PUBLISHED ON : ஆக 26, 2018

காலையில் பூத்த மஞ்சள் அரளி போல், பூத்து நின்றாள், வசந்தி; அழைப்பு மணி அதிர்வை அவள் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்தவளிடம், ''ச்சீ முண்டம்... இவ்வளவு நேரமா கதவ தெறக்க?''
''காதுல சரியா விழலீங்க...''
''செவுடு செவுடு... உனக்கு எப்பதான் விழுந்தது...''
அலுவலக சீருடையை களைந்து, சோபாவில் வீசி, பாத்ரூமிற்குள் நுழைந்தான், அவள் கணவன். மணக்க மணக்க, நுரை பொங்க, பில்டர் காபியை கொண்டு வந்து அவன் முன் வைத்தாள், வசந்தி.
சோபாவில் சாய்ந்து, நுரையை ஊதி டம்ளர் ஓரம் தள்ளி, ஒரு, 'சிப்' உறிஞ்சியவன், குபீரென்று காரித்துப்பி,''எரும... காபியாடி இது... குடிச்சு பாரு...'' என்றான்.
''என்ன ஆச்சுங்க,'' என்று பதறியவள், காபி டம்ளரை வாங்கி அண்ணாந்து காபியை நாவில், விட்டவள் முகம், ஏழு கோணலானது.
''மன்னிச்சுக்கங்க... சீனிக்கு பதிலா, உப்ப போட்டுட்டேன் போலிருக்கு... என் தலையில நல்லா கொட்டுங்க; அப்பதான் புத்தி வரும்,'' என்று சொல்லி குனிந்து, கொட்டு வாங்க தலையை காட்டினாள்.
''அறிவு கெட்டவளே... போடி அந்தப் பக்கம்... உன்னை கொட்டிக் கொட்டியே, என் கை முட்டி வீங்கி போச்சு,'' கோபத்தில் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
''அப்படின்னா ஸ்கேல எடுத்துட்டு வரட்டுமா...'' என்று கேட்டு, அதையும் எடுத்து வந்து டேபிளில் வைத்தாள்.
அவன் பல்லை கடித்து, ''உன்னை திருத்தவே முடியாது; என் தகுதிக்கு, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு... என் புத்தியை செருப்பால் அடிக்கணும்,'' என்றான், கோபத்துடன்!
அவசர அவசரமாய் மீண்டும் காபி கலந்து எடுத்து வந்தாள், வசந்தி.
காபியை குடித்து, 'லேப் - டாப்'பில் மூழ்கி விட்டான்.
மேஜையில் இரவு டிபன் வைக்கும் சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தான்.
''சாப்பிடுங்க...'' என்றாள்.
அவன் திட்டிய திட்டில், வார்த்தைகளை குறைத்துக் கொண்டாள், வசந்தி.
''ரோஷம் வந்துடுச்சோ... மூஞ்சியை துாக்கி வெச்சுகிட்டு சொல்ற?''
''ரோஷமா... அது, இருந்தாத்தானே வர்றதுக்கு...''
''இங்க பாருடி... நான் ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷனோட இருக்கேன்; இப்ப, நீ வேற சூடு ஏத்தறியா...'' வெந்து போன வார்த்தைகள் வெளி வந்தன.
''ஐயோ சாமி... நான்தான் தப்பு செஞ்சுட்டேன்; அதுக்கான தண்டனைய உடனே கொடுத்துடுங்க... அப்பதான் என் மனசு ஆறும்,'' அவள் கண்களிலிருந்து, 'பொல பொல'வென்று கண்ணீர் கொட்டி, அவன் மணிக்கட்டில் தெரித்தது.
நிமிர்ந்தான்; அவளின் கலங்கிய முகம், அவன் மனதை பிசைந்தது. இதற்கு முன், இவள் இப்படி கலங்கிப் பார்த்ததில்லை. அதிர்ந்து போன அவன், அவளை அணைத்து, கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து, ''விளையாட்டுக்கு திட்டினேன்... அதுக்கு போய் இப்படியா அழறது...'' என்றவன், அவள் கையை பிடித்து இழுத்து, அருகில் அமர வைத்து, ''நீயும் சாப்பிடு,'' என்றான்.
ஒரு வழியாய் டிபனை முடித்து எழுந்த போது, ''தோ பாரு... என் ஆபீஸ் பையில் மல்லிகைப் பூவும், அல்வாவும் இருக்கு; எடுத்துட்டு வாடி,'' என்றான்.
அதை எடுத்து வந்து, அல்வாவை மேஜையிலும், பூவை தலையிலும் வைத்தாள், வசந்தி. அது ஒருபுறம் சரிந்து இருக்கவே, ''பூவக் கூட தலையில சரியா வெச்சுக்க தெரியலியே...'' என்று செல்லமாக திட்டி, அவளை திருப்பி, இரண்டு பக்கமும் ஒரே நீளமாய் பூச்சரம் தொங்கும்படி சரி செய்து, அழகு பார்த்தான்.
அப்போது, அவன் கையை பிடித்து, கம்மிய குரலில், ''ஏங்க... ஆபீசுல ஏதும் பிரச்னையா?'' என்று கேட்டாள், வசந்தி.
''உனக்கு எப்படி தெரியும்?''
''சொல்லிதான் தெரிஞ்சுக்கணுமா...'' கெஞ்சல் மொழி, கொஞ்சலானது.
''ஆமாண்டி... 'டீம் லீடர்' டார்க்கெட் முடிக்கலன்னு கண்டபடி திட்டி, அடுத்து, வீட்டுக்கு தான்னு சொல்றான். என்ன செய்யிறது... வேற கம்பெனிக்கு போகலாம்ன்னா, சரியான, 'பேக்கேஜ்' கெடைக்கல. அதை நெனைச்சுதான், 'டென்ஷன்' ஏறி போச்சு,'' என்றான், சோகத்துடன்!
''சரி விடுங்க... சரியான வேலை கிடைக்கிற வரைக்கும் இந்த வேலைய விட்டுடாதீங்க. ஒரு கதவு மூடுனா, இன்னொன்னு கண்டிப்பா திறக்கும். அது வரைக்கும் உங்களுக்கான கஷ்டத்துல எனக்கும் சம பங்கு கொடுங்க; அப்பதான் நாம வாழறதில் ஓர் அர்த்தம் இருக்கும்,'' அவன் கையை எடுத்து கழுத்தில், மாலையாக போட்டுக் கொண்டாள்.
அதிர்ந்து போன அவன், ''நான் என்ன நினைக்கிறேனோ, அதையே நீயும் சொல்ற பாரு... அந்த, 'காம்பினேஷன்'தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,'' என்று சொல்லி அவளை மென்மையாக அணைத்தான்.
பால் பாக்கெட் போடும் சத்தம் கேட்டு எழுந்தாள், வசந்தி. பாத்திரத்தில் தண்ணீர் முகர்ந்து, வாசல் தெளித்து, கோலமிட்டு, பால் பாக்கெட்டை எடுத்து அடுப்படிக்குள் நுழைந்தாள்.
சிறிது நேரத்தில் எழுந்த வந்த அவனிடம், அலுவலக அவசரம் தொற்றிக் கொண்டது.
குளித்து, சாப்பிட்டு, முதுகில், 'லஞ்ச் பேக்'கை மாட்டியபடி, ''அடியே... சாயந்தரம், 'அவுட்டிங்' போறோம்... ரெடியா இரு,'' என்றான்.
விழி அகற்றி, புருவம் உயர்த்தியவள், ''எங்கே...'' என்றாள்.
''சஸ்பென்ஸ்...'' என்று சொல்லி சென்று விட்டான்.
மனதுக்குள் மகிழ்ச்சி புகுந்து விட்டால், துன்பம் துார ஓடி விடும். வேலைகள் விரைந்தன; நேரங்கள் கரைந்தன; எண்ணங்கள் அலைந்தன. 'பக்கத்து போர்ஷன் கோகிலாவை ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம்; அவள், பி.இ., படிச்சவள், 'ஷாப்பிங்' பண்ணும்போது, அவள் ஆலோசனை உதவியாய் இருக்கும்...' என்று எண்ணி, கதவை பூட்டி, கோகிலா வீட்டிற்கு சென்றாள், வசந்தி.
''வா வசந்தி... என்ன முகம் ஒரே மலர்ச்சியா இருக்கு...'' என்றவள், கைவேலையை அப்படியே போட்டு விட்டு, அவளை வரவேற்றாள்.
''இல்லயே... எப்பயும் போலத்தான் இருக்கேன்,'' என்றபடி, ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தாள், வசந்தி.
''சரி... உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, எப்படி எடுத்துக்குவீயோ...'' என்றாள், தயக்கத்துடன்!
''என்ன பீடிகை பலமாக இருக்கு; என்ன விஷயம்ன்னு சொல்லு,'' என்றாள், வசந்தி.
''உன் குடும்ப விஷயத்துல தலையிடறேன்னு தப்பா நெனைச்சுக்காதே... எல்லாம் உன் நன்மைக்கு தான் சொல்றேன்.''
''என்ன சொல்லப் போறே?''
''தினமும் உன் புருஷன், உன்னை கோவமா திட்டறது, தலையில கொட்டறதுன்னு ஒரே அராஜகமா இருக்கேடி. எனக்கு எப்படி தெரியும்ன்னு கேட்காதே... அதுக்குதான் ஜன்னல் இருக்கே... கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு. உன் புருஷன் என்ன சொன்னாலும் எதுத்து பேசாம, அப்படியே எதுக்கு அடங்கிப் போறே... பொண்டாட்டின்னா அடிமையா இருக்கணுமா என்ன...
''நேத்து என்னடான்னா கொட்டுங்கன்னு தலைய குனிஞ்சு காட்டறே... இப்ப, என்னையே எடுத்துக்க... என் வீட்டுக்காரரும், 'சாப்ட்வேர்' இன்ஜினியர் தான்; அவரு, ஆரம்பத்துல எப்படி இருந்தாரு, இப்ப எப்படி இருக்காருன்னு பார்த்தியா... சகலமும் ஒடுங்கி, என் பின்னால நிக்க வச்சுட்டேன்ல்ல... இதுதாண்டி, பெண் வசியம்கிறது. அது மாதிரி உன் புருஷனையும் ஆக்கிடலாம்; அதுக்கு, நீ என் பேச்சை கேக்கணுமே...'' என்றபடி, வசந்தியை உற்றுப் பார்த்தாள், கோகிலா.
வசந்தியின் முகம் சிவந்தது, புருவங்கள் சுருங்கின; வாயிலிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிவர துடித்தன; அடக்கி, மெதுவாக, ''கோகிலா... நான் படிக்காத பட்டிக்காடு தான்; ஆனா, புருஷன்கிட்ட எப்படி நடந்துக்கணும்கிற விஷயம், வழி வழியா என் ரத்தத்துல ஊறி போய் கெடக்குது. இதுக்கெல்லாம் படிச்சு, 'டிகிரி' வாங்கணும்கிறதில்ல. என் புருஷன் நினைச்சிருந்தா உன்னை மாதிரி, பி.இ., படிச்சவள கல்யாணம் செய்திருக்கலாம்; ஆனா, அவரு அப்படி செய்யல. என்னை தேடி வந்து, 'உங்களால் முடிஞ்சத போடுங்க'ன்னு சொல்லி, என்னை கட்டிக்கிட்டாரு. இன்னைக்கு வரைக்கும், நாங்க ரொம்ப சந்தோஷமா தான் வாழறோம்.
''அவரு என்னை திட்டறது, கொட்டறதெல்லாம், எனக்கு, இஞ்சி கலந்த சீனி மிட்டாய் மாதிரி... அது, உன்னைப் போல, ஒட்டு கேக்குற ஜன்மங்களுக்கு புரியாது. ஆம்பள, ஆபீசிலிருந்து ஆயிரம் பிரச்னையோடு வீடு திரும்புவாங்க. உன் பாஷையில சொல்லணும்ன்னா, பிரச்னையை, 'அப்லோடு' பண்ணிகிட்டு வருவாங்க. அவங்க, 'டென்ஷன' நாம தான், 'டவுன் லோடு' செய்யணும்.
''சில சமயத்துல, வேணும்ன்னே ஏதாவது தப்பு செய்து, கொட்டு வாங்கியாவது, அவங்கள நார்மல் மூடுக்கு கொண்டு வரணும். அதாவது, நாம சுமைதாங்கியா இருப்பதை விட, சுமை வாங்கியா இருக்கணும்கிறது தான் என் கருத்து. இதுக்கு மேல, நீ, எங்க குடும்ப விஷயத்துல மூக்க நுழைக்காம இருந்தா போதும்,'' என்று சொல்லி எழுந்து தன் வீட்டிற்கு, சென்றாள், வசந்தி.
வசந்தியின் பேச்சை கேட்ட கோகிலாவுக்கு, மனதுக்குள் லேசாக பொறி தட்டியது. 'பட்டிக்காடுன்னு நெனைச்சோம்... ஒரு நல்ல வாழ்க்கையின், 'பார்முலாவை' எவ்வளவு எளிமையா சொல்லி விட்டாள். ஒருகால், நாம்தான் தப்பான பாதையில போயிகிட்டிருக்கோமோ...' அவள் மனதை, கேள்விகள் துளைத்தன.
வீட்டு கதவு திறந்திருக்க, எட்டிப் பார்த்தாள் வசந்தி. உள்ளே அவள் கணவன் அமர்ந்திருப்பதை பார்த்து, 'எப்போது வந்தார்... பைக் சத்தம் கேட்கலயே... நாங்க பேசியத கேட்டிருப்பாரோ... இதுக்கும் சேர்த்து உள்ளே போய் பாட்டு கிடைக்குமோ...' என்று எண்ணியபடி, வேகமாக அவனிடம் வந்தவள், ''இப்பதாங்க போனேன் இனிமே இப்படி செய்ய மாட்டேங்க,'' என்று சொல்லி, கெஞ்சுவது போல் பார்த்தாள்.
''ஏண்டி... இப்ப நான் என்ன கேட்டேன்... ஏன் இப்படி நடுங்குற... 'அவுட்டிங்' போக ரெடியா இருக்கலாமில்ல,'' இந்த முறை அவனின் வார்த்தை அம்புகள், அவ்வளவு கூர்மையாய் இல்லை.
'அப்பாடா... நாம பேசினது, அவரு காதுக்கு எட்டல போலிருக்கு...' என்று நினைத்தபடி, ''இதோ பத்து நிமிஷத்துல ரெடியாயிடுவேன்... நீங்களும் காபிய குடிச்சுட்டு சீக்கிரம் கிளம்புங்க.'' அறைக்குள் நுழைந்தாள்.
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவன், பூட்டிய கதவை தன்னிடமிருந்த மற்றொரு சாவியால் திறந்து வீட்டிற்குள் வந்தவனுக்கு, பக்கத்து வீட்டிலிருந்து, கோகிலாவும், வசந்தியும் பேசுவதை முழுமையாக கேட்டு விட்டான்.
'அடி கள்ளி சிறுக்கி... என்கிட்ட திட்டு வாங்கறதும், கொட்டு வாங்கறதும், உனக்கு இஞ்சி மிட்டாயா... இனிமே பாரு, வெளியில காட்டிக்காம நிறையவே தரேன்; வாங்கி போட்டுக்க...' என்று மனதுக்குள் செல்லமாக சொல்லிக் கொண்டான்.
சிறிது நேரத்தில், கதவை திறந்து, லட்சுமிகரமாய் வந்து நின்றாள், வசந்தி. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன், ''இதுதாண்டி உன்கிட்ட எனக்கு பிடிச்சது; வெளியில அலையுற லெக்கின்சையும், சுடிதாரையும் இந்த முந்தானையால விசிறிபுட்டியே விசிறி... எங்கடி பதுக்கி வெச்சிருந்த இந்த மொத்த அழகையும்,'' என்றான், கண் சிமிட்டியபடி!
''ச்சீ போங்க...'' என்று வெட்கத்துடன் சிரித்தவள், ''வண்டிய எடுங்க,'' என்றாள்.
''சரிங்க... எஜமானியம்மா,'' என்றபடி, வீட்டை பூட்டி, அவளை பின்னால் உட்கார வைத்து, வண்டியை கிளப்பினான்.
எல்லாவற்றையும் ஜன்னலோரம் நின்று பார்த்துக் கொண்டிருந்த கோகிலாவுக்கும், தன் கணவனிடம், திட்டும், கொட்டும் வாங்க ஆசை வர, அவர்களையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள்.
பூதங்குடி பழனிவேல்
