sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வேருக்கு வேலை தரும் விழுதுகள்!

/

வேருக்கு வேலை தரும் விழுதுகள்!

வேருக்கு வேலை தரும் விழுதுகள்!

வேருக்கு வேலை தரும் விழுதுகள்!


PUBLISHED ON : மார் 28, 2021

Google News

PUBLISHED ON : மார் 28, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''ஏம்ப்பா, எங்க போயிட்ட... அந்த போன எடேன், அடிச்சிட்டே கெடக்குது...'' என்றபடியே, சமையலறையில் இருந்து வந்தாள், சரோஜா.

கூடத்தில், கணவனை காணாமல் தேடியவள், 'எத்தனை முறை சொன்னாலும், இந்த மனுஷனுக்கு ஒரைக்கறதேயில்ல... என்னோட போன எடுத்து பேசினா, சமையலறையில வந்து வச்சிட்டு போன்னு...' என்று, முணுமுணுத்தாள்.

''என்ன சொன்ன?'' என்றபடியே, பால்கனியில் இருந்து வந்த கணவனைப் பார்த்து, ''ம்ம்... சொரைக்காயில உப்பில்லன்னு சொன்னேன்,'' என்றாள்.

கோபப் பார்வை வீசியபடி, மொபைல்போனை எடுத்து, ''ஹலோ... யாரு?'' என்றாள் வேகமாக.

''அம்மா, நான் தான் ஜானு பேசறேன்... என்னம்மா கோவமாயிருக்கியா... அப்பா எங்க போயிருக்கார்?'' என்று அந்தப்பக்கம் பதிலளித்தது, சரோஜாவின் கடைக்குட்டி மகள்.

''சரி, இன்னைக்கு எங்கயாச்சும் வெளியில போறாரா, அப்பா... நங்கநல்லுார், 'ப்ளாட் டெனன்ட்' வாடகைய அப்பா, 'அக்கவுன்ட்'ல போட்டாச்சாம்... அத எடுத்து, 'லோனை' கொஞ்சம் கட்டிட சொல்லேன்,'' என்றாள், ஜானு.

''ஏண்டி, உங்கப்பாவ இன்னும் என்ன சின்ன பையன்னு நெனச்சியா... அவர ஏண்டி வேல வாங்குற... இப்பதான் 'நெப்ட், கூகுள் பே'ன்னு எல்லாம் வந்துடுச்சே... அதில் கட்டிக்க கூடாதா?'' என்றாள், சரோஜா.

''கெழவன விட்டுக்குடுக்க மாட்டியே... எனக்கு, போன் புதுசா வாங்கற வரைக்கும் வேற வழியே இல்ல,'' என்றாள், ஜானு.

''என்னமோ போ... ஒண்ணத்துக்கும் ஒதவாத புருஷன வச்சுக்கிட்டு, நீயும் தான் கஷ்டப்படுற... சரி, நான் அப்பாகிட்ட சொல்லிடறேன்... அனு குட்டி எப்படி இருக்கா?''

''அனு குட்டியா... அது, சுட்டி. அவள பத்தி வீட்டுக்கு வந்தப்பறமா கேளேன்...'' என்ற ஜானுவின் பட்டென்ற துண்டிப்பிற்கு பின், போனை மீண்டும் சமையலறையிலேயே வைத்தாள்.

வேலைகளை முடித்து, 'அப்பாடா...' என்று பெருமூச்சு விட்டபடி, டைனிங்டேபிள் சேரில் உட்கார்ந்தாள்.

''ஆமா, கொழந்த என்ன சொல்லுச்சு?'' என்ற கணவனிடம், ''உன், 48 வயசு கொழந்த, 50 வயசு புருஷன வேல வாங்க துப்பில்லாம, உன்ன, 'லோன்' கட்ட சொல்லுச்சு,'' என்றாள்.

''ஏண்டி அவ என்ன பண்ணுவா... அவ சாமர்த்தியம் யாருக்கு வரும்; நாம கொடுத்த பணத்துல பைசா வீணடிக்காம மேற்கொண்டு, 'லோன்' போட்டு, திண்டிவனத்துல வீடு வாங்கினா...

''நங்கநல்லுார்ல, 'ப்ளாட்' வாங்கி, அதுல வர்ற வாடகையில், 'லோன்' கட்டிடறா... இப்ப அவ புருஷன் காசையும் போட்டு இருக்கற எடத்துல கவுரவமா வீட்ட கட்டிகிட்டா,'' என்றார்.

''ம்ம்கூம்... புருஷன் காச போட்டுட்டான். அப்பவே தலப்பாடா அடிச்சுகிட்டேன்... காமிச்ச மாப்ளயெல்லாம் வேணான்னு, இவன தான் புடிச்சிருக்குன்னு ஒத்துகிட்டா... சொந்த வரனாச்சேன்னு, நானும் ஒத்துகிட்டேன், பைத்தியக்காரி...'' மற்ற மூன்று மகள்கள் போல, ஜானு கொஞ்சம் வசதியாக வாழவில்லை என்ற குறை இருந்தது, சரோஜாவுக்கு.

''சரி... வா சாப்பிட்டு கிளம்பு,'' என்று, பரிமாற ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு கை கழுவிய போது, அலைபேசி மீண்டும் ஒலித்தது. மதியம், 2:00 மணி என்றாலே, அது மூத்த மகள் அலமு தான்.

''என்னம்மா, நாங்க சாப்பிட்டோம்... தங்கச்சிக்கு, 'லோன்' கட்ட அப்பா கிளம்பிட்டிருக்காரு,'' என்று, சொல்லி முடிப்பதற்குள்...

''என்னது... மகாராணி வீட்ல, அவங்க புருஷன்னு ஒருத்தன் என்னத்துக்கு தான் இருக்கானாம்... வேகாத வெயில்ல அப்பாவ அனுப்பறமேன்னு அவளுக்கு புத்தி வேணாம். வெட்டிப் போட்டா எட்டு ஊருக்கு ஆவான். அவனுக்கு சாமரம் வீசச் சொல்லு... நீ போன வை, நான் அவகிட்ட பேசிட்டு வரேன்,'' என்று பட்டாசாய் வெடித்தாள், அலமு.

மகன்கள் இல்லை என்பதால் சுயமாக நிற்க வேண்டும் என்று, மகள்களை நன்றாக படிக்க வைத்தனர். வேலையில் அமர்த்தி, அரசு வேலையில் உள்ள வரன்களுக்கு திருமணம் பேசி முடித்தனர், சரோஜா - மணி தம்பதியர்.

ஜானு மட்டும், ஆசிரியர் பணியில் இருந்தாலும், வரன் அமையவில்லை.

27 வயதாகி விட்டதால், கடைசியில் அரசுப்பணி இல்லாதவரை பிடித்து திருமணம் முடித்தனர். நிரந்தர வருமானம் இல்லையென்றாலும், கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசும் ஜானுவை, அவளது பெரியக்காவுக்கு பிடிப்பதேயில்லை.

ஜானுவும் எப்படியெல்லாமோ சமாளித்து, குழந்தைகளையும் படிக்க வைத்து, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். தன் மூன்று அக்காக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மீது கொள்ளைப்பிரியம், ஜானுவுக்கு. தானே ஆசிரியராய் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வளர்த்ததால், அவர்களிடம், 'அட்வான்டேஜ்' எடுத்துக் கொள்வாள்.

அதற்குள் அடுத்த தங்கை பூரணிக்கு போன் அடித்தாள், அலமு.

''என்னக்கா?'' என்றாள், பூரணி.

''பாருடி பூரணி... நாம அம்மா வீட்டு பக்கத்துலயே, 'செட்டில்' ஆயிட்டோமேன்னு, அப்பா அம்மாவ எப்படி பத்திரமா பாத்துக்கறோம்... ஆனா, இவ ஏண்டி, அவங்களை இந்த வயசுலயும் இப்படி வேல வாங்குறா... அதுங்களும், அவளுக்குன்னா விழுந்து விழுந்து செய்யுதுங்க,'' என்று நிறுத்தினாள்.

''என்னக்கா பிரச்னை. அவள பத்தி தெரிஞ்சதுதானே விடேன். அவளுக்கும் அப்பாவ விட்டா யாரிருக்கா... சென்னையிலேயே இருக்கறதால எல்லாத்தையும் நாமளே பாத்துக்கறோம். அவ துாரத்துல இருக்கிறால்ல,'' என்று நியாயத்தை பேசினாள், பூரணி.

''ஆமாடீ, எப்பவுமே நீ அவளுக்குத்தான், 'சப்போர்ட்' பண்ணுவ... ஏன்னா, உன்னோட மக்குப் புள்ளைய நிறைய மார்க் எடுக்க வச்சு, 'பாஸ்' பண்ண வச்சவளாச்சே... நீ எப்படி விட்டுக் கொடுப்ப... ஆனாலும், பாவம்டி அப்பா...

''வங்கிக்கு போய் வரிசையில நிக்குற வயசாடி அவருக்கு... இதெல்லாம் கூட சரி. இப்பதான ரெண்டு நாளைக்கு முன்ன, 'ப்ரஷர்' அதிகமாயிடுச்சுன்னு, மருத்துவமனையில, 'டெஸ்ட்' எடுத்தபோது, 'வயசாகுது, பத்திரமா பாத்துக்கோங்க'ன்னு டாக்டர் சொன்னாருல்ல,'' என்று அங்கலாய்த்தாள், அலமு.

''சரிக்கா... சண்டே, அனு குட்டியோட பிறந்தநாள் கொண்டாட வருவால்ல... அப்ப நான் கேக்கறேன். இப்ப ஆபீஸ் வேலைய கவனி,'' என்று, அலுவலில் மூழ்கினாள், பூரணி.

மனதுக்குள் ஜானு மேல் கோபப்பட்டாலும், தனக்கு மகள் இல்லை என்பதால், அனுவை, தன் மகளாகவே நினைப்பாள், அலமு. ஆடு பகை, குட்டி உறவு.

ஏழாவது படிக்கும் ஜானுவின் மகள், அனு குட்டிக்கு முதல் ஆளாய் போய், 'டிரெஸ்' எடுத்து வர நினைத்து, அடுத்த தங்கை ராஜிக்கு போன் செய்தாள், அலமு.

போன் எடுத்தவுடன், ''என்னம்மா டெலிபோன் ஆபீசர்... நீ கூப்பிடுவேன்னு நெனச்சேன். இன்னைக்கு, அனு குட்டிக்கு, 'டிரெஸ்' எடுக்க போறோம், கரெக்ட்டா... ஜானு பத்தி என்கிட்ட, 'பெட்டிஷன்' எதுவும் போடாத, நான் பிசி...'' என்றாள், 'கமர்ஷியல் டேக்ஸ்' அலுவலகத்தில் பணிபுரியும், ராஜி.

''ஆமாடீ, அதுக்குள்ள பூரணி போன் பண்ணிட்டாளா... தயாராயிரு, நானே வந்து, 'பிக் - அப்' பண்ணிக்கிறேன்,'' என்றாள்.

மாலை, 6:00 மணி-

மூன்று மகள்களுக்கும் டீ போட்டு எடுத்து வந்தாள், சரோஜா.

''ஏண்டி, துணிங்களா வாங்கி பணத்த வீணடிக்கறீங்க... அதுக்கு, 2 கிராம் தங்கமே வாங்கி இருக்கலாமில்ல,'' என்றபடியே, டீயை நீட்டினாள்.

டீயை குடித்து, 'சரி, பத்திரமா பீரோல வை... நாங்க வந்தப்புறமா தான் வெளியில எடுக்கணும்...' என்று கட்டளையிட்டு, கூட்டுக்கு திரும்பும் பறவைகளாய் வீட்டுக்கு கிளம்பினர், மூவரும்.

ஞாயிறு காலை, 10:00 மணி, பாட்டி வீட்டில், ''ஆமா, ராஜிமா... அண்ணாவால தான், 'லேட்!' இல்லாட்டி, 9:00 மணிக்கே வந்துருப்போம், துாங்கிட்டே இருக்கான். தண்ணி ஊத்தி தான் அம்மா எழுப்பினாங்க,'' என்று பெரியம்மாக்களின் பாசத்தில் குளித்துக் கொண்டிருந்தாள், அனுக் குட்டி.

உள்ளே, சமையல் வேலைகள் முடித்து வெளியில் வந்தாள், சரோஜா.

''அலமு இன்னும் வரலியா... போன் பண்ணேன்டீ, பூரணி...'' என்றபடி, எல்லாருக்கும் டிபன் பரிமாறினார்.

'இன்னைக்கு மதிய சாப்பாடு, எங்க 'ட்ரீட்!' மொதல்ல, அனு குட்டி, 'கேக் கட்' பண்ணிடறா... அப்றமா எல்லாரும் ஹோட்டலுக்கு கிளம்பறோம்... ஓ.கே.,வா...' என்று சொல்லி, அனு குட்டியின் அண்ணனை அழைத்து, 'கேக்' வாங்க புறப்பட்டனர், அலமு மற்றும் பூரணியின், ஐ.டி.,யில் வேலை செய்யும் மகன்கள்.

அப்போது தான் வந்தாள், அலமு.

அனு குட்டியை கண்ணை மூடிக்கொள்ள கூறி, பீரோவைத் திறந்து, 'லெஹங்கா டிரஸ்'சை எடுத்து வந்து, 'சஸ்பென்சாய்' அவளிடம் தந்தாள்.

''தேங்க்ஸ் பெரிம்மா,'' என, போட்டு பார்க்க ஓடினாள், அனு.

''ஏம்மா, அடிக்கடி ஹோட்டலுக்கு போறது என்ன பழக்கம்... அந்த காசுக்கு தேவையானத வீட்டிலேயே வாங்கிட்டு வந்து, சமைக்க கூடாதா... அவன் என்ன சுத்தபத்தமா செய்றானோ?'' என்றார், அப்பா.

''போப்பா, உனக்கு ஹோட்டல் சாப்பாடு வயித்துக்கு ஒத்துக்கல... உனக்கும், அம்மாவுக்கும், ரசம் சாதமே, 'ட்ரீட்!' எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாமில்ல,'' என்றாள், ராஜி.

''என்னமோ போங்க,'' என்று, வெளியில் சென்றார், அப்பா.

'பர்த்டே' கொண்டாட்டங்கள் முடிந்து, எல்லாரும் புறப்பட்டு விட்டனர். வீடே அமைதியானது.

ஜானு கிளம்பும் வரை இருக்கலாம் என்று உட்காந்திருந்தாள், அலமு.

அசதியில் துாங்கிப் போனார், அம்மா சரோஜா. எப்போதும் போல பால்கனிக்கு போய் விட்டார், அப்பா. பெரியம்மா வீடுகளுக்கு போய் விட்டனர், குழந்தைகள்.

எப்படா நேரம் வரும் என்று காத்திருந்த அலமு, ''ஏண்டி, அறிவு கெட்டவளே... உனக்கு கொஞ்சமாச்சும் புத்தி இருக்கா... அப்பாவுக்கு என்ன வயசாகுது... அவரைப் போய், 'லோன்' கட்ட சொல்ற... அது கூட பரவால்ல, அப்பப்ப எனக்கு இது சரியில்ல, அது சரியில்லன்னு ஏதாவது கஷ்டத்த சொல்லிட்டே இருக்கியே...

''சும்மா சொல்லிட்டே இருந்தா, வயசான அவங்க மனசு வருத்தப்பட மாட்டாங்க... இது கூட தெரியாம, நீ என்ன டீச்சரு,'' என்று, அம்மாவுக்கோ அப்பாவுக்கோ கேட்டு விடாதபடி மெல்லிய குரலில் கேட்டாள்.

''அக்கா... என்ன பேசற நீ, உங்களுக்கு ஒரு விஷயம் புரியவே மாட்டேங்குது. அப்பா - அம்மா ரெண்டு பேரையும், நீங்க லோக்கல்ல இருக்கறதால வந்து பாத்துட்டு போயிடுறீங்க. ஆனா, வருஷா வருஷம், நான், 'சம்மர் லீவு'ல கூடவே இருந்து ஒரு மாசம் கவனிச்சேன்.

''ரெண்டு பேருக்கும், ஒரு குறையுமில்ல... வாடகை வருது, பென்ஷன் வருது, செலவும் எதுவுமில்ல. நேரம் நிறைய இருக்கறதால ரொம்ப யோசிக்கிறாங்க... நமக்கு மகன் பொறந்திருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு, இப்ப, 'பீல்' பண்றாங்க...

''அது மட்டுமில்ல, உங்க வேலைகளை, நீங்களே உங்க பிள்ளைகள, புருஷன வச்சு கவனிச்சிக்கறதால, அவங்க, தங்கள தேவப்படாதவங்களா ஆயிட்டதாவும், தன்கிட்ட எந்த மகளும் எதையும் சொல்றதில்ல... தான் உதவாக்கறையா போயிட்டதாவும் நினைக்கிறாங்க...

''இன்னொன்னு, அப்பா தொட்டதுக்கெல்லாம் அம்மாவோட சண்ட போடறாரு... 'ஐடில் மைன்ட் இஸ் டெவில்ஸ் வொர்க்ஷாப்' கேள்விப்படதில்ல, நீ...

''தன்னை விட மத்தவங்க கஷ்டப்படுறாங்கன்னு தெரிஞ்சா, மனுஷனோட மனசு, 'பரவால்ல கடவுளே, என்ன நல்லபடி வச்சிருக்கியே'ன்னு, 'பீல்' பண்ணும்... 'ஹுயுமன் சைக்காலஜி!' அதனால தான், என்னோட சின்ன சின்ன கஷ்டத்த எல்லாம், பெரிசாக்கி சொல்லிட்டேருக்கேன்...

''இன்னொன்னு நல்லா யோசிச்சு பாரு... 'நாளைக்கு, வங்கிக்கு போகணும்; அடுத்த வாரம், 'ப்ராபர்ட்டி டாக்ஸ்' கட்டணும்'ன்னு, அப்பாவுக்கு ஞாபகப்படுத்திட்டே இருப்பாங்க, அம்மா. அது அவங்க நினைவுகள வலுவேற்றும்.

''அப்பா, தெரு முனை வரை நடப்பார். ஆட்டோல ஏறி, எறங்கி, வரிசையில நின்னு, நிறைய வேலை செய்து உடம்புக்கு பயிற்சி ஆகிடும். கொஞ்சம் யோசிச்சு பாரு, இந்த வயசு வரைக்கும் ஓடியாடி வேல செஞ்சவங்க, முடியலன்னு படுத்துட்டா பார்க்க நல்லாருக்குமா?

''பொறந்த வீட்டில் ஆண் துண இல்லாத நமக்கு, அவர் மட்டும்தானே துணை. அவரை, 'ஆக்டிவா' வச்சுக்க வேண்டியது நம் கடமையல்லயா... மத்தபடி எனக்கென்ன ஒரு குறையுமில்ல, நான் நல்லாதான் இருக்கேன்,'' என்று, ஜானு பேசி முடித்ததும், தெளிவானாள், அலமு.

''நல்ல டீச்சருடி நீ. சரி... புள்ளைங்கள வரச்சொல்லு, பெருங்களத்துாருக்கு, 'ஓலா புக்' பண்றேன்,'' என்றபடி, தங்கைக்கும், அனு குட்டிக்கும் தேவையானதை பைகளில் வைக்க தயாரானாள், அலமு.

மிதிலா வைத்யநாதன்






      Dinamalar
      Follow us