sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 02, 2015

Google News

PUBLISHED ON : ஆக 02, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா —

என் வயது, 35; என் கணவர் வயது, 40. என், 19வது வயதில், அரசு வேலையில் உள்ள ஒருவருக்கு, திருமணம் பேசி, நிச்சயதார்த்தத்திற்கு, ஐந்து நாட்கள் இருக்கும் போது, சொந்த வீடு இல்லாததால், திருமணம் தடைபட்டது.

என் பெரிய அண்ணன், தன் பள்ளி நண்பனிடம், இதைப் பற்றிக் கூறவே, அவர் என்னை திருமணம் செய்ய சம்மதித்தார். அவர் டீ கடை வைத்திருந்தார்; அவரை, எனக்கு பிடிக்கவில்லை. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் அவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று மாலை, அவர்கள் அணிவித்த வளையல்களை உடைத்து, கையை கிழித்துக் கொண்டேன். இதை அறிந்த அவர், தன் தாயை அனுப்பி, திருமணத்தை நிறுத்த சொன்னார். என் குடும்பத்தினர், அவருடைய தாயாரை சமாதானப்படுத்தி திருமணத்தை நடத்தி முடித்தனர்.

திருமணத்திற்கு பின், பல நாட்கள் தாம்பத்யம் நடக்கவில்லை. ஒருநாள் கட்டாய உறவு வைத்தார்; கர்ப்பமானேன். காலை முதல் மாலை வரை, ஓட்டல் வேலைகளையும், வீட்டு வேலைகளையும் செய்வார். அவருக்கு சிகரெட், மது, பாக்கு போன்ற பழக்கங்கள் இன்று வரை இல்லை.

கோவிலுக்கும் செல்ல மாட்டார். தவறு செய்வதும், பொய் சொல்வதும் பிடிக்காது. செய்தால் உடனே தண்டனை தருவார். நான், ஆறு மாத கர்ப்பமாக இருந்தபோது, என் நகையை விற்று, எங்களின் வீட்டைப் புதுப்பித்து தந்தார். பெண் குழந்தை பிறந்தது. பின், ஆறு மாத குழந்தைக்கு ஆபரேஷன் செய்ததில் லட்சம் ரூபாய் கடனாளி ஆனார். இதனால், டீ கடையை மூடி விட்டு, தற்போது, கட்டட வேலைக்கு செல்கிறார். வீட்டில் அவருக்கிருந்த பாகத்தையும், தோட்டத்தையும் விற்று, வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதற்கிடையே மீண்டும் கர்ப்பமானேன்.

கடனாளியான அவரை, 'உனக்கு எதற்கு இன்னொரு குழந்தை; இந்த குழந்தைய வளக்கவே உனக்கு துப்பில்ல...' என்றேன். அதனால், மூன்று மாத கருவை கலைத்து, கருத்தடை செய்து விட்டார். அது முதல் எங்களுக்குள் உறவு இல்லை. நான் ஏதாவது தவறு செய்தால், அடிப்பார். அதனால், கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விடுவேன். எத்தனை நாட்கள் ஆனாலும் என்னை வந்து அழைக்க மாட்டார். பின், நானே வந்து விடுவேன்.

ஒருநாள், தாம்பத்யத்திற்கு அழைக்கவே முடியாதென்று சொன்னேன். உடனே, என்னை என் அம்மா வீட்டிற்கு அனுப்பி விட்டு, அவரது தோழி வீட்டிற்கு சென்று அவளுடன் உறவு வைத்து கொண்டார்.

நான், அவ்வப்போது அவருக்கு தெரியாமல் அவருடைய பணத்தை எடுப்பேன். ஒருநாள், அப்படி பணம் எடுக்கும் போது, கையும், களவுமாக பிடித்து விட்டார். அப்போது தான் தெரிந்தது, நான் இத்தனை நாட்கள் திருடிய பணத்தை எல்லாம் எழுதி வைத்துள்ளார் என்பது! அதற்கு தண்டனையாக என்னை மண்டியிட வைத்து, உடல் முழுவதும் சிறுநீரை ஊற்றினார்.

மேலும், என் பெற்றோர், உறவினர்களை எல்லாம் வரவழைத்து, நான் செய்த தவறுகளையும், தாம்பத்யத்திற்கு மறுப்பதையும் அவர்களிடம் கூறி விட்டார். அவர்களும் என்னை திட்டவே, அன்று முதல், அவர், எனக்கு எதிரியாகி விட்டார்.

இன்று வரை, நான் என் அறையிலும், அவர் அவருடைய அறையிலும் தான் தூங்குகிறோம். இந்த, 15 ஆண்டு குடும்ப வாழ்க்கையில், நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து எங்கும் சென்றது இல்லை; பேருந்தில் கூட ஒன்றாக அமர்ந்தது இல்லை. எனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து வேலை வாங்கி கொடுத்தார். இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு செல்கிறேன். என் சம்பளத்தில், ஒரு ரூபாய் கூட வாங்குவது இல்லை.

என்னிடம் கடன் வாங்குவார்; திருப்பித் தந்துவிடுவார். வீட்டுச் செலவுகள் எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொள்வார்.

ஒரு மாதத்திற்கு முன், என்னிடம் அன்பாக பேசி, 'நீ எப்போ சாகப் போறே... நீ இறந்தால் தான் நான் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ முடியும். இல்லன்னா, எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிய வீட்டையும், மாதம், 5,000 ரூபாயும் தருகிறேன். என்னை விவாகரத்து செய்து விடு. நான் ஊரை விட்டு போகிறேன். உன் கணவன்னு சொல்லி வாழவோ, சாகவோ விருப்பமில்ல...' என்று கூறினார்.

இதனால், அவரிடம் சொல்லாமல், குழந்தையை அழைத்துக் கொண்டு, என் அம்மா வீட்டிற்கு சென்று விட்டேன்.

என் துணிமணிகளை எடுக்க அம்மாவையும், குழந்தையையும் அனுப்ப, மறுநாள் என் சம்பந்தப்பட்ட அத்தனை பொருட்களையும் மூட்டையாக கட்டி, எங்கள் வீட்டில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.

இனி என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு தேவையான நல்வழியை காட்டுங்கள்.

இப்படிக்கு, உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு —

அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளையை விட, டீக்கடை நடத்தும் மாப்பிள்ளை தகுதி குறைவானவர் என்ற உன் எண்ணமே, உன் அத்தனை பிரச்னைகளுக்கும் பிள்ளையார் சுழி. 'கடனாளியான உனக்கு இரண்டாவது குழந்தை எதற்கு?' என, நீ கேட்ட ஒரே காரணத்துக்காக, உன் வயிற்றில் வளர்ந்த கருவை கருச்சிதைவு செய்தது அதிகப்படியான செயல். திருடிய மனைவிக்கு வாய் வார்த்தையாய் அறிவுரை கூறாமல், மண்டியிடச் செய்து சிறுநீர் அபிஷேகம் செய்தது, காட்டுமிராண்டி தனம்.

வீட்டைப் புதுப்பித்து கொடுத்தோம். குழந்தைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கடனாளி ஆனோம். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து மனைவிக்கு வேலை வாங்கிக் கொடுத்தோம். இத்தனை செய்தும், மனைவிக்கு நம் மீது அன்பு இல்லையே என, விசனப்படுகிறான் உன் கணவன்.

அவனது விசனத்தில் நியாயம் இருக்கிறது. நீ தான் உன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

முதலில், நீ, உன் திருட்டுத்தனத்தையும், கணவனை இரண்டாம் தர குடிமகனாய் பாவிப்பதையும் நிறுத்து. செய்கைகள், பேச்சுகள், உடல் மொழி மூலம் அவனின், 'ஈகோ'வை பஞ்சர் செய்யாதே. உனக்கு பிடிக்கிறதோ, இல்லையோ அவனின் விருப்பத்துக்கு உடன்படு.

நீ ஒரு அடி அடித்தால், உன் கணவன் பத்தடி அடிக்கிறான். ஆகவே, முதலில், நீ அவனை மனரீதியாக அடிப்பதை நிறுத்து!

நீயும், உன் கணவனும் வெளியே எங்காவது சென்று, அமைதியாக மனம்விட்டு பேசி, கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளுங்கள். இருவரும் ஒரே நேரத்தில் சமாதானக் கொடி உயர்த்துங்கள்.

இருவரும் அவரவர் சம்பாதிக்கும் பணத்தை பட்ஜெட் போட்டு கூட்டாக செலவழியுங்கள். உன் கணவனுக்கு கடன் இருந்தால் அதை நீ அடை; வாய்க்கு ருசியாக சமைத்து போடு.

தொலைந்து போன, 15 ஆண்டு சந்தோஷத்தை இருவரும் மீட்டெடுங்கள். உறவினர் முன் கண்ணியமான தம்பதியாக நடந்து, அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள்.

அரசு வேலை புரிபவனை விட, சுயதொழில் புரிபவன், எவ்வகையிலும் தாழ்ந்தவன் அல்ல. கணவனை, பணத்தை வைத்து மதிப்பிடாமல், அன்பை வைத்து மதிப்பிடு. நீங்கள் இருவரும் திருந்தி, புது வாழ்வு வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்.

என்னென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us