
முன்னிரவு நேரம்; பிளாட்பாரத்திலிருந்த டிஜிட்டல் கடிகாரங்கள், தங்களது சிவப்பு கண்களை சிமிட்டி, 20:10 என காட்டி கொண்டிருந்தன. முதலாவது நடைமேடையில் வந்து நின்றிருந்த மைசூர் எக்ஸ்பிரசை, மக்கள் மொய்த்துக் கொண்டிருக்க, 'கன்பார்ம்' ஆகாத டிக்கெட்டுகளை வைத்திருந்தவர்கள், கறுப்பு கோட்டு அணிந்திருந்த டிக்கெட் பரிசோதகரை எதிர்பார்ப்புடன் துரத்திக் கொண்டிருந்தனர்.
''டேய் விக்னேஷ்... அம்மா கையை விட்டுட்டு, மெதுவா மேல ஏறு,'' கணவர் குரல் கொடுக்க, பையனை மெல்ல எங்கள் கம்பார்ட்மென்ட்டில் ஏற்றி விட்டு, லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு நானும் நுழைந்தேன். இருக்கையின் கீழே பொருட்களை வைத்த பின், மேலே ஏறி, அமர்ந்தேன். எதிர் இருக்கையில் வயதான தம்பதி அமர்ந்திருந்தனர்.
''வா குழந்தை... இப்படி தாத்தா பக்கத்தில உட்காரு; ஜன்னலோர சீட் வேணுமா?'' கேட்டுக் கொண்டே அவர் நகர்ந்து கொள்ள, விக்னேஷ், உடனடியாக ஜன்னல் சீட்டைப் பிடித்துக் கொண்டான். 'ஏன் இந்த கரிசனம்..' என்ற எண்ணம் என்னுள் ஓடியது.
''உங்க சீட் நம்பர் என்ன... லோயர் பர்த்தா, மிடிலா?'' என்று கேட்டார் பெரியவர். நான் பதில் சொல்வதற்கு முன், ''மாத்திரைய போட்டுக்குறீங்களா,'' என்றபடி, ரெண்டு மாத்திரைகளையும், தண்ணீர் பாட்டிலையும் அந்த பெண்மணி நீட்ட, வாங்கி விழுங்கினார் பெரியவர்.
'போச்சு... உடம்பு முடியாதவங்க போலிருக்கு; மிடில் பர்த்தை கேட்கப் போறாங்க... என்ன பதில் சொல்றது... நான்கு வயது விக்னேஷுடன், அப்பர் பர்த்தில் படுப்பது ரொம்ப கஷ்டம்; என்ன செய்யலாம்...' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
தண்ணீர் பாட்டிலை வாங்கி மூடி, பையில் வைத்து கொண்ட பின், ''உங்களுக்கு எந்த பர்த்?'' என்று, அந்த அம்மாவும் அதே கேள்வியைக் கேட்டார்.
கறாராக பதில் சொல்லிவிட வேண்டும் என்ற நினைத்து, ''அவருக்கு அப்பர்; எனக்கு மிடில். ஆனா, பாருங்க குழந்தையப் வைச்சுக்கிட்டு...'' என, நான் முடிக்கும் முன், ''எதுக்கு கஷ்டப் படணும்ன்னேன்... எங்க ரெண்டு பேருக்குமே லோயர் பர்த்து தான். அதில ஒண்ணுல நீ குழந்தையோட, பயமில்லாம படுத்துக்கம்மா; என்னால மிடில் பர்த்தில ஏற முடியும்,'' என, அந்த அம்மாள் சொல்ல, எனக்குள் ஆச்சர்யம் குமிழ்ந்து, என் கணிப்பு பொய்த்து போனது.
''ரொம்ப தேங்க்ஸ் மாமி... என்னால உங்களுக்கு ஏன் வீண் சிரமம்,'' சம்பிரதாயமாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வயிற்றைப் பிடித்தபடி அழ ஆரம்பித்தான் விக்னேஷ்.
''என்னாச்சுடா?''
''வயிறு வலிக்குதும்மா,'' என்றவனின் அரற்றல் அதிகமானது.
''பாத்ரூம் போணுமா... வர்றியா?'' என்று கேட்டேன்.
பதில் சொல்லாமல், வயிற்றைக் குறுக்கி, இருக்கையில் நெளிந்தான்.
''இவன் இப்படி செய்றானே... இப்ப என்ன செய்யறது...'' எதுவும் புரியாமல், கணவரிடம் கேட்டேன். உடனே அந்த அம்மாள், ''குழந்தைக்கு வயிறு எங்க வலிக்குது... மேலயா, கீழயா எங்க காட்டு பாப்போம்,'' என்று கேட்க, அவன் இடத்தை சுட்டிக் காட்டினான்.
''அவ்வளவு தானே... இதோ சரியாப் போச்சு பாரு... எங்க வாய் திறந்து காட்டு; பாட்டி கொடுக்கறதை குடிச்சுடுவியாம்,'' சொல்லியபடியே, தன் பையில் இருந்த ஒரு பாட்டிலில் இருந்ததை, விக்னேஷின் வாயில் விட செல்ல, ''என்ன மாமி அது...'' என்றேன். ''ஓம திரவம் தான்,'' என்றாள் மாமி.
''எனக்கு எதுவும் வேணாம்,'' சிணுங்கினான் விக்னேஷ்.
''குழந்தை... யார் வீட்டுக்குப் போறீங்க?''
''எங்க ரமா பாட்டி வீட்டுக்கு,'' வலியை விழுங்கிக் கொண்டு பதில் சொன்னான் விக்னேஷ்.
''அப்படிச் சொல்லு! நாளைக்கு ரமா பாட்டி செய்து கொடுக்கற நூடுல்ஸை நல்லா சாப்பிடணும்ன்னா வயித்து வலியோட போனா முடியுமா... இப்ப இந்த விசாலம் பாட்டி சொல்றதை சமத்தா கேட்பியாம்,'' என்றாள்.
''ம்ஹூம்... நூடுல்ஸ் கெட்டதாம்; சாப்பிட்டா இன்னும் வயிறு வலிக்குமாம். அம்மா சொல்லியிருக்காங்க,'' வலியையும் சகித்து கொண்டு விக்னேஷ் சொல்ல, சிரித்தபடி, ''சமத்து... அப்ப பாட்டியை, சேவை செஞ்சு தர சொல்லு, சரிதானா?'' இதமாய் பேசியபடி, ஓம வாட்டரை அவன் வாயில் ஊற்றினாள். வாயில் ஊற்றியதை முக மாறுதலுடன் விழுங்கி, சிறிது தண்ணீர் குடித்தான். சற்று நேரத்தில், ஒரு மெல்லிய ஏப்பம் வர, வலி தீர்ந்து உற்சாகமானான்.
ரயில் ஒரு பிளிறலுடன் புறப்பட்டது. எங்கள், 'பே'க்கு இன்னும் இருவர் வந்த சேர வேண்டும். அடுத்தடுத்த ஸ்டேஷங்களில் ஏறுபவர்களாய் இருக்கும். ஏற்கனவே இரவு உணவை முடித்து விட்டு வந்திருந்தமையால், அந்த முதிய தம்பதியிடம் பேச்சு கொடுத்தேன்...
''ரொம்ப தேங்க்ஸ் மாமி... என்னடா இவன் திடீர்ன்னு வயிறு வலிக்குதுன்னு சொல்றானே... வண்டி வேற புறப்படப் போகுது. ஊருக்கு போகலாமா இல்ல இறங்கிடலாமான்னு தெரியாம, குழப்பமா இருந்தது. நல்ல வேளை... உங்க கை வைத்தியம் காப்பாத்திடுச்சு; ஆமாம்... நீங்க எது வரைக்கும் போறீங்க?''
''பெங்களூருல என் சின்ன மகன் இருக்கான்; அங்க தான் போறோம்.''
''ரெண்டே ரெண்டு பை தான் இருக்கு; பெரிசா ஒண்ணும் லக்கேஜ் இல்ல போலிருக்கே...'' என்றேன்.
''ஒரு பையில, என் கணவருக்கு தர வேண்டிய மருந்து, மாத்திரையும், சாமி பாட்டு புத்தகமும், இன்னொன்ல, சின்னவன் வீட்டுக்கு கொஞ்சம் தின்பண்டம் இருக்கு. மத்தபடி எங்க உடுப்பெல்லாம் அவன் வீட்டிலேயே இருக்கும். ரெண்டு மாசம் பெரியவன்கிட்டயும், ரெண்டு மாசம் பெங்களூருக்கு சின்னவன்கிட்டயும் போவோம். அதனால, கையில கொண்டு போற லக்கேஜ் அதிகம் இருக்கிறதில்ல,'' என்றார்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில், பக்கத்து, 'பே'யிலிருந்து சற்று பலமான பேச்சுக்குரல் எழுந்தது; அதில் கொஞ்சம் பதற்றமும் இருந்தது. கூடவே ஒரு பெண்ணின் அரற்றலும்!
எழுந்து சென்று எட்டிப் பார்த்தோம். ''ஈஸ்வரா... என்ன இது சோதனை; நாம வேணா அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி, டாக்டர் கிட்ட காட்டிட்டு அப்புறம் போலாம்,'' என்று ஒருவர் சொல்ல, இடையில் புகுந்த விசாலம் மாமி, ''என்னாச்சு... யாருக்கு என்ன?'' என்று கேட்டாள்.
''இவ என் பொண்ணு... வளைகாப்பு முடிஞ்சு பிரசவத்துக்கு கூட்டிட்டு போறோம்; திடீர்னு இடுப்பு வலிக்குதுன்னு சொல்றா; ஒண்ணுமே புரியல,'' என்றாள் பெண்ணின் தாயார்.
''கொஞ்சம் நகருங்க... நான் பாக்கறேன்,'' என்று கூறி, கர்ப்பிணி பெண்ணின் அருகில் சென்று, ''ஏம்மா... வயிறு வலிக்குதா, இடுப்பு வலிக்குதா...'' என கேட்டுக் கொண்டே மெல்ல வயிற்றை நீவிக் கொடுத்தாள்.
அப்பெண் சரியான இடத்தை தொட்டுக் காட்ட, ''அப்படியா... இது, நிச்சயமா இடுப்பு வலியில்ல; அதுவுமில்லாம, குழந்தை தலை இன்னும் திரும்பவே இல்ல; அதுக்கு இன்னும் நிறைய நாளிருக்கு,'' என்றாள் மாமி.
''நான் வேணா, பாரல்கான் மாத்திரை தரட்டுமா?'' என பெண்ணின் தகப்பனார் சொல்ல, வேகமாக மறுத்து தலையாட்டிய மாமி, ''கூடவே கூடாது... இது மாதிரி வயத்து வலி மாத்திரையோ, வேற வலி நிவாரணியோ நாமளா தர கூடாது; பிளாஸ்கில வெந்நீர் வெச்சிருந்தா எடுங்க,'' என்றவள், ''இதோ வரேன்...'' சொல்லி, தன் இருக்கைக்கு திரும்பி, பையிலிருந்து, ஒரு டப்பாவை எடுத்து, அதிலிருந்த சீரகத்தை அப்பெண்ணின் வாயில் போட்டு, ''நல்லா மென்னு இந்த வெந்நீரைக் குடி,'' என்றாள்.
சற்று நேரத்திலேயே வலி நீங்கி, அந்த பெண்ணின் முகத்தில் மலர்ச்சி வந்தது.
''இது திருக்கருகாவூர் கோவில்ல பூஜை செய்து தந்த எண்ணெய்; இதை தினம் கொஞ்சம் வயத்தில் தடவிக்க... அதோட, இந்த
கர்ப்பரட்ஷாம்பிகை பாட்டையும், தாயுமானவர் பாட்டையும் சொல்லிட்டு வந்தா, ராஜா மாதிரி பையன் பொறப்பான்,'' என ஆசீர்வதித்து, அவளுக்கு திருஷ்டி கழித்து, தன் இருக்கைக்கு திரும்பினாள் மாமி.
இப்படி எல்லாருக்கும் உபகாரம் செய்து, ஓடியாடி கொண்டிருப்பதால் தான், அவருக்கு வயதுக்கு மீறிய வேகமும், சுறுசுறுப்பும் சாத்தியமாகி உள்ளதாக எனக்கு தோன்றியது. இதை, மனம் விட்டு அவரிடம் சொல்லி, பாராட்டினேன்.
''ஏதோ நாம மத்தவங்களுக்கு உதவி செஞ்சா, நம்ம தேவையை ஆண்டவன் பாத்துப்பான்; என்ன நான் சொல்றது...'' என சுருக்கமாகவும், தெளிவாகவும் சொன்ன அவரை பார்த்து பிரமித்தேன்.
''திடீர்னு கர்ப்பரட் ஷாம்பிகை பிரசாத எண்ணெய் உங்க கிட்ட எப்படி...''
''போன முறை பெங்களூரூ போயிருந்தப்ப, சின்னவன் வீட்டுல வேலை செய்யறவளோட பொண்ணு, கர்ப்பமா இருக்கான்னு கேள்விப்பட்டேன்; அதான் வரவழைச்சேன். அதில ஒண்ணைத்தான் இப்ப கொடுத்தேன்,'' என்று மாமி சொல்ல, எனக்குள் பிரமிப்பு.
'இப்படி எல்லாம் கூட ஒருவர் இருக்க முடியுமா... எல்லாரையும் உறவாக பாவிக்கும் இவருக்கு, எந்த குறையும் வராது, நீண்ட நாட்கள் நன்றாக இருக்க வேண்டும்...' என மனதார பிரார்த்தித்தேன்.
பின், ஏதேதோ பேசி கொண்டிருந்து, குளித்தலை தாண்டியதும், அவரவர் பெர்த்தில் படுத்தோம்.
அலாரம் வைத்து எழுந்து உட்கார்ந்த போது, ஏற்கனவே எழுந்து, மாமா காலடியில், மாமி அமர்ந்திருப்பது தெரிந்தது. என் கணவரையும், குழந்தையையும் எழுப்பினேன்.
அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்க, மாமி, என்னிடம், ''நீயும் கண்டோன்மென்ட்தான் இறங்கணுமா... வா... ஸ்டேஷன் வந்துடுச்சு,'' என்று கூறி, இறங்க ஆயத்தமானார்.
இறங்கிய பயணிகள் ஆட்டோக்களையும், இதர போக்குவரத்தையும் நாடி சென்று விட, நாங்கள் இரு குடும்பம் மட்டும் காத்திருந்தோம். எங்களை, என் தம்பி அழைத்து செல்வதாக கூறியிருந்தான். 'மாமி எப்படி செல்லப் போகிறார்... அவரிடமே கேட்டு விடலாம்...' என வாயெடுக்கும் முன், ''அதோ... என் பையன் வந்துட்டான்,'' என்றார் மாமி பரபரப்பாக!
''வாடா ஜெயராமா... எப்படியிருக்க... வீட்டுல மருமக, குட்டிப்பய எல்லாரும் நல்லா இருக்காங்களா?'' குதூகலமாய் கேட்டார் மாமி.
''அதெல்லாம் கிடக்கட்டும்... ரெண்டு மாசம் ஆனா, உடனே புறப்பட்டு வந்துடணுமா... கூட, 10 நாட்கள் இருந்தா, உன் மூத்த புள்ளைக்கு கட்டுப்படியாகாதோ... இங்க அவ, 20 நாள் ட்ரெயினிங்கிற்காக டில்லி போறான்னு போன் செய்து சொன்னேனே... இந்த நேரத்தில் இங்க வராட்டா என்ன...'' சுற்றிலும் யார் இருக்கின்றனர் என்ற சிந்தனை கூட இல்லாமல், கடுங்குரலில் கேட்க, நான் விக்கித்து போனேன்.
'என்ன ஒரு வரவேற்பு... இதற்கு மாமி என்ன சொல்லப் போறார்...' என்று நினைத்து, அவரையே பரிதாபமாக பார்த்தேன். கனல் கக்கிய தன் மகனின் வார்த்தைகளை விழுங்கியபடியே, ''நீ போன் செய்திருந்ததா, உங்க அண்ணன் சொன்னதால தான் உடனே வந்தேன். டைபாய்ட் வந்து, இப்பத் தான் உனக்கு உடம்பு ஓரளவு தேறியிருக்கு. இந்த நேரத்துல சாப்பாடு ரொம்ப பத்தியமா, பக்குவமா இருக்கணும். உன் பொண்டாட்டி ஊர்ல இல்லன்னு நீ பாட்டுக்கு வெளியில சாப்பிட்டுடுவியேன்னு தான், ஓடி வந்துட்டேன்,'' என்றார் மாமி.
எனக்கு மனம் நிறைந்து போனது. மாமி மாதிரியான மனுஷிகளால் மட்டும் தான் இப்படி யோசிக்கவும், பேசவும் முடியும். இவர்கள் எல்லாம் சந்தன மரங்களைப் போன்றவர்கள். சந்தன மரத்தை யார் உரைத்தாலும், எப்படி சிதைத்தாலும், வாசம் மட்டும் தானே தரும். கண்டோன்மென்ட் ஸ்டேஷனே அந்த சுகந்த மணத்தால், நிறைந்திருப்பதாக எனக்கு தோன்றியது.
ஆர்.பிரகாஷ்