PUBLISHED ON : ஏப் 10, 2022

தேசிய திரைப்பட விருதுகள் உட்பட ஏராளமான விருதுகள் பெற்ற, மலையாள நடிகர் சலீம்குமார், கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, ஐரோப்பிய நாடான ஜெர்மனி சென்றார். நிகழ்ச்சிக்கு பின், கல்லுாரி நண்பர் வீட்டுக்கு போனார். அன்று நண்பனின் குழந்தைக்கு ஞானஸ்னானம் வைத்திருப்பதால், சர்ச்சுக்கு வரும்படி அழைத்தார், நண்பர்.
'சர்ச்சுக்கு வந்து என்ன செய்வது என்று தெரியாதே...' என்றார், நடிகர்.
'நான் செய்வது போல நீயும் செய்தால் போதும்...' என நண்பர் சொல்ல, நடிகரும் போனார். பூஜை ஆரம்பமானது, நண்பர் செய்வதை அப்படியே பின்பற்றினார், நடிகர்.
ஜெர்மன் மொழியில் ஏதோ சொன்னார், பாதிரியார். அப்போது, மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் பாதிரியாரிடம் நண்பர் சென்றபோது, நடிகரும் பின் தொடர்ந்தார். சர்ச்சில் இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க, ஏதும் புரியாமல் தவித்தார், நடிகர்.
நிகழ்ச்சி முடிந்ததும், 'குழந்தையின் தந்தை வரும்படி பாதிரியார் அழைக்க, இரண்டு தந்தையர் வந்தால் சிரிப்பு வராதா?' என, நண்பர் கூற, வெட்கி தலைகுனிந்தார், நடிகர்.
—ஜோல்னாபையன்
