PUBLISHED ON : ஏப் 09, 2023

''அப்பா பேரு என்னன்னு சொன்னீங்க?''
''நாராயண மூர்த்தி.''
''வயசு?''
''எண்பத்தி மூணு.''
''அம்மா பேரு?''
''ஞானாம்பாள்.''
''வயசு?''
''எழுபத்தியொன்பது.''
கேள்விகளைக் கேட்டு விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தார், 'அரண்' முதியோர் காப்பக நிர்வாக மேலாளர், பரசுராம்.
''நீங்க, அவங்களுக்கு ஒரே மகனா?''
''இல்ல சார்... எனக்கு ஒரு அண்ணன் இருக்கார்.''
''மகன்கள் ரெண்டு பேர் இருக்கும்போது, வயசான அம்மா, அப்பாவை, முதியோர் காப்பகத்துல எதுக்காக சேர்க்க வந்திருக்கீங்க. காரணம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''
தர்மசங்கடமான புன்னகையொன்றை உதிர்த்து, பேச ஆரம்பித்தேன்...
''பெரிசா எந்த ஒரு காரணமும் இல்ல சார். என் அம்மா, அப்பா இதுநாள் வரைக்கும் அண்ணன் வீட்லதான் இருந்தாங்க. அண்ணன், வங்கியில் வேலை பார்க்கிறார். திடீர்ன்னு அவரை திருச்சியிலிருந்து ஊட்டிக்கு, 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க. அப்பாவுக்கு நுரையீரல் பிரச்னை. அம்மாவுக்கு, 'வீசிங்' இருக்கு. ஊட்டி குளிர் ஒத்துக்காது.''
பரசுராம் குறுக்கிட்டு, ''அதனால, அம்மா - அப்பாவும் ஊட்டி போக வாய்ப்பில்லை?''
''ஆமா சார்... என் வீட்ல இப்போதைக்கு அம்மாவும், அப்பாவும் தங்க முடியாது. காரணம் போன மாசம் தான் இப்ப இருக்கிற பழைய வீட்டை இடிச்சு கட்ட ஆரம்பிச்சோம். சமையலறையும், ஒரு படுக்கையறை மட்டுமே, இப்ப உபயோகத்துல இருக்கு.
''என் மனைவியும், நானும் மட்டுமே அந்த வீட்ல தங்க முடியும். வீட்டை கட்டி முடிக்கிற வரைக்கும், அம்மாவும், அப்பாவும் முதியோர் காப்பகத்தில் இருக்கிறது நல்லதுன்னு முடிவு பண்ணினேன். உங்க, 'அரண்' காப்பகம் நல்லாயிருக்குன்னு பல பேர் சொன்னதால, நான் போன வாரம் வந்து இங்கே விசாரிச்சுட்டு போனேன்.''
பேசிக் கொண்டிருக்கும்போதே என் மொபைல்போன் வெளிச்சம் பிடித்து, 'வைபரேஷனில்' கூப்பிட்டது. போனின் திரையில், மனைவி லலிதாவின் பெயர் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
''சார்... போன் பேசிட்டு வந்துடறேன்.''
''அதோ அந்த வலதுபக்க ஜன்னல் ஓரமாய் போய் நின்னு பேசுங்க. 'டவர் க்ளீயரா' கிடைக்கும்.''
போனை இடது காதுக்குப் பொத்தி, ''சொல்லு லலிதா,'' என்றேன்.
''நான் என்ன சொல்றது, நீங்கதான் சொல்லணும். உங்க அம்மா - அப்பாவை, 'அரண்' காப்பகத்தில் சேர்த்தாச்சா?''
''இன்னும் இல்ல.''
''ஏன்?''
''பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் காப்பகத்துக்கு வந்தோம். காப்பக மேனேஜர் இப்பத்தான் விண்ணப்பத்தை பூர்த்தி பண்ண ஆரம்பிச்சார். உன் போன் வந்தது.''
''சரி... உங்க அம்மா, அப்பா பக்கத்துல இருக்காங்களா?''
''இல்ல, அவங்க ரெண்டு பேரும் முன்னாடி இருக்கிற, வரவேற்பு அறையில் இருக்காங்க.''
''தனியா வந்துதானே பேசறீங்க?''
''ஆமா!''
''பெத்தவங்களைக் கொண்டு வந்து காப்பகத்தில் ஏன் சேர்க்கறீங்கன்னு மேனேஜர் உங்ககிட்டே கேட்டாரா?''
''ம்... கேட்டார்.''
''நீங்க என்ன சொன்னீங்க?''
''நீ எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தியோ அதை அப்படியே சொல்லிட்டேன்.''
''நம்பிட்டாரா?''
''நம்பற மாதிரி தான் சொல்லியிருக்கேன். அவர், நம் வீட்டை வந்து பார்க்கவா போறார்... சரி, நீ எப்போ ஊரிலிருந்து புறப்பட்டு வர்ற?''
''என்னது, ஊருக்கு புறப்பட்டு வர்றதா? உங்க அம்மா - அப்பாவை, 'அரண்' காப்பகத்துல சேர்த்துட்டு எனக்கு தகவல் கொடுங்க. அப்பத்தான் நான், என் அம்மா வீட்டிலிருந்து கிளம்புவேன்.''
''அவங்களை காப்பகத்துல கொண்டு போய் சேர்க்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு. என் அண்ணனும், அண்ணியும் கூட சரின்னு ஒத்துகிட்டாங்க. நானும் அதுக்குத் தேவையான ஏற்பாடுகளை பண்ணிட்டேன். இதுக்கப்புறமும் நீ உன் அம்மா வீட்லயே உட்கார்ந்துட்டிருந்தா எப்படி... புறப்பட்டு வரவேண்டியது தானே?''
மொபைல்போனின் மறுமுனையில், 'உச்' கொட்டினாள், லலிதா.
''சரி, ரெண்டு நாள் கழிச்சு வர்றேன். அதுக்குள்ள நீங்க மேலாளரிடம் விபரமா பேசி, அங்கே செய்ய வேண்டிய நடைமுறைகளை எல்லாம் சரியா செஞ்சு முடிங்க. பின்னாடி நமக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது.''
''அதெல்லாம் வராம நான் பார்த்துக்கறேன். உனக்கு சாயந்தரமா போன் பண்றேன்.''
இணைப்பைத் துண்டித்து மொபைல்போனை பாக்கெட்டுக்குள் போட்டு, ஒரு பெருமூச்சுடன், காப்பக மேனேஜரிடம் வந்தேன்.
பால்பாய்ண்ட் பேனாவால் காதை குடைந்து கொண்டிருந்தவர், செயற்கையான வருத்தத்தோடு, ''அம்மா - அப்பா ரெண்டு பேரும், 'டயாபடிக்' போலிருக்கே?''
''ஆமா சார்.''
''ஒண்ணும் கவலைப்படாதீங்க... நம் காப்பகத்துக்கு வாரத்துக்கு ரெண்டு தடவை, 'டயாபடிக் ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர்ஸ் வருவாங்க. 'சுகர்' அளவை பரிசோதித்து, தேவையான மருந்துகளை குடுத்து, சரி பண்ணிடுவாங்க,'' என்று சொல்லி, விண்ணப்ப படிவத்தை எடுத்து வைத்து, அதை பதில்களால் நிரப்ப, கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.
''இங்கே இருக்கிற அறைகளில், 'ஏ டைப்' கொஞ்சம் காஸ்ட்லி. 'பி டைப்' நடுத்தரமாய் இருக்கும். 'சி டைப்' கொஞ்சம், 'சிம்பிளாய்' இருக்கும். உங்க பெற்றோருக்கு எந்த மாதிரி அறை வேணும்?''
''நடுத்தர அறை போதும்.''
''சரி, 'ஏசி'யா... 'நான் ஏசி'யா?''
''ம்... 'நான் ஏசி' போதும்.''
''சாப்பாடு, சைவம் தானே?''
''ஆமா!''
''தனிப்பட்ட முறையில் ஏதாவது உணவு செய்து கொடுக்கணும்ன்னா, அதுக்குத் தனியாக பணம் செலுத்தணும்.''
''பரவாயில்லை, குடுத்துடறோம். மாசத்துக்கு, ஒருத்தருக்கு எவ்வளவு பணம் கட்டணும்?''
''அறை வாடகையோடு சேர்த்து, 25 ஆயிரம் ரூபாய். மருத்துவ, 'செக் - அப்' இலவசம். அட்வான்ஸ், 50 ஆயிரம் ரூபாய் கட்டணும்.''
''கட்டிடலாம்.''
''இந்தாங்க ரசீது... அதோ அந்த கவுன்டர்ல போய் பணம் கட்டிட்டு வாங்க. அதுக்குள்ள நான் அறையை ஒதுக்கிடறேன்.''
ரசீதை வாங்கி, தயக்கமாய் அவரைப் பார்த்தேன். அவர் என்ன என்பது போல் புருவங்களை உயர்த்தி, ''சொல்லுங்க,'' என்றார்.
''இன்னொரு விண்ணப்பம் பூர்த்தி செய்யணும்.''
''இன்னொன்னா... அது யாருக்கு?''
மெல்ல தலைகுனிந்தபடி, ''எனக்குத் தான்,'' என்றேன்.
காப்பக மேலாளர் பரசுராமின் கையிலிருந்த பேனா நழுவியது.
''என்னது உங்களுக்கா?''
''ஆமா!''
''உங்க அம்மா, அப்பாவை சேர்க்கத்தானே இந்த காப்பகத்துக்கு வந்தீங்க?''
''ஆமா.''
''இப்ப நீங்க எதுக்காக சேர்றீங்க?''
''என் அம்மா, அப்பாவை நான் பார்த்துக்க வேண்டாமா, அதுக்குத்தான். அவங்க இங்கே தங்கற அறைக்கு பக்கத்திலேயே எனக்கும் அறை போட்டுடுங்க.''
''ஆச்சரியமாயிருக்கே. போன வாரம், நீங்க இந்த காப்பகத்தை பார்க்க வந்தப்ப கூட இதைப்பத்தி ஏதும் சொல்லலையே?''
''அப்புறமா சொல்லிக்கலாம்ன்னு நினைச்சேன்.''
''சரி, நீங்க இந்த காப்பகத்தில் சேரப் போற விஷயம் உங்க மனைவிக்குத் தெரியுமா?''
''தெரியாது.''
''அப்படீன்னா அவங்களுக்கு இந்த விஷயம் ரொம்பவும் அதிர்ச்சியாய் இருக்குமே?''
''கண்டிப்பா.''
''அதனால, உங்களுக்குள்ள பிரச்னை வராதா?''
''வரட்டுமே, பிரச்னை வந்தாத்தான் ஒரு விஷயத்தில் தெளிவான முடிவு கிடைக்கும்.''
''நீங்க இப்படி பேசறது எனக்கு ஆச்சரியமாயிருக்கு.''
''நான் இன்னொரு விஷயத்தை சொன்னா, நீங்க இன்னமும் ஆச்சரியப்படுவீங்க.''
''என்ன?''
''அம்மா, அப்பாவை இந்த காப்பகத்துல சேர்க்க வர்றதுக்கு முந்தி நான், வக்கீலிடம் போயிட்டு தான் வந்தேன்…''
''எதுக்கு?''
''என் மனைவி லலிதாவுக்கு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பத்தான். அவ இப்ப வெளியூர்ல இருக்கிற அம்மா வீட்ல இருக்கா. ரெண்டு நாள் கழிச்சு வரும்போது, அவளை வீட்ல வரவேற்கப் போறது அந்த, விவாகரத்து நோட்டீஸ் தான்.''
காப்பக மேலாளர் பெரிதும் அதிர்ந்து போனவராய் என்னையே சில விநாடிகள் இமைக்காமல் பார்த்தார். பிறகு சிரமமாய் எச்சில் விழுங்கி, பேச ஆரம்பித்தார்...
''நீங்க ஒரு தப்பான முடிவு எடுத்திருக்கீங்க. வயசான காலத்துல அம்மா, அப்பாவை காப்பாத்த வேண்டியது, மகனோட அவசியமான கடமைகளில் ஒண்ணு தான். அதுக்காக மனைவியை விவாகரத்து பண்றதுக்காக, வக்கீல் நோட்டீஸ் அனுப்புறது சரியில்லை. உங்க மனைவிகிட்ட சுமுகமாப் பேசி, இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு எடுத்திருக்கலாம்.''
நான் ஒரு புன்சிரிப்போடு அவரையே பார்த்தேன்.
''என்ன சிரிக்கறீங்க?''
''சிரிக்காம என்ன பண்றது சார்... முதல் முதல்ல எனக்கு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினது, என் மனைவி தான்.''
''என்னது, உங்க மனைவியா?''
''ஆமா.''
''என்ன காரணம்?''
''ரெண்டு மாசத்துக்கு முன்பு, அண்ணன் என் வீட்டுக்கு வந்து அவர் டிரான்ஸ்பர்ல ஊட்டிக்குப் போற விஷயத்தை சொல்லிட்டு, 'அம்மா - அப்பா, என் கூட ஊட்டிக்கு வந்தா, அவங்க உடல்நிலை பாதிக்கும். அதனால, அவங்க அடுத்த ரெண்டு மூணு வருஷத்துக்கு உன் வீட்ல இருக்கட்டும்'ன்னு சொன்னார்.
''என் அண்ணன் அப்படி சொல்லிட்டு போன அடுத்த நிமிஷத்திலிருந்து, எனக்கும், என் மனைவிக்கும் இடையே ஒரு பெரிய வாக்குவாதமே நடந்தது. 'உங்க அம்மா - அப்பா இந்த வீட்டுக்கு வரக் கூடாது. அவங்க ரெண்டு பேரையும் ஏதாவது ஒரு காப்பகத்துல சேர்த்துடலாம்'ன்னு, அவ சொன்னதை நான் ஏத்துக்கலை.
''நாலைஞ்சு நாள், அவ என்கிட்ட பேசலை. அதுக்கப்புறம் ஒருநாள், 'என் அம்மா வீட்டுக்குப் போறேன்'னு சுவத்தைப் பார்த்து சொல்லிட்டு கிளம்பிட்டா. அவளோட கோபம் எப்படியும் கொஞ்ச நாள்ல சரியாயிடும்ன்னு நினைச்சு பொறுமையாய் காத்திட்டிருந்தேன். ஆனா, அவளோட கோபம் குறையற மாதிரி தெரியலை.
''அடுத்த வாரத்திலேயே, அவ எனக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிட்டா. அந்த நோட்டீஸ்ல, 'என் அம்மா, அப்பாவை ஏதாவது முதியோர் காப்பகத்துல கொண்டு போய் சேர்க்கலைன்னா நாம ரெண்டு பேரும், சட்டரீதியா பிரிய வேண்டியிருக்கும்'ன்னு எனக்கு எச்சரிக்கை பண்ணியிருந்தா.
''நான் அதை பொருட்படுத்தாம இருந்தேன். ஆனா, என் அம்மா, அப்பாவுக்கு எப்படியோ இந்த விஷயம் தெரிஞ்சு, காப்பகத்துல சேர்த்துட சொன்னாங்க. அவங்க அப்படி சொன்னதுல எனக்கு உடன்பாடில்லை.
''நான் அம்மா - அப்பா கூடவே, காப்பகத்துல தங்கி, அவங்களுக்கு துணையாய் இருக்க முடிவு பண்ணி, என் மனைவிகிட்டே அனுசரணையா இருக்கிற மாதிரி தினமும் மொபைல்போன்ல பேசி நடிச்சுகிட்டிருந்தேன். என்னை தன்னோட வழிக்கு கொண்டு வர்றதுக்காக, அவ எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாம்; நான் அவளுக்கு அனுப்பக் கூடாதா என்ன?''
''வக்கீல் நோட்டீசைப் பார்த்துட்டு உங்க மனைவி வழிக்கு வருவாங்கன்னு நினைக்கறீங்களா?''
''அவ கண்டிப்பா வழிக்கு வரமாட்டா. பழையபடி அம்மா வீட்டுக்கு போயிடுவா. கல்யாணமான இந்த, 25 வருஷத்துல, 20 தடவையாவது என் கூட தேவையில்லாம சண்டை போட்டுட்டு, அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. என் அண்ணணும், அண்ணியும் போய் சமாதானம் பண்ணினாத்தான் வீட்டுக்கு வருவா.''
''உங்களுக்கு குழந்தைங்க?''
''எங்களுக்கு கல்யாணமாகி, 25 வருஷமாச்சு. ஆனா, குழந்தைகள் இல்லை. இருந்திருந்தா ஒருவேளை அவளுக்கு அன்பு, பாசம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சு இருக்கலாம்.
''எனக்கு இப்ப, 53 வயசு, அவளுக்கு, 50 வயசு. வாழ்க்கையோட பாதி துாரத்தை எப்படியோ கடந்துட்டோம். அன்பு ஒண்ணு தான் இந்த உலகத்துல நிலையானது, நிம்மதியானதுன்னு என் மனைவிக்குப் புரியலை.
''அப்படிப்பட்ட ஒரு புரிதல் இல்லாத மனைவியோடு வாழறதைக் காட்டிலும், மிச்சம் இருக்கிற மீதி வருஷங்களையாவது, என்னைப் பெத்த தெய்வங்களோடு கழிக்கிறது தான் சரியாய் இருக்கும்ங்கிற முடிவுக்கு வந்தேன்.''
''உங்களோட இந்த அதிரடியான முடிவை, உங்க அம்மா - அப்பா ஏத்துக்குவாங்கன்னு நினைக்கறீங்களா?''
''அப்பா, அவ்வளவு சுலபத்துல ஏத்துக்க மாட்டார், சார். அவரை, 'கன்வீன்ஸ்' பண்ண வேண்டியிருக்கும். ஆனா, அம்மா என் முடிவை ஏத்துக்குவாங்க.''
''அம்மா ஏத்துக்குவாங்கன்னு எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?''
''தன்னோட பிள்ளைக்கு எவ்வளவு வயசானாலும் சரி, அந்தப் பிள்ளையோட மனசுக்குள்ளே எது மாதிரியான வேதனை இருக்கும்ன்னு, ஒரு தாய்க்குத்தான் தெரியும். அம்மா, அப்பாவை இந்த காப்பகத்துல தவிக்க விட்டுட்டு, என்னால இதயமே இல்லாத மனைவி என்ற உறவுக்கு அர்த்தமே தெரியாத, ஒரு இயந்திர மனுஷியோட எப்படி சார் சந்தோஷமா வாழ முடியும்?
''ஒரு கணவன், மனைவியை விட்டு பிரியக் கூடாது தான். ஆனா, பிரிக்கிறது தான் வேலைன்னாலும் வேலிக்கும், சுவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே, சார். இனிமே நான் இங்க தான் இருக்கப் போறேன் எனக்கான விண்ணப்பத்தை பூர்த்தி பண்ணுங்க, ப்ளீஸ் சார்!''
என் குரல் உடைந்து, கண்களில் நீர் சிதறிக் கொண்டிருக்கும் போதே, வேறு ஒரு விண்ணப்ப படிவத்தை எடுத்து வைத்து, ''உங்க பேரைச் சொல்லுங்க,'' என, பூர்த்தி செய்ய ஆரம்பித்தார், காப்பக மேலாளர், பரசுராம்.
ராஜேஷ்குமார்
