தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பற்றாக்குறை மனிதர்கள்!

பற்றாக்குறை மனிதர்கள்!

பற்றாக்குறை மனிதர்கள்!


PUBLISHED ON : ஆக 19, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளிர்பதனமூட்டப்பட்ட அறை -

சுழலும் சேரில் அமர்ந்திருந்தார், நிர்வாக இயக்குனர் சந்தோஷ்குமார். நேர் எதிர் சுவற்றில் நிறுவனரின் புகைப்படம், மின்சார விளக்கொளியில் மிளிர்ந்தபடி இருந்தது.

சந்தோஷ்குமாரின் கையில் இருந்த, அந்த பழுப்பு கவருக்குள், மாயகிருஷ்ணனின் பதவி உயர்வு ஆணை அச்சிடப்பட்டிருந்தது.

இன்டர்காமில் மாயகிருஷ்ணனை அழைத்து, ''என் அறைக்கு வா...'' என்றார், சந்தோஷ்குமார்.

கதவை தட்டி, உள்ளே வந்தான், மாயகிருஷ்ணன். வயது, 54, உயரம், 170 செ.மீ., 90 கிலோ எடை; கண்களில் பவர் கிளாஸ்.

''வணக்கம் பாஸ்...''

''வணக்கம்; ஒரு சந்தோஷமான செய்தி... நேற்று வரை இந்த நிறுவனத்தில் மேனேஜராக இருந்த நீ, இன்றிலிருந்து, சூப்பர் கிரேடு மேனேஜராக பதவி உயர்வு பெற்றிருக்கிறாய்... அதற்கான, ஆணை இது,'' என்று கூறி, கவரை நீட்டினார், சந்தோஷ்குமார்.

வாங்கிக் கொண்ட மாயகிருஷ்ணன், ''நன்றி பாஸ்...'' என்றார், சுரத்தில்லாமல்!

''என்னய்யா முகத்தில் சந்தோஷத்தையே காணோம்... வர மாசத்துல இருந்து, 20 ஆயிரம் ரூபாய் கூடுதலாக சம்பளம் வாங்கப் போற...''

செயற்கையாய் முகத்தை மலர்த்திய மாயகிருஷ்ணன், ''ரொம்ப மகிழ்ச்சி பாஸ்...'' என்றார்.

''ஓகே... நீ, உன் புதிய குளிர்பதனமூட்டப்பட்ட அறைக்கு செல்லலாம்... வாழ்த்துகள்; கொடுத்திருக்கும் புதிய பணியைச் சிறப்பாக செய்.''

''செய்வேன் பாஸ்...'' என்றபடி வெளியேறிய மாயகிருஷ்ணனின் முதுகை வெறித்தார், சந்தோஷ்குமார்.

முப்பது ஆண்டுக்கு முந்தைய நிகழ்வுகள் மனக்கண்ணில் தோன்றின.

சந்தோஷ்குமாரின் கார், அலுவலகத்தின் பிரதான வாசலை நெருங்கியது; கேட்டை திறந்து, 'சல்யூட்' அடித்தான், காவலாளி.

சிறிது, துாரத்தில், மஞ்சள் பையுடன் வாலிபன் ஒருவன் நின்றிருந்தான்; அவன் முகத்தில், ஏதோ ஒரு சோகம் அப்பியிருந்தது. அசப்பில் திருவிளையாடல், தருமி போலிருந்தான்.

'யாருய்யா அவன்... ஒரு வாரமா, நான் போறப்ப வர்றப்ப எல்லாம் நின்னு கும்பிடு போடுறான்... என்ன வேணுமாம் அவனுக்கு...' என்றார் சந்தோஷ்குமார்.

'உங்கள பாத்து, அவனுக்கு ஒரு வேலை கேக்கணுமாம்...'

'அவனை, என் அறைக்கு அனுப்பு....'

'சரிங்க பாஸ்...'

கதவை உள்ளே தள்ளுவதா, வெளியே இழுப்பதா என தெரியாமல் திணறி, உள்ளே வந்த அவன், சந்தோஷ்குமாரை பார்த்து, பெரிதாக கும்பிடு போட்டான்.

'யாரப்பா நீ... எதுக்காக ஒரு வாரமா எங்க ஆபீஸ் வாசல்ல நிக்ற?'

'உங்கள பாக்கதான் நிக்கிறேன்; எனக்கு, உங்க ஆபீஸ்ல ஒரு வேலை வேணும்...'

'உன் பெயர் என்ன?'

'மாயகிருஷ்ணன்.'

'சொந்த ஊர்?'

'சென்னை, மந்தைவெளி...'

'என்ன படிச்சிருக்க?'

'பிளஸ் 2 பெயில்...'

'இப்ப, எங்க ஆபீஸ்ல எந்த வேலையும் காலி இல்ல; எதுக்காக நான், உனக்கு வேலை குடுக்கணும்ங்கறதுக்கு நியாயமான அஞ்சு காரணம் சொல்லு...'

'முதல் காரணம், இந்த உலகத்துலயே அதிக பாவப்பட்ட ஜென்மம் நான் தான். பென்ஷன் இல்லாம, ஓய்வு பெற்று வீட்டில் படுத்திருக்கும் அப்பா; சீக்காளி அம்மா. என்னையே நம்பியிருக்கும் ரெண்டு தம்பி, தங்கச்சிகன்னு மொத்தம் ஆறு பேர். ரெண்டாவது, வாடகை வீட்டுலதான் குடியிருக்கோம்; ஆறு மாசமா வாடகை தரல; வர்ற மாசம் தரலைன்னா, வீட்ல இருக்கற தட்டுமுட்டு சாமான்களை துாக்கி விட்டெறிஞ்சிடுவேன்னு ஹவுஸ் ஓனர் மிரட்டுறார். மூணாவது, குழம்பு கூட்டு, பொரியல்ன்னு எதுவும் வேணாம்; சின்ன வெங்காயத்தை கடிச்சுகிட்டு கஞ்சியாவது குடிக்க விரும்புறேன். நாலாவது, எவ்வளவு நாள்தான் வெட்டி ஆபீசரா ஊரை சுத்தறது... ஒரு வேலைக்கு போனாதானே வாழ்க்கையில செட்டிலாக முடியும். ஐஞ்சாவது, இன்னும் பல காரணங்கள் இருக்கு; நீங்க அஞ்சு கேட்டதினால அஞ்சை சொன்னேன்...'

சிரித்து விட்டார் சந்தோஷ்குமார். 'நல்லா பேசுறய்யா... நாளையிலிருந்து நீ எங்க நிறுவனத்தின் அலுவலக உதவியாளன்; உன் பணி ஆணையை வாங்கிட்டுப் போ...'

'நன்றி எஜமான்...' காலில் விழப் போனவனை தடுத்தார், சந்தோஷ்குமார்.

'எஜமான்னு சொல்லாதே... பாஸ் அல்லது சார்ன்னு கூப்பிடு...'

'ஓ.கே., பாஸ்...'

'காலையில சாப்பிட்டாயா?'

'இல்லங்க பாஸ்...'

'இந்தா நுாறு ரூபாய்... போய் ஓட்டல்ல ஏதாவது சாப்பிட்டு வா... முன் பணம், 500 ரூபா தரச்சொல்றேன்; வீட்டு வாடகைய கொடு...' பணத்தை நீட்டினார்; 'தெய்வமே...' என்று கும்பிட்டு வாங்கிக் கொண்டான்.

'தெய்வம் அல்ல; பாஸ். ஓ.கே., போகலாம்!'

கூனிக்குறுகி வணங்கியபடியே வெளியேறினான், மாயகிருஷ்ணன்.

அதன் பின், டியூஷன் வைத்து, மாயகிருஷ்ணனை, பிளஸ் 2வில் தேர்ச்சி பெற வைத்தார், சந்தோஷ்குமார். அத்துடன், மாலை நேர கல்லுாரியில், சேர்த்து, இளங்கலை வணிகவியல் படிக்க வைத்தார்.

இடையில், தந்தையின் மரணத்திற்கான, இறுதி காரிய செலவுக்கும், தாயின் மருத்துவ செலவுக்கும், தம்பி, தங்கைகள் கல்வி செலவுக்கும் அலுவலகத்தில் கடன் வாங்கினான், மாயகிருஷ்ணன்.

இளங்கலை வணிகவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றதும், இளநிலை உதவியாளனாக, பதவி உயர்வு பெற்றான், மாயகிருஷ்ணன்.

மாயகிருஷ்ணனின் திருமணம், அவனது தம்பி, தங்கைகளின் கல்லுாரி படிப்பு செலவுக்கு, அலுவலகத்திற்கு போய் வர, இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க, கடன்களும், முன்பணமும் என, மாறி மாறி வாங்கினான், மாயகிருஷ்ணன். நிறுவனத்திற்கு ஊழியம் செய்ய வந்த மாயகிருஷ்ணனுக்கு, நிறுவனம் ஊழியம் செய்தது.

வார இறுதி நாட்களில், ஐந்து நட்சத்திர பாருக்கு மாயகிருஷ்ணனை அழைத்து போவார், சந்தோஷ்குமார்.

இரண்டு, 'பெக்' போட்டதும், 'என்ன மாயகிருஷ்ணன்... மகிழ்ச்சியாக இருக்கிறாயா... இன்னும், உன் பட்ஜெட்டில் துண்டு விழுகிறதா?' என்று சந்தோஷ்குமார் கேட்டதும் தன் புலம்பல் புராணத்தை ஆரம்பித்து விடுவான், மாயகிருஷ்ணன்...

'தம்பியின் வேலைக்கு டிபாசிட் பணம் கட்டினேன்; மூத்த தங்கையின் திருமணத்தை நடத்தியதில் கொஞ்சம் பணப் பற்றாக்குறை. என் மகனை, பள்ளியில் சேர்க்க, பெரிய அளவில் பணம் கட்டினேன். என் பட்ஜெட்டில் துண்டு விழாமல் என்ன செய்யும்... ஒரு ஜமுக்காளமே விழுகிறது; அடுத்த பதவி உயர்வில், எனக்கு, நாலாயிரம் ரூபாய் சம்பளம் கூடும்; பட்ஜெட்டில் விழும் துண்டை சரி செய்து விடுவேன்...' என்பான்.

மறு மாதமே, மாயகிருஷ்ணனுக்கு அடுத்த பதவி உயர்வை அளித்தார், சந்தோஷ்குமார். இருந்தும், மாயகிருஷ்ணனின் புலம்பல் தொடரத்தான் செய்தது.

தொடர்ந்து, முதுகலை வணிகவியல் பட்டப் படிப்பு படிக்க, தன் சொந்த பணத்தை கொடுத்து உதவினார், சந்தோஷ்குமார். பாருக்கு முதலாளியுடன் இலவசமாய் குடிக்க போய், வீடு திரும்பும்போது, ஆயிரம், இரண்டாயிரம் பணம் வாங்கிப் போவான் மாயகிருஷ்ணன். பல சமயங்களில், மாத இறுதியில் வாங்க வேண்டிய சம்பளத்தை, விசேஷ அனுமதி பெற்று, 10ம் தேதியே வாங்கிக் கொள்வான். அலுவலகத்தில் பணிபுரியும் எல்லாரிடமும் சிறிய தொகைகளை கடனாய் வாங்கி இருந்தான்.

நான்கைந்து பதவி உயர்வுகளுக்கு பின், தற்சமயம், சூப்பர் கிரேடு மேனேஜர் பதவி கொடுத்திருக்கிறார்.

'மாயகிருஷ்ணன் அலுவலகம் வந்து செல்ல காரும், மொபைல் போன் ரீசார்ஜ், மதிய உணவு போன்ற செலவுகளை நிறுவனமே வழங்கும். இனி, நிச்சயம் மாயகிருஷ்ணனின் பட்ஜெட்டில் துண்டு விழாது...' என்று நினைத்தார், சந்தோஷ்குமார்.

நான்கு மாதங்களுக்கு பின் -

மாயகிருஷ்ணனை, பாருக்கு அழைத்து சென்றார், சந்தோஷ்குமார்.

இரண்டாவது, 'பெக்'கை ஒரே, மடக்காக குடித்தான், மாயகிருஷ்ணன்.

''என்ன மாயகிருஷ்ணா... கடன் தொல்லை இல்லாமல், உன் பட்ஜெட்டில் துண்டு விழாமல் சந்தோஷமாக இருக்கிறாயா?'' என்று கேட்டார், சந்தோஷ்குமார்.

உடனே, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான் மாயகிருஷ்ணன்.

''ஆயிரம் சதுர அடியில், புறநகரில் வீடு கட்டியிருந்தோம் இல்லயா... அதற்கு, காம்பவுன்ட் சுவரும், முதல் மாடியும் கட்ட சொல்லிட்டா, என் மனைவி; அதற்கு ஒரு செலவு. மகனுக்கு, பதஞ்சலி விற்பனை மையம் துவங்க, பகடி கொடுத்து, வாடகைக்கு இடம் பிடித்தோம்; அதற்கு ஒரு செலவு. மனைவி ஒரு வைர நெக்லஸ் கேட்டா, வாங்கி குடுத்தேன்; அதுக்கு ஒரு தனி செலவு. இந்த மாத பட்ஜெட்டில், ஒரு மெஹா துண்டு விழுந்துள்ளது, பாஸ்...'' என்றான்.

சந்தோஷ்குமாருக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது... 'மாயகிருஷ்ணன் போன்றோருக்கு, தினம், ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், அவர்களது தினசரி பட்ஜெட்டில், 10 லட்சம் ரூபாய் துண்டு விழவே செய்யும். பற்றாக்குறை மனிதர்கள், ஒருபோதும் தன்னிறைவு அடைய மாட்டார்கள்...' என்பது!

''அடுத்த பதவி உயர்வு எப்ப குடுப்பீங்க பாஸ்?'' அப்பாவி போன்று முகத்தை வைத்து கேட்டான், மாயகிருஷ்ணன்.

''உன் தகுதிக்கு மீறின பதவி உயர்வும், சம்பளமும் கொடுத்தாச்சு; ஆனாலும், உனக்கு திருப்தி என்பதே இல்ல. முதல்ல, உன் மனதை, திருப்திங்கிற பதவியில அமர வை; அதற்கு பின் பார்ப்போம்...'' என்று சொல்லி எழுந்து சென்றார், சந்தோஷ்குமார்.

குட்டி கார்க்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us