்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

