தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரோடு உறவாடு... (26)

உயிரோடு உறவாடு... (26)

உயிரோடு உறவாடு... (26)


PUBLISHED ON : செப் 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை சுருக்கம்: ரிஷியுடன் படித்த பள்ளி நண்பனை காதலிப்பதாக, மாமன் மகள் ரேவதி கூற, அவனுக்கே திருமணம் செய்து வைக்கும்படி மாமாவிடம் கூறினான். தமிழ்ச்செல்விக்கு போன் செய்ய, 'சுவிட்ச் ஆப்' என, வந்த நிலையில், 'வாட்ஸ் - ஆப்'பில் வந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தான் -

ரிஷியின், 'வாட்ஸ் - ஆப்'க்கு, வந்திருந்த அந்த படம், 'பார்வர்ட்' செய்யப்பட்டிருந்தது. ரிஷிக்கு உடம்பெல்லாம் கூச்சமெடுத்து, இதயத்துடிப்பும் எகிற ஆரம்பித்து விட்டது. சில நிமிடங்களுக்கு பேச்சே வரவில்லை.

இடையே இன்னொரு, 'வாட்ஸ் ஆப்' செய்தியும் வந்தது. அதில், 'இது, ஆரம்பம் மட்டுமே... இன்னும் நிறைய வரும்...' என்ற செய்தி.

ரயில் வேகமெடுத்து, வெளியே காட்சிகள் நழுவியபடி இருந்தன. சற்று கலங்கிப் போய் பின் சுதாரித்தான், ரிஷி. இது, நிச்சயம் ஜனாவின் வேலையாகதான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

அடுத்த நொடியே, ஜனாவுக்கு போன் செய்து, கத்தத்தான் தோன்றியது. ஆனால், சுற்றியிருக்கும் பயணியரை உத்தேசித்து அடக்கிக் கொண்டான். அதே வேகத்தில், அந்த படத்தை அழித்தான்.

ஜனா, பழிவாங்க துவங்கி விட்டது தெளிவாக புரிந்தது. தான் எடுத்த வீடியோவுக்கு, வீடியோவிலேயே குரூரமாக ஜனா பதில் சொல்லி இருப்பதாகவே தோன்றியது.

'சைபர் கிரைமுக்கு புகார் கொடுத்தால், எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது என்பது தெரிந்து விடும். ஆனால், வெளியே யாரிடமும் போகாமல், ரகசியமாகவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். போலீசிலும் தெரிந்தவர் இருந்து ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால், மானம் கொஞ்சமாவது கப்பலேறத்தான் செய்யும்.

'என்ன செய்யலாம், அதை எப்படி செய்யலாம், போலீசில் யார் இருக்கின்றனர்...' என, அப்போதே கணக்கு போட ஆரம்பித்து விட்டது, ரிஷியின் மனது. அருகிலும், எதிரிலும் யார் பயணிக்கின்றனர் என்கிற உணர்வே இல்லை.

''எக்ஸ்கியூஸ்மீ... 75 வயசாகுது, என்னால மேல ஏறி படுக்க முடியாது. உங்க, 'லோயர் பெர்த்'தை எனக்கு கொடுக்க முடியுமா,'' என்று, ஒரு பாட்டி கேட்கவும், மறு பேச்சு பேசவில்லை.

பாட்டிக்கு, தன், 'லோயர் பெர்த்'தை தந்து, 'அப்பர் பெர்த்'தில் ஏறி படுத்தான். ஆனால், துாக்கம்தான் வருவேனா என்றது. கையிலிருந்த மொபைல் போன், அந்த நொடி ஒரு அரக்க பூதமாக தெரிந்தது; கோரமாக சிரித்தது.

எவ்வளவுக்கு எவ்வளவு வசதிகள் அதிகரிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. அரை நுாற்றாண்டுக்கு முன்வரை, இப்படிப்பட்ட ஆபத்துகளுக்கெல்லாம் இடமே இல்லை. அதுவே, கால் நுாற்றாண்டுக்கு முன், புகைப்படத்தை காட்டி மிரட்டுதல் என்று வளர்ந்தது. இன்று, உச்சமாய், வீடியோ என்ற எல்லைக்கு வந்து விட்டது.

படுத்திருந்த ரிஷி, இந்த மிரட்டல் தமிழ்ச்செல்விக்கும் போயிருக்குமா என்று, ஒரு விநாடி யோசிக்கத் துவங்கினான்.

இரண்டு பேரும்தானே ஜனாவின் டார்க்கெட்... தமிழ்ச்செல்விக்கு போன் செய்து பார்த்து விடுவோமா என்று, அவள் எண்ணிற்கு தொடர்பு கொண்டான். நல்லவேளை, சிணுங்கியது; கூடவே படபடப்பும் கூடத் துவங்கியது.

''சொல்லு ரிஷி...'' என்கிற தமிழின் குரல் கேட்டது.

''தமிழ்... தமிழ்... ஏன் இதுக்கு முந்தி நான் போன் பண்ணினப்ப எடுக்கலை,'' தணிந்த குரலில் ஆனால், படபடப்பு குறையாமல் கேட்டான்.

''சாரி... கூடவே சுகுமார் இருந்தார். மிச்சம் உனக்கு புரியும்ன்னு நினைக்கறேன்.''

''இப்ப நீ எங்க இருக்கே?''

''நான் இப்ப மதுரையில,'' மிடறு கட்டியது தமிழிற்கு... முழுமையாக பேச முடியவில்லை.

''இந்த நாலு நாள்ல என்னென்னவோ நடந்துட்டது நல்லா தெரியுது. கமான் என்ன நடந்தது சொல், தமிழ்...''

''நீ, 'டென்ஷன்' ஆகாதே... உலகத்துல நடந்துடாத எதுவும் எனக்கு நடந்துடலை. சுருக்கமா சொல்லிடறேன், நீ ரொம்ப, 'ஷார்ப்' ஆனவன்... புரிஞ்சுக்குவேன்னு நம்பறேன்...

''உன்னையும், என்னையும் இணைச்சு கிட்டத்தட்ட, நாம, 'லிவிங் டுகெதர் லைபே' நடத்தறதா, சுகுமார்கிட்ட பத்த வெச்சிருக்கார், ஜனா. அதை, சுகுமாரால நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல. ஏற்கனவே, அவருக்கு நிறைய, 'காம்ப்ளக்ஸ்' உண்டு. இப்படி கேள்விப்பட்டா மனசு சும்மா இருக்குமா?

''என்கிட்ட அதை நேராவே கேட்டார். 'எனக்கு, நீ நண்பன் மட்டும்தான்'னு எவ்வளவு அழுத்தமா சொல்ல முடியுமோ, அவ்வளவு அழுத்தமா சொன்னேன். 'அப்படின்னா இப்பவே வேலையை விட்டு வா. வர்ற முகூர்த்தத்துல நமக்கு கல்யாணம். இல்ல முடியாதுன்னா, ஊருக்காக நான், ஆசைக்கு அவன்னு தான் அர்த்தம்'னு ரொம்பவே பேசிட்டாரு... எனக்கும், வேற வழி தெரியல, ரிஷி.''

''அப்ப, வேலையை ராஜினாமா பண்ணிட்டியா?''

''உம்...''

தமிழ்ச்செல்வி ஆமோதிக்கவும், ரிஷியிடம் ஒரு பெரும் இறுக்கம். தொடர்ந்து பேச முடியாத ஒரு அடைப்பு. அதை தமிழ்ச்செல்வியே உடைத்தாள்.

''ரிஷி...''

''உம்...''

''அந்த ஜனா, சுகுமாரோட இப்பவும் தொடர்ந்து பேசிகிட்டிருக்காரு. கல்யாணத்துக்கு கூட அவரை கூப்பிடப் போறதா சொல்லியிருக்காரு. உன்னை நான் கூப்பிடப் போறேனா, இல்லையான்னு எனக்கும், 'டெஸ்ட்' வெச்சிருக்காரு.''

''அவ்வளவுதானே... இதுக்கு மேல எதுவுமில்லியே?''

''இதுக்கு மேல என்ன வேணும், ரிஷி... அதான் என் வரைல, என் கனவெல்லாம் துாள் துாளா போச்சே?''

''இருக்கு தமிழ்... இதுக்கு மேலயும் எவ்வளவோ இருக்கு. ஆனா, அதெல்லாம் என்னோட போகட்டும்... உனக்கு, நான் இப்ப எப்படி ஆறுதல் சொல்றதுன்னும் எனக்கு தெரியல.''

''என் விஷயத்தை விடு. அது கிட்டத்தட்ட முடிஞ்சு போன ஒண்ணு. உன் விஷயமாவது நல்லபடியா இருக்கட்டும். மாமா பொண்ணோட உனக்கு எப்ப கல்யாணம்?''

''ஹும்... அது ஒரு வேடிக்கையான கதை, தமிழ்! அம்மாவுக்காக நான் சம்மதிச்சுட்டேன். ஆனா, அவளோ ஏற்கனவே ஒருத்தன, 'லவ்' பண்றதால, என்னை பிடிக்கலேன்னு சொல்லி, என் காதலை காப்பாத்துன்னா... நானும் காப்பாத்திட்டேன்.''

''என்ன ரிஷி சொல்றே?''

''அதான் சொன்னேனே, அவ காதலை காப்பாத்திட்டேன்னு! அத விடு, எனக்கு இனி, உன் வாழ்க்கை தான் எல்லாமே... உன் கல்யாணம் நல்லபடியா நடந்து முடியணும். நீ, இனியாவது நல்லா இருக்கணும். அதுக்கு எந்த கேடும் வந்துடக் கூடாது. இப்ப என் பிரார்த்தனை எல்லாம் அதுதான்.''

''இதுக்கு மேல என்ன பெருசா கேடு வரணும், ரிஷி? சுயநலமா நான் சுகுமாரையும், என் குடும்பத்தையும் துாக்கி எரிஞ்சுட்டு வந்து வாழ முடியும் தான். ஆனா, நான் அப்படி வாழ விரும்பல. சுகுமாரோட போராடி, அவருக்கு புரிதலை ஏற்படுத்தி ஜெயிக்கிறது தான் சரிங்கற முடிவுக்கு வந்துட்டேன்.''

''கிரேட் தமிழ்... கிரேட்! இப்படி யோசிச்சு நடக்க ரொம்ப தைரியம் மட்டுமில்ல, தெளிவும் வேணும். உன்னை நினைச்சு நான் பெருமைப்படறேன்.''

''ரிஷி, என்னை விடு. உன் கனவுகள் உனக்கு முக்கியம். டைரக்டர் ஆனந்த் சார் இப்ப இல்லாததால, உன் கனவுகள் நொறுங்கிடக் கூடாது. உன் முயற்சிகளை விட்டுடாதே... என்னை பத்தின கவலையையும் விடு... நிச்சயம் நம்ப நட்பு துாய்மையானதுங்கறத நான், சுகுமாருக்கு புரிய வைப்பேன்.''

''அது போதும் எனக்கு. என் வரைல, இப்ப உன் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்; அவ்வளவு தான்! நீ என்னை கூப்பிடக் கூட வேண்டாம்.''

''இல்ல ரிஷி... நான் உன்னை கூப்பிடத்தான் போறேன். ஒரு நண்பனா நீ, மாமி, மைத்ரேயி எல்லாரும் அவசியம் வரணும்.''

''ரொம்ப சந்தோஷம்...'' என்று சொல்லவும், 'டவர் கட்'டாகி, தொடர்பு அறுந்து போனது. ரயிலும் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

எதிரில், 'அப்பர் பெர்த்'தில் படுத்திருந்தவர் ஒரு மாதிரி பார்த்தார். அவர் பார்வையே பேசியது போதும் என்று சொல்லாமல் சொன்னது.

தமிழ்ச்செல்வியிடம், ஒரு மெல்லிய சமாதானத்திற்கு வந்தவனாக, கஷ்டப்பட்டு கண்களை மூடி துாங்க முயற்சித்தான், ரிஷி.

ஆட்டோவை விட்டு இறங்கி, ரிஷி உள்ளே நுழையும்போதே அதிர்ச்சி அளித்தாள், மைத்ரேயி. அவள் தான் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

முதுகு சுமையோடு அவளை ஆச்சரியமாக பார்த்தான், ரிஷி.

''என்ன மிஸ்டர் மீடியா... அப்படிப் பார்க்கறே?''

''இதெல்லாம் என்ன மைத்ரேயி... சினிமால மட்டும் தான் நிமிஷத்துல எல்லாம் மாறி நடக்கும், உன் வாழ்க்கையும் சினிமா ஆயிடுச்சா?''

''இல்ல ரிஷி... நம் வாழ்க்கைலயும் நல்ல நேரம் வந்துட்டா எல்லாம் வேகமா நடக்கும். எனக்கு உன் வடிவத்துல நல்ல நேரம் வந்துட்டதா நான் நினைக்கிறேன்,'' என்று, கண்களை சிமிட்டினாள், மைத்ரேயி.

ரிஷியின் குரல் கேட்டு, உள்ளிருந்து வந்த மாமியும், ''வா ரிஷி... வந்து ஒருவா காபி சாப்பிட்டுட்டு அப்புறம் மேலே போ,'' என்று உள்ளே அழைத்தாள். உள்ளே, பல் துலக்கிக் கொண்டிருந்தார், நடராஜன்.

ஹாலில் முதுகு சுமையை கழற்றி கீழே வைத்து, சோபாவில் அமர்ந்தான், ரிஷி. ஓடிப்போய், மாமி கலந்த காபியை எடுத்து வந்து நீட்டினாள், மைத்ரேயி.

அப்போது தான் அவள் குளித்து முடித்து, நெற்றியில் குங்குமத்தோடு இருப்பதும், அவனுக்கு பளிச்சென தெரிந்தது.

ஆச்சரியம் மேலும் அதிகமாயிற்று.

''அம்மாவுக்கு பரவாயில்லியா?'' என்று கேட்கவும் செய்தாள்.

''அவங்களுக்கு ஒண்ணுமில்லை. ஓ.கே.,'' என்றபடி காபியை குடித்தான், ரிஷி.

நடராஜனும் முகம் துடைத்தபடி எதிரில் வந்து அமர்ந்திட, அவருக்கும் காபி எடுத்து வந்து தந்தாள், மைத்ரேயி.

அவரும், அம்மா உடல்நிலை பற்றி விசாரித்தார்.

காபி குடித்து முடித்த ரிஷி, எழுந்து கொண்டான்.

சமையல்கட்டு நோக்கி நடந்த மைத்ரேயியை, சற்றே ஜாடை காட்டி வெளியே அழைத்தவனாய், மாடிப்படி நோக்கி நடந்து, படி அருகில் நின்றான்.

அவளும், அவனை சமீபித்து, ''என்னப்பா?'' என்று கேட்டாள்.

''மைத்ரேயி... சத்யமா சொல்றேன், உன்கிட்ட இப்படி ஒரு மாற்றத்தை நான் கற்பனை கூட பண்ணலை. நீ, ரொம்ப நல்லா நடிக்கறே. இங்க இப்படி இருந்தாதான் இருக்க முடியும்ங்கறத புரிஞ்சுகிட்டிருக்கே. வெல்டன்,'' என்றான்.

''இது, நடிப்பு இல்ல ரிஷி... நான் இனி எப்பவும் இப்படிதான் இருக்க போறேன். எனக்கு, மாமி வடிவத்துல, ஒரு அம்மாவையும், நடராஜன் சார் வடிவத்துல, அப்பாவையும், உன் வடிவத்துல, ஒரு தோழமையும் கடவுள் கொடுத்துட்டாரு. நான், உங்க யாரையும் இழக்க மாட்டேன்; இழந்தா நான் ஒரு முட்டாள்,'' என்று சொல்லி, விறுவிறுவென்று உள்ளே சென்று விட்டாள்.

ரிஷி வரையில், ஒரு மின்னல் சொடுக்கியது போல் இருந்தது. சற்றே இன்ப அதிர்வோடு மாடிக்கு சென்று கதவை திறந்தவன், முதல் காரியமாக, மொபைல் போனை சார்ஜரில் போடப் போன போது, அதில் ஏராளமான, 'வாட்ஸ் ஆப்' குறியீடுகள். அதை திறக்கவும், திரும்பவும் நெஞ்சை அடைத்தது.

அதில், இன்னமும் பல கண்ணை கரிக்கும் நிர்வாண படங்கள். அவ்வளவும், 'கம்ப்யூட்டர் கிராபிக்சில் மார்பிங்' செய்யப்பட்டவை. ஆனால், அதை கம்ப்யூட்டர் அறிவுள்ளவர்களால் மட்டும்தான் தெரிந்து கொள்ள முடியும். மற்றபடி, அந்த படங்கள் துளி கசிந்தாலும் அவ்வளவு தான்... பல கோடி மொபைலுக்குள் நொடிக்குள் நுழைந்து மானத்தை வாங்கிவிட முடியும்.

அதையெல்லாம் நினைக்கும்போதே, உடல் நடுங்கத் துவங்கியது, ரிஷிக்கு. புகைப்படங்களை தொடர்ந்து ஒரு செய்தியும் வந்திருந்தது.

'உனக்கு, 10 லட்ச ரூபாய் அபராதம். அப்படியே காலில் விழுந்து மன்னிப்பும் கேட்க வேண்டும். 24 மணி நேரம் தான் அவகாசம். சைபர் கிரைமுக்கு போனாலோ, இல்லை அலட்சியப்படுத்தினாலோ, இது பொது வெளிக்கு போய் விடும்.

'அப்புறம், தமிழ்ச்செல்வியின் கல்யாணமும் நிற்கும்; உங்கள் இருவர் மானமும் போகும். ஆனால், என்னை மட்டும் உன்னால் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால், நான் எப்போதுமே போலீசால் தேடப்படும் ஒருவன். அவர்களுக்கு தண்ணி காட்டுவது தான், எனக்கும் பிடித்த விஷயம். இப்படிக்கு, உன்னால் பாதிக்கப்பட்டவன் முனிராஜ்...' என்ற அந்த செய்தி.

அப்போது தான் ரிஷிக்குள், முனிராஜின் ஞாபகத்தை கொண்டு வந்தது.

ஜனா, சாமர்த்தியமாக, முனிராஜை கொண்டே விளையாட்டை துவங்கி விட்டது புரியவும், ரிஷியின் வயிற்றுக்குள் அமிலம் பீறிடத் துவங்கியது. நண்டுகளும் நெளிய ஆரம்பித்தன. அப்போது, கச்சிதமாய் வந்து நின்றாள், மைத்ரேயி. அவள் வந்ததை பார்க்கவில்லை, ரிஷி.

ஆனால், அவளோ மொபைலில் அந்த கண்றாவி படங்களை பார்த்தபடியே, பெரும் அதிர்வோடு, ''ரிஷி, என்ன கொடுமை இது?'' என்று, தன் குரலால், அவனை தன் பக்கம் திருப்பினாள்.

மேலும், அதிர்வோடு அவளை ஏறிட்டபடியே, மொபைலை அவளிடமிருந்து பிடுங்கப் பார்த்தான்.

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us