
அன்புள்ள சகோதரிக்கு —
என் வயது, 55; கணவனை இழந்த என் தோழிக்கும், என் வயது தான். அவளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி, நல்ல நிலையில் உள்ளாள். மகன், பொறியியல் பட்டம் பெற்று, நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறான். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவள், தோழி. உறவு முறையில் பெண் பார்த்து, மகனுக்கு திருமணம் செய்து வைத்தாள். மருமகளும், பொறியியல் பட்டதாரி; இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
தோழி, தன் மருமகளுக்கு பல்வேறு இடையூறுகளை செய்ததுடன், மகனிடம், மருமகளை பற்றி பலவாறு குற்றம் குறை கூறி, மனக் கஷ்டத்தை ஏற்படுத்தினாள். இதனால், மருமகளின் பெற்றோர் மகள் வீட்டில் வந்து தங்கினர். ஒரே வீட்டில், ஐந்து பேரும் இருந்ததால், தினமும் சண்டை, சச்சரவு நிகழ்ந்தவாறு இருந்தது.
பெண் வீட்டாரும் வசதி மற்றும் வாய்ப் பேச்சில் சளைத்தவரல்ல. அதனால், இருவரும் காவல் நிலையம் மற்றும் நீதி மன்றம் என அலைந்தனர். பின், பெண் வீட்டாருக்கு, பல லட்சம் ரூபாய் கொடுத்து, நீதிமன்றம் மூலம் தன் மகனுக்கு விவாகரத்து பெற்றாள்.
அவளின் பிடிவாதம் மற்றும் அகம்பாவத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டாள். தோழியின் மகன் மிகவும் நல்லவன்; தன் அம்மாவின், 'டார்ச்சரால்' சில சமயம், தாய் பக்கம் பேசுவான்.
விவாகரத்து பெற்ற பின், இரண்டாவது பெண் பார்க்கும் படலம் துவங்கியது. தோழியின் குணம் அறிந்து யாரும் பெண் தர முன் வரவில்லை. பின், உறவுக்காரர்கள் மூலமாக நடுத்தர வசதி உள்ள குடும்பத்தில், பொறியியல் பட்டம் பெற்ற, விவாகரத்து பெற்ற பெண்ணை பார்த்தனர்.
அவர்கள் முதலில் பெண் தர மறுத்தனர். ஆனால், என் தோழிக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டதால், உறவினர்கள் மூலமாக மூளைச் சலவை செய்து, சம்மதிக்க வைத்தாள்.
பெண் வீட்டாரோ, தன் மகளின் முதல் திருமணம் குறித்து, நடந்த உண்மைகளை எல்லாம் சொல்லி, அவர்கள் சம்பந்தம் எடுத்த வீட்டாரின் விலாசம் கொடுத்து, விசாரிக்க கூறினர். நானும், என் தோழியும் விசாரித்த போது, அவர்கள், 'பெண்ணிற்கு, என் பையனை பிடிக்கவில்லை; அதனால், அவர்களுக்குள் எந்த உறவும் நடக்கவில்லை. நல்ல குண நலன்கள் உடைய பெண்...' என்று உண்மையை கூறினர்.
ஆனால், தோழியின் உறவினர் சிலர், பெண் வீட்டாருக்கு போன் செய்து, தோழியின் குண நலன்கள் பற்றிக் கூறியதுடன், 'அவள் கொடுமைப்படுத்துவாள்; பையனுக்கு ஆண்மை இல்லை...' என்று கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்தனர் பெண் வீட்டார். ஏனெனில், பையனுக்கும், பெண்ணிற்கும் ஒருவரையொருவர் பிடித்து விட்டது. மேலும், பெண்ணின் பெற்றோருக்கும் பையனை பிடித்து விட்டது.
இதனால், பெண்ணின் தந்தை, தன் நண்பரை வைத்து, தோழியின் பையனிடம் இந்த விஷயத்தை பற்றி பேசி, தெளிவு பெற்று, திருமணமும் நடந்து, தற்போது, தோழியின் மருமகள் கர்ப்பமாக இருக்கிறாள்.
இக்கடிதத்தை ஏன் எழுதியுள்ளேன் என்றால், இனியாவது என் தோழி, மருமகளை, மகளாக நினைத்து, அன்பாக நடத்த வேண்டும். மற்றவரின் மனம் புண்படும்படி பேச கூடாது.
என் தோழி போன்ற மாமியார் மற்றும் கணவன்மார்கள் உங்கள் அறிவுரையைக் கேட்டு திருந்த வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்புள்ள சகோதரிக்கு —
பொதுவாக, இப்பகுதிக்கு வாசக - வாசகியர் தங்கள் பிரச்னையை எழுதி, தீர்வு எதிர்பார்ப்பர்; நீங்களோ, உங்கள் தோழியின் குடும்பத்தில் நடந்த பிரச்னையை கூறி, மாமியார்களுக்கு அறிவுரை கூற கேட்டுள்ளீர்கள்.
பல பெற்றோர், தங்கள் மகன் மற்றும் மகளை சுதந்திரமாய் செயல்படவிடாமல், வானத்தை பார்த்தே நடக்க வைத்து, பாழுங்கிணற்றில் தள்ளி விடுகின்றனர்.
பெற்றோரின் அடவாடி செயலால், சொந்த பந்தம் மற்றும் நண்பர்களும் வெறுத்து போகின்றனர். அந்த வெறுப்பை, அவர்களது பிள்ளைகள் மீது உமிழ்கின்றனர். பெற்றோரின் கெட்ட, 'இமேஜ்' அடுத்த தலைமுறைக்கும் தாவுகிறது.
திருமணத்திற்கு பின், தன் மகன், மனைவி பக்கம் சாய்ந்து விடுவான் என்கிற பயத்தில், வில்லித்தனம் செய்கின்றனர், சில பெண்கள். பத்து மாதம் சுமந்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்து, படிக்க வைத்த மகனை, தாம்பத்ய சுகம் காட்டி, திருடி விடுவாள் மருமகள் என்கிற பயம் அம்மாக்களுக்கு ஏற்படுகிறது. மருமகளையும், தன்னையும் எல்லாவிதத்திலும் ஒப்பிட்டு பார்த்து, வெந்து, நொந்து சாகின்றனர் அம்மாமார்கள்.
கணவன் தான் தன் பேச்சை கேட்பதில்லை; மகனையாவது தலையாட்டி பொம்மையாக்குவோம் என்ற எண்ணத்துடன், மகனை செலுத்துகின்றனர். ஒரு வாகனத்தை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினாலும், ஓட்டுனர் தான் ஓட்ட முடியும். ஓட்டுனருக்கு பின்னிருந்து, 'ஸ்டியரிங்கை' பிடித்து, கூட்டாய் வாகனத்தை ஓட்ட முடியாது.
தோழியின் அடாவடி செயலை, நீங்கள் ஊமை பார்வையாளராய் இருந்து பார்த்து ரசித்துள்ளீர்கள். தோழி என்ற உரிமையுடன், நீங்களே தக்க தருணத்தில் அறிவுரை கூறியிருக்கலாம்; அதை செய்ய தவறி விட்டீர்கள்.
நாம் அனைவருமே கீதாசார வரியை மறக்க கூடாது...
'எதைக் கொண்டு வந்தோம், எதை கொண்டு போவதற்கு...' குடும்ப உறவை யாரும் பிறக்கும் போதே, இடுப்பில் சொருகி, வருவதில்லை. சாகும்போது, கழுத்தில் கட்டி கொண்டு போவதற்கு!
திருமண பந்தம் தந்த பரிசு தான், பிள்ளைகள்; அவர்களுக்கு, 25 வயதாகும் போது, அவர்கள் நமக்கு உரிமை இல்லை; ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ உரிமையானவர்களாய் ஆகி விடுகின்றனர் என்கிற நிதர்சனத்தை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். ஒருவருக்கொருவர், 'ஈகோ' மற்றும் பிடிவாதத்தை விடுத்து, சமரசத்துடன் வாழ்வது நல்லது; அதற்கு மனம் இல்லாவிட்டால், தனியே சென்று விட வேண்டும்.
பெற்றோரே... உங்கள் யோசனையை பிள்ளைகள் கேட்காவிட்டால், அவர்களுக்கு யோசனை கூறாதீர்கள். இறக்கை முளைத்த பறவைகள், சுதந்திரமாய் நீல வானத்தில் பறக்கட்டும்; பறக்கும் பறவைகளின் கால்களை பிடித்து தொங்காதீர்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

