PUBLISHED ON : ஆக 26, 2018

மீண்டும் படம் தயாரிக்கும் விஜயசேதுபதி!
ஆரஞ்சு மிட்டாய் மற்றும் ஜூங்கா ஆகிய படங்களை தயாரித்து, நடித்தவர், விஜயசேதுபதி. இந்தப் படங்களில், ஜூங்கா வெற்றி பெற்றதை தொடர்ந்து, படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துள்ளவர், தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில், தான் நடிக்காமல், ஆண்டனி என்ற புதுமுக நடிகரை கதாநாயகராக்கியுள்ளார்.
— சினிமா பொன்னையா
ஆண்ட்ரியாவின், 'இமேஜ்' மாறப்போகிறது!
உதட்டு முத்தம் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து வந்தவர், ஆண்ட்ரியா; அத்துடன், சரக்கடிப்பது, புகைப் பிடிப்பது என்றெல்லாம் சில படங்களில் நடித்திருப்பவர், தற்போது, நடிகர் தனுஷுடன், வடசென்னை படத்தில் சேரிப்பெண்ணாக நடித்துள்ளார். இதற்காக, சென்னை தமிழ் பேச பயிற்சி எடுத்து, நடித்திருப்பதாக சொல்லும் ஆண்ட்ரியா, 'இனிமேல், கதாபாத்திர நடிகை என்கிற, 'இமேஜை' பாதுகாத்துக்கொள்ளும் வகையிலான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்; மீண்டும் கவர்ச்சி நடிகை என்கிற, 'இமேஜில்' சிக்கிக்கொள்ள மாட்டேன்...' என்கிறார். ஆனான ஆளெல்லாம் தானானம் போடுகிறபோது, கோணல் கொண்டை சிட்டுக்குருவி தலையைத் தலையை ஆட்டியதாம்!
— எலீசா
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படத்தில், சாயிஷா!
வனமகன் மற்றும் கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்தவர், சாயிஷா; இவர், பிரபுதேவா இயக்க இருந்த, கறுப்பு ராஜா; வெள்ளை ராஜா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், அப்படம் துவங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற அனிமேஷன் படத்தில், சாயிஷாவை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார், பிரபுதேவா. மறைந்த நடிகர், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நடிக்கும் இந்த அனிமேஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளார், சாயிஷா. வரும் வழி வந்தால், வளைந்தாடும் பானை!
— எலீசா
ஐஸ்வர்யா ராயின் கனவு!
திருமணத்திற்கு பின், வழக்கம் போல் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஐஸ்வர்யாராய்க்கு, இயக்குனராக வேண்டும் என்பது நீண்டகால கனவு. அதை நனவாக்க, தற்போது, கதை தேடலில் ஈடுபட்டிருப்பதாக சொல்பவர், 'நான் இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து சிலர் கிண்டல் செய்யலாம்; அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. காரணம், என் கணவர் அபிஷேக் பச்சன், இயக்குனர் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார். நான் வெற்றி பெற அது போதும்...' என்று தெரிவித்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* தன் மார்க்கெட் தள்ளாடுவதால், ஒட்டுமொத்தமாக சரிந்து விடக் கூடாதே என்று, சில இளவட்ட நடிகர்களின் தோள் சாய்ந்துள்ளார், அந்த நடிகை. அத்துடன், தற்போது இருக்கும் நிலையில், அவர்களின் அரவணைப்பும், ஆதரவும் அவசியம் தேவை என்று நினைப்பதால், முன்னணி நடிகர்களுக்கு இணையாக, மேற்படி நடிகர்களுடன் தாராள நெருக்கம் காட்டி நடித்து வருகிறார்.
'யாரும்மா அது... நடுரோட்டுல... காஜல் அகர்வால் மாதிரி ஒய்யாரமா நடந்துட்டு வர்றது... கொஞ்சம் விலகிப் போ...' என, சாலையில் சென்ற பெண்ணை அதட்டினார், ஆட்டோ டிரைவர்.
* மார்க்கெட் உச்சத்தில் இருந்த போது, படப்பிடிப்பு தளத்தில் சின்ன குறைபாடு இருந்தாலும், கத்தி ஊரைக் கூட்டுவார், அந்த நடிகை. இப்போது, மார்க்கெட், 'டல்'லாகி விட்டதால், தன் சம்பளத்தைக் கூட, கோடிகளில் இருந்து லட்சத்துக்கு இறக்கி விட்டதுடன், முன்பு நரைமுடி இயக்குனர்கள், நடிகர்களை தவிர்த்து வந்த நடிகை, கோலிவுட்டில் நீண்ட காலம் கோலோச்ச வேண்டும் என்பதற்காக, அவர்களை தேடிச் சென்று கைகுலுக்கி, நட்பு வளர்த்து வருகிறார்.
'ஆமா... ஹன்சிகா ஆபீசுக்கு வந்துட்டாளா... ஆளையே காணோமே...' என்று கேட்டாள், அலுவலக தோழி.
சினி துளிகள்!
* அசைவ பிரியையாக இருந்த லண்டன் நடிகை, எமிஜாக்சன், சிலரது அறிவுரைக்கு பின், இப்போது, சைவ உணவு பிரியையாக மாறியுள்ளார்.
அவ்ளோதான்!
