தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சாவித்திரி! (14)

சாவித்திரி! (14)

சாவித்திரி! (14)


PUBLISHED ON : ஜூலை 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

கே.பாலச்சந்தர் இயக்கிய, நீர்க்குமிழி படத்தைப் பார்த்த சாவித்திரிக்கு, அக்கதை பிடித்துப் போக, நவராத்திரி படத்தை தெலுங்கில் தயாரித்தது போல, நீர்க்குமிழி படத்தையும் தெலுங்கில் தயாரிக்க விரும்பினார்.

ஆனால், அப்படத்தை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

நீர்க்குமிழி படம், 1969ல், சாவித்திரியின் இயக்கத்தில், சிரஞ்சீவி என்ற பெயரில் தெலுங்கில் உருவானது. பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் சலம் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மாத்ர தேவதா படம் கொடுத்த மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து சாவித்திரி இயக்கும் படம், சிரஞ்சீவி என்பதால் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. படத்தைப் பற்றிய பரபரப்பான செய்திகள் பரவ ஆரம்பித்தன. பலத்த எதிர்பார்ப்பை, சிரஞ்சீவி படம் உருவாக்கியது.

ஆந்திராவெங்கும் வெளியாகிய இப்படம், வெற்றிக்குப் பதில் தோல்வியை சந்தித்தது; இதனால், மனதளவில் நொந்து போனார், சாவித்திரி. 'இனி சாவித்திரி இயக்கம் அவ்வளவு தான்...' என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தன.

அடுத்து சிவாஜி நடித்து, இமாலய வெற்றி பெற்ற, வியட்நாம் வீடு படத்தின் உரிமத்தை வாங்கி, தெலுங்கில் தயாரிக்க ஆசைப்பட்டார், சாவித்திரி. இயக்கத்தையும் அவரே செய்ய விரும்பினார்.

சிவாஜி நடித்த வேடத்தில், தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நாகேசுவரராவை நடிக்க வைக்க முயற்சித்தார்; ஆனால், நாகேசுவரராவுக்கு கையில் அதிக படங்கள் இருந்த காரணத்தால், அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.

அதேசூழலில் தான், என்.டி.ராமராவும் இருந்தார். ஆனால், சாவித்திரியின் மீது கொண்ட நன்மதிப்பின் காரணமாக, ஆறு மாதங்களுக்குப் பின், நடித்துத் தருவதாக உறுதியளித்தார், என்.டி.ராமராவ்.

சிரஞ்சீவி படம் தந்த தோல்வி, சாவித்திரியை சிந்திக்க விடவில்லை. எப்படியும் ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே, அவர் மனதில் மேலோங்கியிருந்தது.

நாகேசுவரராவ், என்.டி.ராமராவ் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றவுடன், ஜக்கையாவை, சிவாஜி நடித்த வேடத்துக்கு ஒப்பந்தம் செய்தார்; கதாநாயகியாக சாவித்திரியே நடித்தார்.

விந்த சம்சாரம் என்று பெயரிட்டு, சாவித்திரி தயாரித்து, இயக்கிய அப்படம் வெளியாகி, சிரஞ்சீவி கொடுத்த தோல்வியை விட, மிகப் பெரிய தோல்வியைத் தந்தது.

சிவாஜி நடித்த கனமான வேடங்களில், பிரிஸ்டீஜ் பத்மநாபய்யர் வேடமும் ஒன்று! சிவாஜி அளவிற்கு, அந்த வேடத்தை நேர்த்தியாக நடிக்க, யாராலும் முடியாது. சிவாஜி நடித்த வேடத்தில், என்.டி.ராமராவ் நடித்திருந்தால், அவருக்கு இருந்த செல்வாக்கால், அந்த வேடம் பேசப்பட்டு இருக்கலாம்.

கதாநாயகியாக நடித்த சாவித்திரி, இயக்கத்தையும் சேர்த்துக் கவனித்ததால், அவர் முகத்தில் தெரிந்த இறுக்கம், கதாபாத்திரத்திலும் எதிரொலித்தது.

அவசரங்கள் கொடுக்கும் அடிகள், சில நேரங்களில் பாடமாக அமையும். சில நேரங்களில், எழுந்திருக்க முடியாதபடி வீழ்த்தியும் விடும். சாவித்திரி எழுந்திருக்க முடியாதபடி, பலமான அடியை இப்படம் அவருக்குக் கொடுத்தது.

கடந்த, 1967ல் இருந்து படங்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியதால், பிற நிறுவனங்கள் தயாரித்த படங்களில், அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது; இதனால், படவாய்ப்புகளும் குறைந்தன.

மன அழுத்தம், கடின உழைப்பு என, பல பிரச்னைகள் சாவித்திரியை சுற்றி வட்டமிட, அவரின் உடலைப் பற்றிக் கவலைப்பட, அவருக்கு நேரம் இல்லாமல் போனது. தொடர் தோல்விகளால், அதுவரை, நலம் விரும்பிகளாக காட்டிக் கொண்ட பலரும், சாவித்திரியை விட்டு விலகினர்.

விந்த சம்சாரம் படத்தை தெலுங்கில் தயாரித்த அதே வேளையில், சிவாஜியை வைத்து, தமிழில் சாவித்திரி ஒரு படத்தை இயக்கினார்.

சாவித்திரியை பற்றி தமிழகத்தில் இன்றும் யாரிடம் பேசினாலும், சிவாஜி நடிக்க, அவர் இயக்கிய கடைசிப் படத்தைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.

கடந்த, 40 ஆண்டுகளாக அந்தப் படத்தைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பதால், அப்படத்தின்போது நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை, தேடிப் போய் பதிவு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

பீம்சிங், தன் புத்தா பட நிறுவனத்தின் சார்பில், முதன் முதலாக தயாரித்த படம், பதிபக்தி. இப்படத்தில் ஒரு காட்சியில் சாவித்திரியின் ஏழ்மையை, ஊர்க்காரர்கள் கேலியாகப் பேசிவிடுவர். எந்தச் சூழலிலும், தன்மானத்தோடு வாழும் சாவித்திரி, வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விற்று, கடனை தீர்க்க, தன் தாயிடம் சண்டை போடுவார்.

சாவித்திரியின் உண்மைக் குணத்தைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரமாக, பதிபக்தி படம் அமைந்தது. அந்த காட்சியில் விரக்தி, சோகம், கோபம் மற்றும் நெகிழ்வு என, நான்கு வகை நவரசத்தை ஒரே ஷாட்டில் காட்டி இருப்பார்.

வாழ்க்கையில் எந்தச் சூழலிலும், தைரியத்தை இழந்ததில்லை சாவித்திரி. எவ்வளவு இக்கட்டுகள், தன்னைச் சுற்றி நின்றாலும், தன் தன்னம்பிக்கையை, யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பதிபக்தி படத்தில், சாவித்திரி நடித்த, அல்லி கதாபாத்திரம், அதை பிரதிபலிப்பதாக இருந்தது.

கலங்கி யார் வந்தாலும், கருணை காட்டத் தெரியும், அன்பு என்று வந்து விட்டால், உயிரையும் கொடுக்கத் தெரியும். இதுதான், சாவித்திரியின் குணாதிசயம்.

சாவித்திரி நம்பிய பலர், பொய் சொல்லி ஏமாற்றிய போதும், தன்னை நம்பி வந்தவர்கள் ஏதோ சூழ்நிலையில் இப்படி நடக்கின்றனர் என, பெருந்தன்மையில் அவர்களை அணைத்துக் கொண்டவர். தன் கையை அள்ளிக் கொடுக்க மட்டுமே நீட்டி இருக்கிறார். தாருங்கள் என, ஒருபோதும் எவரிடமும் கை நீட்டியதில்லை.

'ஏழையாகி விட்டான் சந்திரபாபு, அவன் கிறுக்குப் பையன்... என ஒட்டுமொத்த கோடம்பாக்கம் அந்தக் மகாப் பெரிய கலைஞனை ஒதுக்கியபோது, அவருக்கு இரக்கம் காட்டியவர் சாவித்திரி மட்டுமே!

எவருக்கும் அஞ்சாமல், தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, ஒரு படத்தைச் சுற்றி நடைபெற்ற சம்பவங்களால், சாவித்திரி வாழ்க்கையை இழந்து விட்டார் என்றால், நம்பக் கடினமாக இருக்கிறது.

ஜக்கம்மா படத்தில், சாவித்திரியை புகழ்ந்து பாடுவது போல, ஒரு காட்சி வரும். சக்தியாக, சாவித்திரியை உருவகப்படுத்தி, அதில் சொல்லப்படும் அத்தனை வரிகளும், சாவித்திரியின் குணங்களை சொல்லும்.

துணிச்சலில் ஆண்களை விட வலிமையான சாவித்திரி, எங்கே தடுமாறினார், எவரால் தடுமாறினார், எதனால் தடுமாறினார்? உண்மைகளை அறிந்தால் உள்ளம் சுடும். சுட்டால் தானே சங்கு வெண்மை தரும். இங்கும் சூடுப்பட்டால் தான், உண்மைகள் தெளிவாகத் தெரியும்.

பீம்சிங்கின் சொந்த நிறுவனமான, புத்தா பிக்சர்சின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவர், ஜி.என்.வேலுமணி. இவர் சிவாஜி கணேசன் கொடுத்த ஒத்துழைப்பில், சரவணா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி, பாகப்பிரிவினை மற்றும் பாலும் பழமும் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்தார்.

இவர் மூன்றாவதாக தயாரித்த படம், பாதகாணிக்கை. ஜி.என்.வேலுமணி தயாரிப்பாளரானதின் பின்னணியில், சுவாரசியமான ஒரு கதை உண்டு.

தொடரும்.

- ஞா. செ. இன்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us