தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சில நினைவுகள் சில உறவுகள்!

சில நினைவுகள் சில உறவுகள்!

சில நினைவுகள் சில உறவுகள்!


PUBLISHED ON : ஆக 11, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்போது தான் பெருக்கித் துடைத்தது போன்று இருந்த சிங்கப்பூர் சாலைகளையும், நேர்த்தியாக இருக்கும் பஸ், ரயில் மற்றும் கடைகளைப் பார்க்கையில், ஆச்சரியமாக இருந்தது எனக்கு. இந்தியாவில் குறிப்பாக, சென்னையில், தலை கிறுகிறுக்க வைக்கும் சாலைப் போக்குவரத்தும், ஒழுங்கற்ற, உடைந்து பழுதுபட்ட சாலைகளுமே, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக பழகிப் போன எனக்கு, இந்த சிங்கப்பூர் பயணம், ஒரு வித்தியாசமான அனுபவமே!

என்னிடம் படித்த மாணவன் ஸ்ரீராம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிங்கப்பூரில் இருந்த, ஒரு பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில், வேலைக்கு சேர்ந்தான். அவன் தான், ஒரு நாள் என்னை மொபைலில் தொடர்பு கொண்டு, 'சார், நான் தீபாவளிக்கு சென்னை வருகிறேன். திரும்பும் போது, நீங்களும் என்னுடன் சிங்கப்பூர் வருகிறீர்களா? நீங்கள் சரி என்று சொன்னால், நான் டிக்கெட் வாங்கி, எல்லா ஏற்பாடுகளையும் செய்து விடுகிறேன்...' என்றான் .

ஐந்து ஆண்டுகளுக்கு முன், என் மனைவி சாரதா இறந்து விட்டாள். எங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவனும், இப்போது இல்லை. தனியாக இருந்து என்ன செய்யப் போகிறேன்... என்னுடைய பொழுதுபோக்கு பெரும்பாலும் புத்தகம் படிப்பது தான். ஸ்ரீராம், நல்ல பையன் என்பதுடன் நன்றாக பேசும் திறமை உள்ளவன். அவனுடன் பேசிக் கொண்டிருந்தால், நேரம் போவது தெரியாது. அதனால், உடனே, 'சரி' என்றேன்.

சிங்கப்பூரின், சாங்கி விமான நிலையத்திலிருந்து, ஸ்ரீராம் தங்கியிருந்த ஜூராங் ஈஸ்ட் என்ற பகுதிக்கு, டாக்சியில் சென்றோம். அடுக்கடுக்காக இருந்த பல மாடிக் குடியிருப்பு ஒன்றில், அவனுடைய ப்ளாட் இருந்தது. ஒரு பாச்சிலரின் அறைக்கு உள்ள அனைத்து தகுதிகளுடன் அவன் அறை இருந்தது. அவனுடன் மற்றோர் இளைஞனும் தங்கியிருந்தான்.

''நான் மாலை, 5:30 மணிக்கு வந்துவிடுவேன் சார். அதற்கு அப்புறம் வெளியில் போகலாம். ராத்திரி எத்தனை நேரமானாலும் கவலைப்பட வேண்டாம். பயம் ஏதும் கிடையாது,'' என்று, பரபரப்பாக ஆபீஸ் கிளம்பி விட்டான் ஸ்ரீராம்.

எனக்கு தினம் வெளியே சென்று பார்க்க, ஏதாவது ஒரு புரோகிராம் போட்டுக் கொடுத்துவிட்டு போவான். நானும் சந்தோஷமாக சுற்றி வந்து கொணடிருந்தேன்.

அந்த வார சனிக்கிழமையன்று, சிங்கப்பூரின் முழு அழகையும், 'ஜயண்ட் வீலில்' அமர்ந்து பார்ப்பதற்காக, 'சிங்கப்பூர் ப்ளையர்' என்ற, இடத்திற்கு ஸ்ரீராம் வரச் சொல்லியிருந்தான். நான் சென்ற போது, ஸ்ரீராம் எனக்கு முன்னாலே வந்து, காத்துக் கொண்டிருந்தான். நான் டாக்சியில் போய் இறங்கியதும், காபி குடிக்கலாம் என்று, அருகில் இருந்த, 'காப்டிரியா'வுக்குள் சென்றோம். தவிர எங்களுக்கு வீலில் ஏற நேரம் இருந்தது.

அந்த இளம் இந்திய தம்பதி, அப்போது என் எதிரே வந்தனர். அவர்கள் இருவருமே, முப்பது வயதிற்குள் தான் இருந்தனர். அவன் கையில், ஒரு அழகான இரண்டு வயது குழந்தை இருந்தது.

நான் அவளைப் பார்த்த நொடியில், அவளும் என்னைப் பார்த்தாள். எங்கள் இருவர் முகத்திலுமே, ஒரு எதிர்பாராத ஆச்சரியமும், திகைப்பும் தோன்றி மறைந்தன.

நான் சற்று சங்கடத்துடன் பேசுவதா, வேண்டாமா என்று நினைக்கையிலே, அவளே என் அருகில் வந்து, ''ஹலோ அங்கிள். எப்படி இருக்கீங்க?'' என்றாள்.

நான், ஒரு விநாடி தடுமாறி, பின், சமாளித்துக் கொண்டு, ''நல்லா இருக்கேன் யமுனா... நீ எப்படிம்மா இருக்கே?'' என்றேன்.

என் கேள்வி அநாவசியம் தான்.

அவள் முகத்திலும், அவளுடன் இருந்த இளைஞன் முகத்திலும், மகிழ்ச்சி வெளிப்படையாக தெரிந்தது.

''நான் நல்லா இருக்கேன் அங்கிள். விஜய், இது எங்கள் ரிலேடிவ் சுவாமி அங்கிள். கல்லூரியில் புரொபசராக இருக்கிறார். இவர் என் கணவர். இது, என் மகள் ப்ரீதி,'' என்று, அறிமுகம் செய்து வைத்தாள்.

விஜய் என்ற அந்த இளைஞன், என் கைகளைப் பற்றி குலுக்கினான். நான் ஸ்ரீராமை, அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

விஜய், ஒரு ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அவர்கள் சிங்கப்பூர் வந்து மூன்று ஆண்டுகள் ஆவதாகவும் கூறினர்.

''ஆண்ட்டி எப்படி இருக்காங்க... அவுங்களை, இந்தியாவில் விட்டுட்டு நீங்க மட்டும் ஜாலியா, உங்க ஸ்டூடண்ட் கூட வெளிநாடு வந்திட்டீங்களா?'' என்றாள் சிரித்தபடி யமுனா.

என் முகம், ஒரு நிமிஷம் இருண்டது. சட்டென்று சமாளித்துக் கொண்டு, ''ஆமா...அதோட அவளுக்கு கோவில், குளம், பூஜை இவற்றையெல்லாம் விட்டுட்டு வர மனசு வராதே,''என்று, லேசாகத் சிரித்தபடி சொன்னேன்.

இப்போது ஸ்ரீராம் என்னை சற்று வியப்புடன் பார்த்தான். ஏனென்றால், அவனுக்கு, என் மனைவி இறந்த விஷயம் தெரியும்.

''யமுனா, போகலாமா?'' என்று விஜய் கேட்கவும், யமுனா, ''ஒரு நிமிஷம் அங்கிள், என்னோட மொபைல் நம்பர் தருகிறேன். நாங்கள் ஜூராங் வெஸ்ட்டில் தான் இருக்கிறோம். கட்டாயம் போன் செய்துட்டு, வீட்டுக்கு வாங்க,'' என்று உபசரித்தாள்.

அவள் கணவனும், ''ஆமா சார், நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் வரணும்,'' என்றான்.

அவள் எண்ணை சொல்லச் சொல்ல, நான் என் மொபைலில், அதைப் பதிவு செய்து கொண்டேன்.

''பை,'' என்று, விடை பெற்றுச் சென்றனர்.

அதன்பின், நான் ஸ்ரீராமுடன் பேசிய பேச்சில், அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. அவனும் எதையோ புரிந்து கொண்டவன் போல, அமைதியாக இருந்தான்.

ப்ளையரில் ஏறி, மெலிதாகச் சுழன்று, சிங்கப்பூரின் முழு அழகும், வானத்தின் வண்ணங்களும், பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தாலும், மனம் முழுவதும் அதில் ஒன்றவில்லை. ஸ்ரீராம் எனக்கு காட்டிய காட்சிகள், பேசிய வார்த்தைகள் எல்லாமே, ஏதோ தூரத்திலிருந்து யாரோ பேசுவது போலிருந்தது.

கீழே இறங்கி வந்ததும், மீண்டும் காபி ஷாப்புக்குள் சென்று, காபி ஆர்டர் செய்த என்னிடம், ''சார், கேட்கிறேன்னு தப்பாக நினைச்சுக்காதீங்க. அந்த தம்பதியரை பார்த்ததிலிருந்து, உங்க மூடே மாறி விட்டது. என்ன காரணம்?'' என்றான் ஸ்ரீராம்.

''யெஸ்,'' என்று சொன்னதோடு, ''சாரி...'' என்றேன்.

''இதுக்கு எதுக்கு சார் சாரி... அவங்க யாரு?''

'' ரொம்ப நல்ல பெண் யமுனா.''

''உறவா?''

'' உறவு தான். ஒரு காலத்தில்.''

''புரியலை!''

''அவங்க ஒரு விதவை. அவள் மறுமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தையுடன் இருப்பதை திடீரென்று பார்த்த போது, ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.''

ஸ்ரீராம், ''ஐ...ஸீ!'' என்றவன் தொடர்ந்து, ''சின்னவளாகத் தானே இருக்கிறாள். மறுமணம் செய்து கொண்டது தப்புன்னு நினைக்கறீங்களா?'' என்றான்.

''சே...சே அவளுடைய முதல் கல்யாணம் தான் சரியில்லை. இதுவாவது நன்றாக இருக்கட்டுமே,''என்றேன், நான் அவசரமாக.

''ஆனா... நீங்க ஆச்சரியமோ, சந்தோஷமோ, படற மாதிரியில்ல. கொஞ்சம்,'அப்செட்' ஆன மாதிரியிருக்கு,'' என்றான் ஸ்ரீராம்.

நான், அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

''உன் கணிப்பு சரி தான். அவள் முதல் கணவன், ஒரு உதவாக்கரை. அவன் போனதே நல்லது.''

''ஏன் சார்?'' என்றான் திகைப்புடன் ஸ்ரீராம்.

''ஆமா... அவன் ஒரு குடிகாரன், பொறுக்கி. குடித்துவிட்டு வண்டி ஓட்டி, விபத்தில் இறந்து போனான்.''

''அடப்பாவமே...'' என்றான் ஸ்ரீராம்.

அதற்குள் நான், சட்டென்று என் மொபைலை எடுத்து, பதிவு செய்த யமுனாவின் எண்ணை அழித்தேன்.

''ஏன் சார்... அந்த பெண் உங்களை அவ்வளவு பிரியமாக கூப்பிட்டது. அந்த நம்பரை ஏன் அழிக்கிறீங்க... உங்களுக்கு போக இஷ்டமில்லையா?''

''ஆமாம். நான், அவளைத் திரும்பவும் சந்திக்க விரும்பவில்லை. நான், அவளுடைய பழைய வாழ்க்கையின் அடையாளம். அது, அவளுக்கு தேவையில்லை.''

''உங்களை புரிஞ்சுக்கவே முடியலை சார். அந்தப் பெண் தானே வலிய வந்து உங்க கூடப் பேசினா. அவளே, உங்களை வீட்டுக்கு அழைக்கும் போது, நீங்க போனா என்ன... பை த வே, நீங்க, ஏன் உங்க மனைவி இறந்ததை பத்தி அவங்க கிட்ட சொல்லலை?'' என்றான் ஸ்ரீராம் திடீரென்று நினைத்துக் கொண்டவனாக.

''காரணமாகத் தான். மிகவும் நல்ல பெண் யமுனா. அவள் மனசுக்கு சங்கடம் தருவது போன்ற செய்தியை சொல்வானேன். அதனால் தான் சொல்லவில்லை.''

ஸ்ரீராம் பதில் சொல்லவில்லை. ஒரு வினாடி வெளியே பார்த்துக் கொண்டிருந்து விட்டு நானே பேசினேன்...

''சில நினைவுகள், சில உறவுகள் ஒரு கட்டத்திற்கு பின், நமக்குத் தேவையில்லை. அவைகளை அழித்து விடுவதும், மறந்து விடுவதும் தான் வாழ்க்கைக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் செய்யும் நியாயம்.''

''என்னமோ பேசறீங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. ஏன் சில நினைவுகள், உறவுகளை மறக்கணும்? அவைகள் தானே வாழ்க்கையை சுவாரசியமாக்கு கின்றன.''

''எல்லா நினைவுகளும், உறவுகளும் அல்ல. சிலவற்றை மறந்தால், அழித்தால் தான், எதிர்காலம் நன்றாக இருக்கும். அது தான் சரி. யமுனாவுக்கு இனிமேல், என் உறவோ, நினைவோ தேவையில்லை,'' என்றேன் நான் அழுத்தமாக.

''ஏன் அப்படி.''

''நான் தான் சொன்னேனே... அவள் முன்னாள் கணவன் உதவாக்கரை என்று. அவனுடன் தொடர்புள்ள எந்த விஷயமும், அவளுக்கு அனாவசியம்.''

''அவள் முன்னாள் உதவாக்கரை கணவன் யாரு?''

அவனை, ஒரு வினாடி உற்றுப் பார்த்து பின், மிகவும் நிதானமாக தெளிவான குரலில் பதில் சொன்னேன்.

''என் மகன்.''

***

தேவவிரதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us