PUBLISHED ON : நவ 25, 2018

அன்புள்ள அம்மா,
என் வயது: 33, கணவர் வயது: 37. இருவருமே, ஐ.டி., துறையில் பணிபுரிகிறோம். வீட்டில் பார்த்த வரன் தான் இவர். திருமணத்தின் போது, அவர், இன்ஜினியரிங் படிப்பை முழுவதுமாக முடிக்காமல் இருந்தார். அப்போதே நான், ஐ.டி., பணியில் இருந்தேன். படிப்பு, பணி, எதிலுமே எனக்கு சமமாக இல்லை.
என் பெற்றோர், திருமணத்துக்கு தயக்கம் காட்டினர். நான் தான் அவர் மீது இருந்த நம்பிக்கையில், மன பொருத்தம் இருந்தால் போதும் என்று கூறி, அவரையே திருமணம் செய்து கொண்டேன்.
அரைகுறையாய் நின்ற படிப்பை முடிக்க, கணவருக்கு உதவினேன். அவர், வங்கியில் வாங்கியிருந்த கல்வி கடனை அடைத்தேன்; குடும்ப பாரத்தையும் சுமந்தேன். இதற்கிடையில், எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அவரது படிப்பு முடியவும், எனக்கு, அமெரிக்கா நாட்டில் வேலை கிடைக்கவும் சரியாக இருந்தது. முயற்சி செய்து, அவருக்கும் அமெரிக்காவில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தேன்.
குழந்தையோடு இருவரும், அமெரிக்கா சென்றோம். சிறிது காலத்துக்கு பின், வேலையில் நிரந்தரமாகி, கையில் நிறைய பணம் புழங்க, என்னை ஒதுக்க ஆரம்பித்தார். குழந்தையை தன் பொறுப்பில் வளர்க்க, வழக்கு போட்டார். குழந்தை, என்னிடமே வளர தீர்ப்பானது.
அதன்பின், அவரது பேச்சும், நடவடிக்கையும் கொடூரமானது. நான் விவாகரத்து வழக்கு தொடுத்தேன். ஆனால், அவரோ, 'மனம் ஒப்பாத விவாகரத்து' என்று மறு வழக்கு தொடுத்துள்ளார்.
என்னையும், குழந்தையையும் படாதபாடு படுத்தி வருகிறார். நிம்மதியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. சொந்த நாடு திரும்பவும், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை. எனக்கு நல்வழி காட்டுங்கள் அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு—
அமெரிக்கா போய் கை நிறைய சம்பாதிக்கும் இந்திய ஆண்கள், தலைமுறை தலைமுறையாய் குடியிருக்கும் பூர்வீக அமெரிக்க ஆண்களை விட, அதிகம் உல்லாசங்களில் திளைக்கின்றனர். அடிப்படையில், இந்தியர்கள் என்பதை மறந்து, தங்களை ஒரிஜினல் அமெரிக்கர்களாக பாவிக்கின்றனர்.
இந்தியாவில் திருமணம் செய்து, அமெரிக்காவில் வாழும் கணவன் - மனைவி, அங்கு வழக்கு போட்டு விவாகரத்து பெற்றால், அந்த விவாகரத்து அமெரிக்காவில் மட்டும் செல்லுபடியாகும்; இந்தியாவில் செல்லுபடி ஆகாது. ஒரு இந்தியர், வெளிநாட்டு வழக்கில் வெற்றி பெற்றாலோ, தோல்வியுற்றாலோ, அது, இந்தியாவிலும் செல்லுபடியாக, இரு நாட்டு ஒப்பந்தம் தேவை.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரக உயர் அதிகாரியை அணுகி, உன் பிரச்னைகளை கூறி, ஆலோசனை பெறலாம். இந்திய தூதரகம் அல்லது வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் மூலமாக இந்தியா திரும்பு. உன் கணவர் மீது, பிற மகளிர் தொடர்பு, உடல் மற்றும் மன ரீதியாக சித்திரவதை, இருவருக்கிடையே தாம்பத்ய உறவு இல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்களை காட்டி, இங்கு, சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்.
இந்திய கோர்ட், உன் கணவருக்கு சம்மன் அனுப்பும். அவர், இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். விவாகரத்து கோரி, சிவில் வழக்கும், கொலை முயற்சி எனக் கூறி, கிரிமினல் வழக்கும் தொடரலாம்.
கணவருக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் சேகரி; இல்லாவிட்டால் உருவாக்கு. கணவருக்கு எதிராக, உன் மகனை சாட்சி சொல்ல வைக்க பயிற்சி கொடு. நயவஞ்சகத்தை, நயவஞ்சகத்தால் முறியடி.
இந்து திருமண சட்டத்தை லாவகமாக கையாண்டு, வழக்கில் வெற்றி பெறு. அமெரிக்காவில் நடந்த வழக்கில், மகன் உன்னுடன் இருக்க, சாதகமாய் தீர்ப்பு வந்தது இல்லையா. அதை, இந்திய வழக்கில் சாதகமாக பயன்படுத்து.
கொலை முயற்சி, பிற மகளிர் தொடர்பால் மாற்று மதம் தாவ தயாராக இருத்தல், இயற்கைக்கு முரணான விதத்தில் தாம்பத்ய விருப்பம், குடிப்பழக்கம்... இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் கணவர் மீண்டும் எழாமல் பார்த்துக் கொள். அமெரிக்காவில், எந்த இடத்தில் உன் கணவர் வேலை பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்தாயோ, அந்த வேலையிலிருந்து வெளியேற்ற பார்.
'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா...' என, வீறுகொண்டு எழு. வெற்றி உனதே!
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
