PUBLISHED ON : மே 16, 2021

முன்கதை சுருக்கம்: வரும் வாரமே நிச்சயம் முடித்து, ஆறு மாதத்துக்கு வேலை பார்த்தால் போதும் என, தமிழ்ச்செல்வியின் வீட்டில் முடிவெடுக்கப்பட்டது. ரிஷி தங்கியிருக்கும் தெருவிலேயே, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 'லிவ்விங் டுகெதர்' ஜோடி இருப்பதாக கூறினாள், மாமி. ரிஷியை அழைத்த ஜனா, நடிகர் சுஜீத்தை பார்க்க போகலாம் எனக்கூறி, குத்தலாக கேள்விகள் கேட்க உணர்ச்சிவசப்பட்டான்-
ஜனாவின் முன் போய், திகைப்போடு அவரை பார்த்தவன், மிகுந்த உணர்ச்சிகளுடன், ''சார், ப்ளீஸ் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்,'' என்றான்.
''நான் கேட்டதுல என்ன தப்பு... தமிழ்க்கு கல்யாணம்ன்னு, இப்ப சேனல்ல எல்லாருக்கும் தெரிஞ்சாலே போதும். உடனே, இப்படித்தான் நினைப்பாங்க... வேணும்ன்னா நான் இப்ப, இந்த செய்தியை, 'ஸ்ப்ரெட்' பண்றேன்; என்ன நடக்குதுன்னு பார்க்கறியா?''
ஜனா கேட்ட விதத்தில், 'என்னையா ஓவர் லுக் பண்றே?' என்ற காட்டம், பளிச்சென்று தெரிந்தது.
''சார், திஸ் ஈஸ் டூ மச்... தமிழ்க்கு கல்யாணம்கிறது, அவ சொந்த விஷயம். அதை வெச்சு நீங்க என் மேல, உங்களுக்கு இருக்கிற கோபத்தை தீர்த்துக்க பார்க்காதீங்க. நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள்; அவ்ளோ தான்.''
''சரி... நீ சொன்ன மாதிரி, அது, அவ சொந்த விஷயம். ஆனா, இப்ப நான் அதை பேசியாக வேண்டிய நிலையில இருக்கேன்... கல்யாணம்ன்னு அவளால வர முடியாம போனா, வேற ஏற்பாடு செய்யணும்ல்ல?''
''கட்டாயம் அவ வருவா சார்... நேத்து கூட என்கிட்ட பேசினா.''
''வரேன்னு சொன்னவ, கல்யாணத்தை பத்தி எதுவும் சொல்லலியே?''
''அவ சொல்றா, சொல்லலை... உங்களுக்கென்ன சார்?''
''சரி... இப்ப, சுஜித்தை பார்க்க நான் கிளம்பிட்டேன். நீ வர்றியா, இல்லையா?''
ஜனா அலட்சியமாக கேட்டு, எழுந்த விதமே, உங்களை, இந்த நிகழ்வை நான் நிம்மதியாக நடத்த விடமாட்டேன் என்பது போல் இருந்தது.
நேற்று வரை, தனக்கும், இந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஒதுங்கி இருந்தார். இன்று, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதை, ஜீரணிக்க முடியவில்லை; புரிந்து கொள்ளவும் முடியவில்லை, ரிஷியால்.
அதற்காக, அவர் போக்கிற்கு போவதும் சரியாகத் தோன்றவில்லை. சற்று தடுமாறியவன், ''ஒன் மினிட் சார்... என் கேபினுக்கு போய், மொபைல் போனை எடுத்து வந்துடறேன்,'' என்று, அங்கிருந்து விலகினான்.
கேபினுக்குள் நுழைந்தபோது, பக்கத்து கேபின் பத்மஜா, தன் கம்ப்யூட்டரில், 'ஆப்' மூலம், 'டைட்டில் டிசைன்' ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தாள். ரிஷி வரவும், ஏறிட்டவள், ''ரிஷி, ஒரு நிமிஷம்,'' என்றாள்.
அவள் அருகே சென்றான்.
நாலாபுறமும் பார்த்தவள், சற்று தழைந்த குரலில், ''ஒரு முக்கியமான விஷயம்... சுஜித்குமார் நிகழ்ச்சியில, உனக்கு நல்ல பெயர் கிடைச்சிடக் கூடாதுன்னு, ஜனா சார் ஏதோ, 'பிளான்' பண்ணி இருக்கிறதா ஒரு தகவல் காதுக்கு வந்தது,'' என்றாள்.
''தெரியும் பத்மஜா... அந்த ஆள் ஆரம்பத்திலிருந்தே குடைசல் கொடுத்துகிட்டே தான் இருக்காரு. இப்ப கூட சுஜித்குமாரை அழைக்க போகணும் வர்றியான்னு கேட்டு, ஒரே கலாட்டா...
''எனக்கு தெரியாம, 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கி, தயாரா இருக்கான், மனுஷன். துார நின்னு, நடக்கறத நீங்க பார்த்தா போதும்ன்னு தான், நான் சொன்னேன். ஆனா, அந்த ஆள் அப்படி நடக்கற மாதிரி தெரியல எனக்கு,'' என்று, சற்று பெருமூச்சு விட்டான்.
''ஜாக்கிரதை ரிஷி... எனக்கு தெரிஞ்சு, உன்னை விட தமிழ்ச்செல்விக்கு தான், இது கனவு திட்டம். வருங்காலத்தில், சுஜித்குமாரை வெச்சு, ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை தயார் செய்யணும்கறதும், அவளோட கனவு,'' என்றாள், பத்மஜா.
''பை த பை... தமிழ், மதுரைக்கு போயிட்டு, உனக்கு போன் பண்ணினாளா?''
''இல்லை... நான் பண்ணினேன். 'ஸ்விட்ச் ஆப்'ன்னு வந்தது... 'மெசேஜ்' மட்டும் கொடுத்துருக்கேன்.''
''அவளுக்கு, அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடு நடக்குது... இந்த விஷயம் எனக்கும் தெரியல, உனக்கும் தெரியல. ஆனா, ஜனா சாருக்கு தெரிஞ்சிருக்கு.''
''நிஜமாவா... அப்ப, அம்மாவுக்கு, 'சீரியஸ்'ன்னு சொன்னதெல்லாம்?''
''அது உண்மை... அவங்க அம்மா உடல்நிலையை காரணம் காட்டி தான் ஏதோ நடந்துகிட்டிருக்குன்னு நினைக்கிறேன். தமிழ் என்கிட்ட பேசினப்ப, இன்னும் கூட பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கலன்னு, ஒரு மாதிரி பேசினா... அதுக்கு அர்த்தம் எனக்கு இப்பதான் புரியுது,'' என்றான், ரிஷி.
''எனிவே... ஜாக்கிரதை.''
''தேங்க்ஸ் பத்மஜா,'' என்றபடியே புறப்பட்டான்.
சேனலின் லோகோ பொறிக்கப்பட்ட அந்த நவீன காருக்குள், ஜனா, முன்புறம் ஏறிக்கொள்ள, பின்னால் ஏறிக்கொண்டான், ரிஷி.
காருக்குள் இருவருக்குள்ளும் ஒரு இறுக்கம்.
இந்த வேளை பார்த்துதானா தமிழ்ச்செல்வி, அவனை மொபைல் போனில் அழைக்க வேண்டும்... முதலில் நெருடலாக இருந்தாலும், துணிந்து, போனில், 'ஸ்பீக்கரை ஆன்' செய்து, அவளோடு பேசத் துவங்கினான்.
''ஹலோ தமிழ்... உன் போனுக்காக தான் காத்துகிட்டிருந்தேன். இங்க எல்லா ஏற்பாடுகளும் நடந்துகிட்டிருக்கு... இப்ப கூட நானும், ஜனா சாரும், சுஜித் சாரை, முறைப்படி அழைப்பு விடுக்கிறதுக்காக, அவர் வீட்டுக்கு போயிகிட்டிருக்கோம்,'' என்று, ஜனா உடன் இருப்பதை அவளுக்கு உணர்த்தினான்; அவளும், புரிந்து பேசலானாள்.
''ரொம்ப சந்தோஷம் ரிஷி... ஹலோ சார், குட்மார்னிங்,'' என்று, ஜனாவுக்கும் ஒரு வணக்கம் சொன்னாள், தமிழ்.
ஜனா, ஏனோ அலட்சியமாக இருக்க, ''சார், உங்களுக்கு தான், குட்மார்னிங் சொன்னா தமிழ்,'' என்று, எடுத்து கொடுத்தான்.
உடனே, ''வெரி குட்மார்னிங் தமிழ்ச்செல்வி. என்ன, உனக்கு கல்யாணமாமே... உனக்கு போன் பண்ணினப்ப, உங்கப்பா தான் பேசினார்,'' என்று, எடுத்த எடுப்பிலேயே அந்த வில்லங்கமான விஷயத்தை தொட்டார், ஜனா.
''ஆமாம் சார்... எங்க சொந்தத்திலேயே ஒருத்தரை, பேசி முடிவு செய்திருக்காங்க. நாளைக்கு நிச்சயதார்த்தம். ஆனா, கல்யாணம் இப்ப இல்லை. ஆறு மாசம் கழிச்சு தான்.''
''ரொம்ப சந்தோஷம்... அப்ப, வேலையை விட்டுடப் போறேன்னு சொல்லு,'' எதிர்மறையாகவே கேட்டார், ஜனா.
ரிஷியிடம் எரிச்சல் புகை கசிய கொப்பளித்தது.
''இல்ல சார்... வேலையெல்லாம் விடற மாதிரி இல்லை. இனிமே, 'உட்பி' அனுமதியோட, நிச்சயமா, இந்த வேலைல நான் எதையாவது சாதிப்பேன்.''
''அப்ப, நீ உடனே வந்துடுவியா?''
''அதை சொல்லத்தான் போன் செய்தேன், சார். நாளைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்ச, அடுத்த ஒரு மணி நேரத்தில், இங்கயிருந்து கிளம்பி வந்துடுவேன்.''
அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை, ஜனா; ஆனால், ரிஷி எதிர்பார்த்திருந்தான்.
''சபாஷ் தமிழ்... வேகமா வா... கேள்விகளையெல்லாம் தயார் செய்யணும். அது போக, 'ரிகர்சல்' வேற பார்த்துக்கணும்.''
''ஷ்யூர் ரிஷி... நாளை மறுநாள் நான் கண்டிப்பா, அங்க வந்துருவேன்... அதுவரை, நீ சமாளிச்சா போதும். அப்புறம், நிகழ்ச்சியை, என், 'உட்பி'யும் பார்க்க ஆசைப்படறதால, அவரையும் கூட்டிகிட்டு வரேன்.''
இந்த பதிலை துளியும் எதிர்பார்க்கவில்லை, ஜனா.
''ஓ... ஆமா, உன், 'உட்பி' பத்தி எதுவுமே சொல்லலியே... அவர் பேர் என்ன... என்ன செய்யறார்?''
''பேர், சுகுமார். கேபிள், 'டிவி' பிசினஸ். இதுபோக, சின்ன அளவுல 'ஈவென்ட் மேனேஜ்மென்'டும் பண்றாரு. எனக்கு, துாரத்து உறவினர் - ஐ மீன் ஒண்ணு விட்ட மாமா மகன்.''
''இவ்வளவு சீக்கிரம் இந்த கல்யாண ஏற்பாடு செய்ய காரணம்?''
''வேறென்ன... எங்கம்மாவோட உடல்நிலை தான்.''
''அம்மா, இப்ப எப்படி இருக்காங்க?''
''உயிருக்கு ஆபத்தில்ல... இருந்தாலும், ஜாக்கிரதையா இருக்கணும். குறிப்பா, அவங்க கவலையே படக்கூடாது... கவலைப்பட்டா, 'ஹார்ட்' தாங்காது.''
ரிஷி, கேள்வி மேல் கேள்வி கேட்க, தமிழும், தெளிவாக பதில் கூறினாள்.
''சந்தோஷம் தமிழ்ச்செல்வி... உன் கல்யாணத்துக்கு, 'அட்வான்ஸ்' வாழ்த்துகள்,'' என்று முடித்த ரிஷி, மொபைல் போனை பாக்கெட்டில் போட்டபடியே, ஜனாவை பார்த்தான்.
அவர் முகத்தில் ஒரு இனம் புரியாத சலனம்.
ஒரு தொலைபேசி வழி பேச்சு, எல்லா குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. சுஜித்குமார் வீடும் வந்தது.
ரிஷி பின்னால் நின்று கொள்ள, முதல் ஆளாக முன்னால் சென்றது, ஜனா தான்!
ரிசப்ஷன் ஹாலில் காத்திருந்தனர். முதலில், அருமையான ஐஸ் வாட்டர், கூடவே வெந்நீர். பின், வறுத்த முந்திரி மற்றும் காபியுடன் உபசரிப்பு. இறுதியாக வணங்கிய கைகளோடு வந்து சேர்ந்தார், சுஜித்குமார்.
பரிசு பொருளுடன், பூங்கொத்து கைமாறியது. அதை அப்படியே திருப்பிக் கொடுத்த, சுஜித்குமார், ''வெரி சாரி... நான் எந்த பரிசு பொருட்களையும், யார்கிட்டருந்தும் வாங்கறதில்ல. இது என்னோட கொள்கை,'' என்றார்.
என்னவோ போலாகி விட்டது, ஜனாவுக்கு.
''அப்புறம்... எதுக்கு இந்த, 'பார்மாலிட்டி' எல்லாம்... நீங்க நேர்ல வந்ததுல ரொம்ப சந்தோஷம்... நிகழ்ச்சிக்கு, 15 நிமிஷம் முன், நான் உங்க ஸ்டுடியோவுல தயாரா இருப்பேன்,'' என்றார்.
''சார், எல்லா கேள்விகளையும் உங்களுக்கு அனுப்பி வெச்சுட்டா, நீங்க தயாராயிடுவீங்க தானே?'' என்றான், ரிஷி.
''அவசியமில்ல... கேள்விகளுக்கு அங்கேயே தோன்ற பதிலை சொல்றேன். அதுதான், 'ரியலா' நல்லா இருக்கும்,'' என்ற சுஜித்தை, சற்று அதிர்ச்சியோடு பார்த்தார், ஜனா.
''சார்... நுாலகங்களுக்கு இலவசமா புத்தகம் வழங்கப் போறீங்க... 'நுாறு லைப்ரரி - நுாறு புத்தகங்கள்'ன்னு அந்த, 'அசைன்மென்ட்'டுக்கு பேர் வெச்சுட்டோம். அந்த நுாறு நுாலகங்களை, குலுக்கல்ல தேர்வு செய்யணும். அதையும் நீங்க தான் செய்யணும்.''
''இதுவரை எவ்வளவு பேர் விண்ணப்பிச்சிருக்காங்க?''
''நுாறை தாண்டிடிச்சு சார்... ஒவ்வொரு மணிநேரமும் எண்ணிக்கை கூடிட்டேல்ல போகுது.''
''பார்ப்போம்... முடிஞ்சா எல்லாத்துக்கும் கொடுக்க பார்க்கறேன். நுாலகங்களுக்குள்ள எதுக்கு அதிர்ஷ்டப் போட்டி?''
''அப்ப குவிஞ்சிடுமே சார்.''
''இப்பவே சொன்னா தான் குவியும். அப்ப சொல்வோம். என்ன இப்போ?''
''புத்தகங்களை பார்சலா நிகழ்ச்சியிலயே கொடுக்கணும் சார். அதை, நுாலகத்தினர் வாங்கிக்கிட்டு, அவரும் நாலு வார்த்தை பேசினா நல்லா இருக்கும்.''
''செய்யுங்க... எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல. நல்ல எழுத்தாளர்களோட பல நுால்கள் விற்க வழியில்லாம அப்படியே இருக்கறதா கேள்விப்பட்டேன். அந்த மாதிரி நல்ல புத்தகங்கள் எல்லாத்தையும் பார்த்து, 'ஆர்டர்' பண்ணுங்க.''
''ஷ்யூர் சார்.''
சுஜித்குமாரின் தெளிவான, குழப்பமில்லாத அணுகுமுறை, பேச்சை வேகமாக முடிவுக்கு கொண்டு வந்தது. அதிலும், சுஜித், ரிஷியையே பார்த்து பார்த்து பேசியது, ஜனாவுக்கு, 'காம்ப்ளக்சை'யும் உண்டாக்கி விட்டது.
எல்லாம் முடிந்து வெளியே வந்து காரில் ஏறியபோது, ஒரு இறுக்கம். ரிஷிக்கும் புரிந்தது. அதற்கு அவன் என்ன செய்ய முடியும்?
ஆனால், ஜனா மனதில் தீர்க்கமாய் ஒரு எண்ணம். எப்பாடு பட்டாவது, ரிஷியை நிகழ்வில் கலந்து கொள்ள விடாமல் செய்துவிட வேண்டும். அதற்கு என்ன வழி என்று யோசித்தபோது, ஜார்ஜ் டவுன் ரவுடி, முனிராஜ் ஞாபகம் வந்தது.
முனிராஜ், ஒரு கூலி கொலைகாரன்!
— தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்
