தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 38 வயது பெண். கணவர் இறந்து விட்டார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்; வயது முறையே, 11 மற்றும் 13. கணவருடன் பிறந்தவர் ஒரு தங்கை. திருமணமாகி, சென்னையில் வசிக்கிறாள்.

நான், பி.காம்., கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோதே, நல்ல வரன் என்று, திருமணம் செய்து வைத்து விட்டனர். கணவர் வீடு வசதியானது. ரைஸ் மில், மாட்டு பண்ணை, கோழி பண்ணை எல்லாம் வைத்திருந்தனர். அதையெல்லாம் கணவரும், மாமனாரும் தான் பார்த்துக் கொண்டனர்.

கணவர் இறந்த பின், என்னை, அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டனர். வேலையும் இல்லை, பிறந்த வீட்டில் அவ்வளவு வசதி போதாது. இரு குழந்தைகளை எப்படி கரை சேர்ப்பதென்று புரியாமல், தடுமாறி விட்டேன்.

நீண்ட யோசனைக்கு பின், மாமனாரிடம் சென்று, கணவர் பங்கை கொடுக்கும்படி மன்றாடினேன். முதலில் மறுத்தவர், ஊர் மக்கள் சொல்லியபின், ரைஸ் மில்லையும், ஒரு சிறிய வீட்டையும் தர சம்மதித்தார். ஆனால், எழுத்துப்பூர்வமாக எதுவும் எழுதி தரவில்லை.

ரைஸ் மில் பற்றி, எனக்கு ஒன்றும் தெரியாது. சரிவர நடத்த முடியாவிட்டால், மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாரோ என்னவோ!

ஆரம்பத்தில், கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. அதன்பின், அங்கு வேலை பார்த்தவர்களிடம் ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, ரைஸ் மில்லை நடத்த ஆரம்பித்தேன். தொழில் கைவசமானது.

வங்கியில் கடன் வாங்கி, பக்கத்திலேயே, மிளகாய் மற்றும் தனியா அரைக்கும் இயந்திரத்தை போட்டு, தொழிலை விரிவுபடுத்தினேன். மாமனார் கொடுத்த சிறிய வீட்டை செப்பனிட்டு, மாடி வீடாக கட்டியுள்ளேன்.

மகள்கள் இருவரும் கல்லுாரியில் படிக்கின்றனர். அவர்களின் திருமணத்துக்காக பணம் சேர்த்து வருகிறேன். இந்நிலையில், ரைஸ் மில்லை திரும்ப கேட்கிறார், மாமனார்.

தொழிலை விட்டுக் கொடுக்க மனம் இல்லை. அவ்வூர் பெரிய மனிதரிடம் முறையிட்டும், பலனில்லை.

அடிக்கடி வந்து, வேலை செய்யும் ஆட்களை மிரட்டிச் செல்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

பொதுவாக மாமனார் உறவு, இரண்டாவது தந்தை உறவுக்கு சமம். சில விதிவிலக்குகள் இருக்கலாம். மருமகள் மீது அன்பும், பாசமும் இல்லாவிட்டாலும், பேத்திகள் மீது அளவற்ற பாசமும், கருணையும் இருக்கத்தானே செய்யும். தான் ஆடாவிட்டாலும், சதை ஆடும் அல்லவா?

உன் கடிதத்தில், இரு நெருடல்கள் உள்ளன. ஒன்று-: எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்காமல், 'வெறுமனே வீட்டையும், ரைஸ் மில்லையும் அனுபவித்துக் கொள்...' என, உன் மாமனார் கொடுத்தாரா அல்லது '10 ஆண்டுகளுக்கு அனுபவித்து கொள்...' என, 'பவர் ஆப் அட்டர்னி' கொடுத்தாரா... 10 ஆண்டுகள் நிறைவுற்ற பின், வீட்டையும், ரைஸ் மில்லையும் திரும்ப கேட்கிறாரா...

இரண்டு: வீடோ, ரைஸ் மில்லோ உன் பெயரில் இல்லை. ஆனால், வங்கிக் கடன் பெற்றதாக எழுதியுள்ளாய். வங்கியில் எப்படி கடன் கொடுத்தனர். சொத்துள்ள உறவினர் யாராவது, தங்களது சொத்தை அடமானமாக எழுதி கொடுத்தனரா, யாரை ஜாமீன்தாரராக பிடித்தாய் என்ற விபரங்கள் எதுவும், உன் கடிதத்தில் இல்லை.

ஏறக்குறைய, 10 ஆண்டுகள், ரைஸ் மில்லும், வீடும் உன், 'கஸ்டடி'யில் இருந்திருக்கிறது.

வீடு புதுப்பிப்பு, ரைஸ் மில்லுக்கு இயந்திரங்கள் வாங்கி போட்ட செலவு மற்றும் 10 ஆண்டு உழைப்புக்கான கூலியை, ஒரு தொகையாக கணக்கிடு. 'அந்தத் தொகையை பகடியாக கொடுங்கள். வீட்டையும், ரைஸ் மில்லையும் ஒப்படைத்து விடுகிறேன்...' என, கூறு.

ரைஸ் மில்லுக்கு வந்து, ஆட்களை வைத்து, மாமனார் மிரட்டினால், பதிலுக்கு நீயும் கத்தி, அவரை அச்சுறுத்து. மாமனார் வந்து வம்பு பண்ணும்போது, நீயும், உன் மகள்களும் கூட்டு சேர்ந்து எதிர்ப்பைக் காட்டுங்கள்.

'கொடுத்த சொத்தை எதற்கு திரும்ப கேட்கிறாய். அதற்கு பதிலாக, ரைஸ் மில்லையும், வீட்டையும், எங்கள் பெயரில் எழுது. பேத்திகள் வாழ்க்கையை ஏன் கெடுக்கப் பார்க்கிறாய். வயதான காலத்தில் புண்ணியத்தை தேடு, தாத்தா...' என, பேத்திகளை, தாத்தாவிடம் முறையிட சொல்.

ரைஸ் மில்லையும், வீட்டையும் காலி பண்ண சொல்லி, காவல் நிலையம் மூலம், மாமனார் நெருக்கடி கொடுத்தால், 'நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறேன்...' என, காவல் நிலையத்தில் தெரிவி. உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்றால், அந்த வழக்கு பல ஆண்டுகளுக்கு ஆமையாக நகரும்.

வழக்கு நடக்கும்போது, மாமனார் சமாதானத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது.

உன் கையிலிருக்கும் சிறு சேமிப்பு தொகையை கொடுத்தால், வழக்கை வாபஸ் பெற்று, வீட்டையும் ரைஸ் மில்லையும் பேத்திகளுக்கு எழுதி வைப்பாரா எனக் கேள்.

மொத்தத்தில் சூழ்ச்சிக்காரனுக்கு, பெரிய சூழ்ச்சிக்காரனாய் மாறி மோது, கண்ணம்மா. இறுதி வெற்றி உனதே மகளே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us