தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா -

நான், பி.எஸ்சி., முதலாமாண்டு மாணவி. என் பெற்றோர் குக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள். சென்னையில், என் அக்கா வீட்டில் தங்கி, படிக்கிறேன்.

அக்கா என்னை விட, ஐந்து வயது பெரியவள். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அக்காவுக்கு ஏற்ற அழகர், மாமா; கல்லுாரி விரிவுரையாளர். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.

இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டில், ஒன்றில் நானும், மற்றொன்றில், அவர்களும் இருக்கின்றனர். இரண்டு அறைகளும் எதிர் எதிரே இருக்கும்.

தினமும் அதிகாலையில் எழுந்து அக்கா குளிக்க போனதும், என் அறைக்கு வந்து, கட்டிலில் படுத்துக் கொள்வார், மாமா. என்னை அணைத்து முத்தமிட்டு கொஞ்சுவார். முகத்தை வருடும் கை, மெல்ல மெல்ல கீழே இறங்கும்.

ஆரம்பத்தில் திடுக்கிட்டு பயந்த என்னிடம், 'பைத்தியம். இதுக்கா அழுவுற... கல்யாணத்துக்கு முன்னால பார்த்திருந்தேன்னு வச்சுக்க, உன்னைத் தான் கட்டியிருப்பேன். அக்காவை விட கொள்ளை அழகு நீ. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல, படிச்சு முடி, உன்னையும் நானே கட்டிக்கிறேன்...' என, மெல்ல சிரித்தபடி கூறுவார், மாமா.

முதலில் பயந்த நான், தற்போது, அவருக்காக காத்திருக்க ஆரம்பித்து விட்டேன். ஒருநாள் காலை, அவர் வராது போனால் கூட தவிக்கிறேன். பித்துப் பிடித்தவளாகிறேன். கல்லுாரிக்கு போக பிடிக்கவில்லை. பாடங்களில் கவனமில்லை. மாமா, மாமா, மாமா தான்!

'கல்லுாரிக்கு ஒருநாள் விடுப்பு போட்டு, மகாபலிபுரம் போய் ஓட்டலில் அறை எடுத்து தங்கலாம்...' என்று கூப்பிடுகிறார், மாமா. போகலாம் என்று ஒரு நேரமும், வேண்டாம் என்று மறு நேரமும் தோன்றுகிறது. அவர் தான் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்கிறாரே என, தைரியம் வருகிறது. கூடவே பயமாகவும் இருக்கிறது.

என்ன செய்யட்டும் அம்மா?

இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு,

எத்தனை தைரியம் உனக்கு; எவ்வளவு துணிவிருந்தால் இதுபோன்றதொரு கேள்வியை கேட்பாய்?

உன்னை மாதிரியானவர்கள் இருப்பதைத் தான், 'உடன் பிறந்தே கொல்லும் வியாதி' என்கின்றனர். உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் பாதகி, நீ. அக்காவின் மண வாழ்க்கையை மட்டும் நீ அழிக்கவில்லை, உன் வாழ்க்கையையும் சேர்த்தே அழித்துக் கொள்கிறாய்.

கல்லுாரி மாணவி என்கிறாயே, நாட்டு நடப்பு தெரியாதவளா நீ. எத்தனை இளம் பெண்கள் அறிந்தும், அறியாமலும் சிதைக்கப் பட்டிருக்கின்றனர். உன் அக்கா கணவர், கல்லுாரி ஆசிரியர் தானே?

இதுபோன்ற கபட வேடதாரி கல்லுாரி ஆசிரியர்கள், எத்தனை பேரை கைது செய்திருக்கின்றனர். 'மீ டூ'வில் எத்தனை பிரபலங்கள் புகார் அளித்திருக்கின்றனர். நீ, செய்தித்தாள் படிப்பதில்லையா... 'டிவி' செய்திகளை பார்ப்பதில்லையா?

கல்யாணமாகாத ஆண் சொல்வதையே நம்ப முடியாது. கல்யாணமானவன், அதுவும் உடன் பிறந்த அக்காவின் கணவனை எப்படி நம்புகிறாய்? இது நம்பிக்கையா அல்லது உடல் இச்சையா?

எதுவானாலும் பெண்ணே... உடனே விலகு. எல்லா துரோகத்திலும் பெரியது, நம்பிக்கை துரோகம். உன்னை நம்பி, உடன் அழைத்து வந்து சோறு போட்டு, இருக்க இடம் தந்து படிக்க வைக்கிறாளே... அவளுக்கு நீ செய்கிற பிரதி உபகாரம் இதுதானா!

இந்த படிப்பு இல்லாவிட்டால் போகிறது. உடனே, ஊருக்கு கிளம்பு. அங்கு போய் பெற்றோருடன் பாதுகாப்பாக இரு. அஞ்சல் வழி கல்வியை மேற்கொள்.

அழ அழச் சொல்லுவாங்க தன் மனுஷங்க, சிரிக்க சிரிக்கச் சொல்லுவாங்க, பிற மனுஷங்க; முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேலைக்கு தான் நஷ்டம்!

இதெல்லாம் வெறும் பழமொழிகள் இல்லை; பழக வேண்டிய மொழிகள். புரிந்து கொள். பெட்டி, படுக்கையை துாக்கிக் கொண்டு, ஊருக்கு உடனே கிளம்புகிற வழியை பார்.

தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும், நஷ்டம் உனக்கு மட்டுமல்ல, அக்கா, அப்பா - அம்மா என, ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே தான்.

ஒருமுறை புத்தரிடம், 'நீங்கள் பெரிய மகான். எதற்காக தரையில் அமர்ந்திருக்கிறீர்கள்?' என, ஒருவர் கேட்டார்.

அதற்கு, 'தரையில் அமர்ந்திருப்பவன் தவறி விழ மாட்டான்...' என்றார், புத்தர்,

நல்ல காலமாக நீ, இன்னும் விழவில்லை. தவறினாயே தவிர விழவில்லை. விழுவதற்கு முன் எழுந்து ஓடு. அந்த வீட்டை விட்டு, உன் பெற்றோரிடம் செல்.

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us