PUBLISHED ON : நவ 25, 2018

பொன்னாங்கண்ணி கீரை, அனைவரும் அறிந்தது தான். ஆனால், அதிலே பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி, தன்னுள் தேக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையும், பொன் சத்தை பெற்றிருக்கிறது.
* பொன்னாங்கண்ணி கீரை, ஓர் அற்புதமான உடல் தேற்றி. இன்று, பெரிய செல்வந்தர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப் போனது தங்கபஸ்பம். ஆனாலும், அதை ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருக்கிறார், இறைவன்
* நவீன மருத்துவத்தில், 'கோல்ட் குளோரைடு' என்று, தங்கத்தை, உப்பு நிலையில் மாற்றி மருந்தாகக் கொடுப்பர். இது, உடல் வலியைப் போக்குவது மட்டுமின்றி, உடலுக்கு பலத்தையும் தரவல்லது
* பொன்னாங்கண்ணி கீரை, தாய்ப்பாலை பெருக்கும். பித்தப்பை சீராக இயங்கச் செய்யும் மற்றும் தூக்கத்தை தூண்ட கூடியது
* நரம்புக் மண்டலத்தை சீர் செய்து, சாந்தப்படுத்தக் கூடியது. எனவே, பல்வேறு நரம்பு நோய்கள் வராமல் தடுக்கிறது
* ஞாபக சக்தியைத் தூண்ட கூடியது. உடல் உஷ்ணம் நீங்கி, கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. இதன் சாறு, பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது
* ரத்த வாந்தியை நிறுத்தக் கூடியது
* பொன்னாங்கண்ணி கீரை விழுதை, எண்ணெயில் இட்டு காய்ச்சி, தலைக்கு தடவினால், தலைமுடி செழுமையாக வளரும்
* இக்கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால், ரத்த அழுத்த குறைவு கட்டுப்படும். இரைப்பை கோளாறுகள் இல்லாமல் போகும். 'கொனேரியா' எனும் பால்வினை நோய் குணமாகும்
* ஆண்களின் மலட்டு தன்மையையும், இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்து
* பொன்னாங்கண்ணி கீரையை, அரைத்து, முகத்தில் பூசி வந்தால், முகப்பருக்கள் போவதோடு, கரும்புள்ளிகளும் காணாமல் போகும்; முகம் பொலிவு பெறும்
* இக்கீரை, சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது. பேதி மற்றும் சீதபேதியை கட்டுப்படுத்த வல்லது.
* குடலிறக்க நோய் வராமல் இருக்கவும், நெஞ்சு சளியை கரைக்கவும், மார்பு இறுக்கத்தை போக்கவும் வல்லது. ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்றுகிறது. நுண்கிருமிகளை அழிக்க வல்லது
* புண்களை ஆற்றக் கூடியது. ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி, புற்று நோய் வரா வண்ணம் தடுக்க கூடியது. உடலுக்கு உற்சாகம் தரவும் வல்லது
* ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தை குறைக்க வல்லது. பூஞ்சைக் காளான்களை துரத்த வல்லது
* பொன்னாங்கண்ணி கீரையை வேக வைத்து, உப்பு சேர்க்காமல் இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர, கண் பார்வை தெளிவு பெறும்; கண் நோய்கள் விலகும்
* கீரையை நன்கு மைய அரைத்து, நீர் நிரப்பிய மண்பானை மீது அப்பி, மறு நாள் காலையில் எடுத்து கண்களின்மேல் சிறிது நேரம் கட்டி வைத்து அவிழ்க்க, கண் நோய் குணமாகும்
* பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு, பசுவின் பால் மற்றும் கரிசலாங்கண்ணிச் சாறு, இவைகளை சம அளவு எடுத்து, இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி, மெழுகு பதத்தில் வந்ததும், வடிகட்டி, தலைக்கு தேய்த்து குளித்து வர, 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்
* இக்கீரையை வதக்கி, மிளகு, போதிய அளவு உப்பு சேர்த்து, ஒரு மண்டலம் உண்ண, உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும்
* ஒரு பிடி பொன்னாங்கண்ணி கீரையை, காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று, பசும்பால் அருந்தி வர, உடல் குளிர்ச்சி பெற்று, ஈரல் நோய் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கி, பார்வையும் தெளிவு பெறும்
பொன்னாங்கண்ணி கீரை, பொன்மேனி தருவதோடு, கண்களுக்கு நன்மையும், தலைமுடிக்கு வளத்தையும், ரத்தப் பெருக்கையும், உடல் குளிர்ச்சியையும் தரக் கூடியது என்பதை நினைவில் நிறுத்தி, நித்தமும் பயன்படுத்துவோர், நூறாண்டு வாழ்வர்.
- கைலாஷ்
