PUBLISHED ON : ஏப் 09, 2023

கிராமத்திற்கு வெளியே, சிறு பலசரக்குக் கடை இருந்தது.
கடைக்காரர் மிகவும் நல்லவர், பக்திமான். இரவு நேரங்களில் சத்தமாக இறைவன் மீது பாடல்கள் பாடுவார். கிராம மக்கள் அனைவரும் கூடி, அவருடன் சேர்ந்து பாடுவர். அந்தப் பக்திமான் கடையில் தான் அனைவரும் பொருட்கள் வாங்குவர்.
கடைக்காரர் தினமும், மதிய வேளையில் சாப்பாட்டிற்காக வீடு செல்வார். அப்போது அவர் கடையை மூட மாட்டார். அந்த நேரத்தில் கடைக்கு யார் வருகின்றனரோ அவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு செல்வார். சாப்பிட்டு திரும்பி வந்து, கடை பொறுப்பை ஏற்பார்.
ஒருநாள், பக்தரின் கடைக்கு வந்தான், திருடர் கூட்டத் தலைவன். சாப்பாட்டு நேரமானதால், அவனிடம் கடையை ஒப்படைத்து, சாப்பிடப் போய் விட்டார், பக்தர். கடைக்கு வந்தவர்கள் கேட்ட பொருட்களைக் கொடுத்து, காசை வாங்கிப் பணப்பெட்டியில் போட்டான், திருடர் தலைவன்.
அந்த நேரம், திருடர் கூட்டத்தைச் சேர்ந்த வேறொரு திருடன், பொருள் வாங்க வந்தான். அங்கு, தலைவன் இருப்பதைப் பார்த்து, 'தலைவா, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் திரும்ப கிடைக்காது. கடையில் உள்ளதையெல்லாம் துாக்கிக் கொண்டு ஓடி விடலாம் வா...' என்றான்.
அதைக்கேட்டு, 'நம்பிக்கை துரோகம் செய்யச் சொல்கிறாயா? நாம் திருடர்களாக இருக்கலாம். ஆனால், நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது. முன்பின் தெரியாத என்னிடம் கடையை ஒப்படைத்துப் போயிருக்கும் அவரது நம்பிக்கைக்கு, துரோகம் செய்ய மாட்டேன்...' என்றான், திருடர் தலைவன்.
வந்த திருடன் வாய்மூடிப் போனான்.
சற்று நேரத்தில், கடைக்காரர் திரும்பி வந்தார். அவரிடம், 'ஐயா, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்...' என்றான், திருடர் தலைவன்.
திகைப்புடன், 'ஏனப்பா இப்படிப் பேசுகிறாய்... உன்னை நம்பித்தானே கடையை ஒப்படைத்தேன். அப்படி இருக்கும்போது, நான் எதற்காக சோதனை செய்ய வேண்டும்?' என்று கேட்டார், கடைக்காரர்.
அதிர்ச்சி அடைந்த திருடர் தலைவன் திருந்தி, கடைக்காரர் கால்களில் விழுந்தான்.
'ஐயா, நான் திருடர் கூட்டத் தலைவன். உங்கள் நல்ல குணம் என்னைத் திருத்தி விட்டது. இனிமேல் சத்தியமாகத் திருட மாட்டேன்...' என்றான்; அவனது கூட்டாளிகளும் திருந்தினர்.
தன் நற்குணங்களால் திருடர் கூட்டத்தையே திருத்திய அந்தப் பக்திமான்-, துக்காராம்! நல்லவர்களின் சேர்க்கையால் விளையும் பயனைச் சொல்லும் நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
