PUBLISHED ON : ஆக 25, 2019

அன்புள்ள அம்மா —
என் வயது, 27, படிப்பு: பி.காம்., கணவர் வயது, 33. எம்.பி.ஏ., படித்து, தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது; குழந்தைகள் இல்லை.
நான் பள்ளியில் படிக்கும்போது, உயிர் தோழி ஒருத்தி, விஷக் காய்ச்சலால் இறந்து போனாள். அவளது இறுதி மூச்சு நின்றபோது, அருகிலேயே இருந்த எனக்கு, அந்த அதிர்ச்சி விலகவே இல்லை.
மேலும், எங்கள் வீட்டில், ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அந்த சூழ்நிலையில் வளர்ந்த எனக்கும், நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
இந்நிலையில், எங்கள் வீட்டுக்கு வந்த ஜோதிடரிடம், என் ஜாதகத்தை கொடுத்தனர், பெற்றோர்.
'ஜாதகத்தில் தோஷம் உள்ளது. என்னை துரத்திய சாவு, உடன் இருந்த உயிரை பலி வாங்கி விட்டது...' என்று கூறினார், ஜோதிடர்.
எனக்கு வந்த காலன் தான், என் தோழியை பாதித்ததோ என்று எண்ணி வருத்தமடைந்தேன். இதனால், குற்ற உணர்வில் பரிதவித்து போனேன்.
போதாக்குறைக்கு, 'என் ஜாதகப்படி, என்னுடன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும்...' என்று கூறினார். பெற்றோர் பயந்து, விடுதியில், சேர்த்து, என்னை படிக்க வைத்தனர்.
தோழியின் மரணம் குறித்த குற்ற உணர்வும், நெருக்கமானவர்களுக்கு என்னால் ஆபத்து ஏற்படும் என்று ஜோதிடர் கூறியதும், என்னை அலைக்கழித்தது. அதிலிருந்து, நட்பு வட்டம் அல்லது உறவினர்கள் யாராவது இறந்தால், என் மனம் நடுநடுங்க ஆரம்பித்தது. நாளாக நாளாக, ஏதாவது இறப்பு செய்தியை கேட்டாலே, பயத்தில் உடல் நடுங்குகிறது.
இதுபற்றி, என் பெற்றோரிடம் கூற, 'அதெல்லாம் மன பிரமை... அதையே நினைத்து, உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே...' என்று கூறி, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
புகுந்த வீட்டுக்கு வந்த பின்னும், என் நிலை மாறவே இல்லை. கணவரது உறவினர் என, யாருடைய இறந்த செய்தியை கேள்விப்பட்டாலும், உடல் நடுங்கி, வியர்த்து, மயக்கமே வந்து விடும். இதனால், எனக்கு ஏதோ பிரச்னை என்று உணர்ந்த கணவர், விசாரித்தார். கடந்த கால விஷயத்தை கூறினேன்.
மனநல மருத்துவரிடம், சிகிச்சை பெறலாம் என்று அழைத்தார், கணவர். ஆனால், எனக்கு தான் தயக்கமாக உள்ளது.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால், 'மனநிலை சரியில்லாதவள்' என்று முத்திரை குத்தி விடுவரோ என்று தவிக்கிறேன். 'பைத்தியம்' என்று கூறி, கணவர், கைவிட்டு விடுவாரோ என்றும், பயமாக இருக்கிறது.
இந்த பிரச்னையிலிருந்து விடுபட, நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
பூமியில், ஒவ்வொரு நொடியும் லட்சக்கணக்கான உயிர்கள் பிறக்கின்றன; லட்சக்கணக்கான உயிர்கள் இறக்கின்றன. பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும், மரணம் மற்றும் அதிகபட்சம் எத்தனை நாள் வாழும் என்ற கணக்கு உண்டு.
மனிதன் பிறந்த ஒரு ஆண்டுக்குள் இறந்தால், சிசு மரணம் எனவும், 20 வயதில் இறந்தால், அகால மரணம், 80 வயதில் இறந்தால், சிவலோக பதவி அடைந்தார் எனவும் கூறுவர். ஒரு உயிர் பிறப்பதும், இறப்பதும், இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் பணி.
ஒரு மனிதன், இன்னொரு மனிதனை கொலை செய்தாலோ, தற்கொலைக்கு துாண்டினாலோ, தவறான மருத்துவம் பார்த்து, நோயாளியின் இறப்புக்கு காரணமானாலோ குற்றம். மற்றபடி, ஜாதக தோஷத்தால் பிறர் மரணத்திற்கு ஒருவர் காரணமாக இருப்பார் என்பது, மூடநம்பிக்கை.
ஒரு விமானத்தில் பறக்கிறாய். விமானம் விபத்துக்குள்ளாகி, உன்னை தவிர அனைத்து பயணியரும் உடல் கருகி இறந்து விடுகின்றனர். நீ மட்டும் தப்பித்து கொள்கிறாய். என்ன நினைப்பாய்... 'இறைவன் அருளால் நாம் உயிர் பிழைத்தோம்...' என்றுதானே...
அதை விட்டு, 'என்னால், 262 பயணியர் இறந்து விட்டனர்; நான் ஒரு கொலையாளி. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்...' என, முட்டாள்தனமாய் முடிவெடுப்பாயா?
உன் ஜாதகப்படி, உன்னுடன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஆபத்தும், மரணமும் ஏற்படும் என, பெற்றோர் உன்னை விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர் என்றுள்ளாயே... உன் ஜாதக தோஷம், உண்மை என்றால், விடுதி தோழிகளுக்கு ஆபத்தும், மரணமும் ஏற்பட்டிருக்க வேண்டாமோ?
வாழ்க்கை, ஒரு ரயில் பயணம். அதில் பயணிக்கிறோம். அவரவர் இறங்க வேண்டிய நிலையம் வந்ததும், இறங்கி போய் விடுகின்றனர். இறங்க வேண்டிய நிலையம் வராததால், நாம் இன்னும் வாழ்க்கை ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நாம் இறங்க வேண்டிய நிலையம் வரும்; அப்போது, இறங்கி தான் தீரவேண்டும். ஏற்கனவே இறங்கியவர்கள், நம்மால் இறங்கவில்லை; நாம் அவர்களை தள்ளியும் விடவில்லை.
மனிதனின் மரபணுவில், அவன் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வான் என்பது, தெளிவாக பச்சை குத்தப்பட்டுள்ளது என்கிறது, விஞ்ஞானம்.
ஒரு ஆணோ, பெண்ணோ, எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்தனர் என்பது முக்கியமல்ல... உயிரோடு இருந்த வரை, எவ்வளவு பேருக்கு உதவியாக இருந்தனர் என்பதே முக்கியம்.
மரணத்தை தத்துவார்த்தமாக அணுக வேண்டும்; உணர்ச்சிப்பூர்வமாக அல்ல. நாம் நினைப்பது போல பிரளய வேதனையை தருவதல்ல, மரணம்; பூரண அமைதியை தருவது.
இப்போதெல்லாம், பள்ளி மாணவர்களில் இருந்து, முதியோர் வரை, அனைவருக்கும் மன நல ஆலோசனை தேவைப்படுகிறது.
மகளே... நீ மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டாம், வெறும் ஆலோசனை பெறு. ஆலோசனை பெறுபவர்கள் எல்லாம், மனநிலை சரியில்லாதவர்கள் அல்ல.
உன் உறவு, நட்பு வட்ட அங்கத்தினர்கள் நீண்ட நாள் வாழ, இறைவனை பிரார்த்தனை செய். உனக்கும், கணவருக்கும் சேர்த்து பிரார்த்தி.
ஒவ்வொரு மனித உயிரும் இறப்பதற்கு முன், அவரவர் பணியில் ஏதாவது சாதித்து, மரணத்திற்கு பின்னரும் அவர்களின் புகழ் அழியாதிருக்க வழி செய்திடல் நலம். மரணத்தை நற்காரியங்களால், சாதனைகளால் மனித நேயத்தை வெல்வோம், மகளே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்
