தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/தப்பாட்டம்!

தப்பாட்டம்!

தப்பாட்டம்!


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அது ஒரு மாலைப் பொழுது... சென்னை, தி.நகர், முத்துரங்கன் சாலையை கடந்த போது, அந்த சுற்றுவட்டாரத்தையே, அதிர வைத்தது, புத்தர் கலைக்குழுவின், பறையிசை எனப்படும் தப்பாட்டம்!

'சாவு மேளம்...' என்று சொல்லி, மக்களால் தள்ளி வைத்தே பார்க்கப்படும் பறை இசையை, மேடையில் இருந்தவர்கள், உயர்வாக பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரே மாதிரியான சீருடையில், மலர்ந்த முகத்துடன், ஆணும், பெண்ணுமாக சேர்ந்து, அதிர வைத்த பறை இசை நடனத்தில், அனைவருமே மனதை பறி கொடுத்தனர். நிகழ்ச்சியின் நிறைவில், பார்வையாளர்கள் எழுப்பிய கரவொலி, பறையிசையையும் வெல்லுமளவிற்கு, பலமாக ஒலித்தது.

குழுவில், கல்லூரி மாணவியரும் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர், சென்னை, தன்ராஜ் கல்லூரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படிக்கும் விஜயலட்சுமி. விளையாட்டு வீராங்கனை; கல்லூரி கபடி குழுவின் கேப்டன்.

'கடந்த, 10 மாதங்களுக்கு முன் வரை, பறை என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால், புத்தர் கலைக்குழுவினரோடு அறிமுகமான பின், பறை இசையை ஒலிக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அந்த இசையோடு ஒன்றி விட்டேன்...' என்று கூறும் விஜயலட்சுமி, படிப்பு பாதிக்காத வகையில், மேடைகளில், பறை இசையை முழங்கி வருவதாகவும், படிப்பு செலவிற்கு போக, வீட்டிற்கும் சிறிது தொகையை கொடுக்க கூடிய அளவில் வருமானம் வருவதாக கூறுபவர், 'மனதிற்கும், உடம்பிற்கும் சரியான உடற்பயிற்சி இது...' என்கிறார் உற்சாகமாக!

பறை இசை பற்றி, மேலும் அவர் கூறியது:

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவி, பறை; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் தமிழிசைக்கருவி. அனைத்து வகை தோல் இசைக்கருவிகளுக்கும், இதுதான் தாய்.

சுமார், 2 கி.மீ., தூரத்தில் இருப்பவர்களை கூட, தன்வசப்படுத்தி, கேட்க வைக்க கூடிய திறன் படைத்தது, இந்த இசை. முற்காலத்தில், வெற்றியை பறை சாற்றுவது உள்ளிட்ட, 35 வகையான மங்கள நிகழ்விற்கு, இந்த இசை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

காலப்போக்கில், இறுதி ஊர்வல சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இசையாக சுருங்கிப் போனது. இப்போது, மீண்டும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக, உலகமெங்கும் இசைக்கப்படுகிறது. கை தட்ட தெரிந்த அனைவரும், எளிதாக கற்றுக் கொள்ளக்கூடிய, அரியதொரு இசையான பறையிசையை யாரும் பழகலாம்.

ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போது, மெரினாவில், மாணவர்களை இரவு முழுவதும் சோர்வடையாமல் வைத்திருந்த இசை, பறையிசையே! இதை, நேசித்து கேட்டவர்கள் மட்டுமல்ல, வாசித்த நாங்களும் சோர்வடையவில்லை என்றால், பறை இசையின் மகத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.

படிப்பை முடித்து, போலீஸ் அதிகாரியாவதே என் லட்சியம். ஆனாலும், பறையிசை என் வாழ்வின் அங்கமாக ஒலிக்கும். இசைப் பற்றி, மேலும் அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 77 08 77 66 53

எல். ராஜசேகரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us