
இரண்டாவது தளத்தில் இருந்த, 'ஏசி' அறையில், தன் எதிரே இருந்த, 'சி சி டிவி' கேமராக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார், நாதன். 'அடிமட்டத்திலிருந்து எவ்வளவு உயர்ந்திருக்கிறோம்...' என்று யோசித்தபோது, அவருக்குப் பெருமையாக இருந்தது. இவ்வளவு பெரிய, 'சூப்பர் மார்க்கெட்'டுக்கு இன்று, அதிபதி.
சட்டென்று அவர் கவனம், அந்த சூப்பர் மார்க்கெட்டின் தரை தளத்தில் நின்றிருந்த, ஓர் இளைஞன் மீது பதிந்தது.
வாங்கும் பொருட்களை போட்டுக் கொள்வதற்காக, கடையில் இருந்த கூடையை, அவன் எடுத்து வரவில்லை. அப்படியானால், மிகக்குறைவான பொருட்களைத் தான் வாங்குவான்.
ஆனால், அவன் ஆங்காங்கே நின்றதையும், சந்தேகத்துடன் சில பொருட்களைப் பார்த்ததையும், எதையோ ஒத்துக் கொள்ளாததுபோல் அதிருப்தியுடன் தலையசைத்ததையும் கேமராவில் பார்த்தபோது, நாதனின் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது.
'இவனது உடல் மொழி வித்தியாசமாக இருக்கிறதே...'
அந்த இளைஞன், ஒரு, 'ஷேவிங் பிளேடை' மட்டுமே எடுத்து, கடை மேனேஜரை அணுகி, எதையோ கேட்டான். மேனேஜர் மறுப்பதும், அந்த இளைஞன் ஆக்ரோஷத்துடன் பேசுவதும் புலப்பட்டது.
தரை தளத்துக்கு வந்த நாதன், மேனேஜரை கேள்விக்குறியுடன் பார்த்தார்.
''ஒண்ணுமில்லை சார்... இவன், உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னான்... அதெல்லாம் இப்போ முடியாதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்,'' என்றார்.
அந்த இளைஞனின் முகத்தில் கடுமை அதிகமானது.
''சொல்லுங்க சார்... நான் எந்தவிதத்தில் உங்களுக்கு உதவலாம்?'' என, கேட்டார் நாதன்.
''நீங்க உதவ வேண்டாம்... நான்தான் உங்களுக்கு உதவியாக சில ஆலோசனைகளைச் சொல்லலாம்ன்னு நினைத்தேன்... முதலில் உங்கள் மேனேஜரை மாற்றுங்கள் அல்லது அவரது நடவடிக்கையை மாத்திக்கச் சொல்லுங்கள்...
''நீங்கள் இருக்கும்போதே,'இல்லை' என்று சொல்கிறார்... நீங்கள் மரியாதையாக, 'சார்...' என்று என்னைக் கூப்பிட்டீர்கள்... வாடிக்கையாளர் எந்த வயது கொண்டவராக இருந்தாலும், மரியாதையாகக் கூப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், உங்கள் மேனேஜர், என்னை, 'இவன்' என்று குறிப்பிடுகிறார்,'' என்றான்.
நாதனுக்குக் கோபம் வரவில்லை. அந்த இளைஞனிடம், ஏதோ விஷயம் இருப்பதாக, அவரது வியாபார மூளைக்கு பட்டது.
''உங்க ஆலோசனைகள சொல்லுங்க,'' என்றார், புன்னகையுடன்.
''குழந்தைகளுக்கான சாக்லெட்களையும், மிட்டாய்களையும் எதற்காக மேல் பகுதியில் வைத்திருக்கிறீர்கள்?''
''அப்போதுதான் குழந்தைகள், அவற்றை எடுத்து சாப்பிட மாட்டார்கள். கடைக்குள்ளேயே தின்று விட்டால், பெற்றோர் அதற்கான தொகையை, 'பில்'லில் சேர்க்காமல் போகலாம்,'' என்றார், மேனேஜர் கர்வமாக.
''முட்டாள்தனம்...'' என்ற அந்த இளைஞன், பின், ''பொதுவாக சாக்லெட்களை பெற்றோர் தாமாகவே வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். குழந்தைகள் அவை வேண்டுமென்று கேட்கும் போது தான் வாங்கித் தருவர்.
''எனவே, குழந்தைகளின் பார்வையில் படும்படி கீழ்பகுதியில்தான் அவையெல்லாம் இருக்க வேண்டும். பணம் செலுத்தும் பகுதிக்கு அருகில் இவற்றையெல்லாம் வைத்தால், குழந்தைகள் அவற்றை எடுத்து சாப்பிட்டால், தெரிந்து விடும்... கணக்கில் சேர்க்கலாம்!'' என்றான், இளைஞன்.
நாதனுக்கு அந்த இளைஞனின் புத்திசாலித்தனம் பிடித்திருந்தது.
''சார்... இன்றைக்கு, கடையில் ஏன் கூட்டம் இல்லை?''
'உனக்கெதற்கு இந்தவேண்டாத வேலை...' என்பது போல், மேனேஜரின் முகம் கடுமை காட்ட, நாதன் பொறுமையாக பதிலளித்தார்...
''தம்பி... பொதுவாக, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் இங்கே அதிகம் பேர் வருவதில்லை.''
''அதாவது, அவர்களை அந்த நாட்களில் இங்கே வரவழைக்க, நீங்கள் எந்த முயற்சியும் எடுத்துக் கொண்டதில்லையோ,'' என்றான், அந்த இளைஞன்.
''என்ன முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்... அந்த நாட்களில் வந்தால், நிதானமாக பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று அறிவிக்க வேண்டுமா?'' என்று கேட்டார் நாதன்.
''அந்த இரண்டு நாட்களில் வந்தால், எல்லா பொருட்களுக்கும், 5 சதவீதம் தள்ளுபடி என்று அறிவிக்கலாமே... 'பீட்ஸா' விற்கும் கடைகளில் கூட, இப்படியெல்லாம் செய்கின்றனரே... நம் மக்களுக்கு தள்ளுபடி என்றால் தனிப் பிரியம்.
''ஆடி மாதம் ஆகாதது. துணிமணிகளை அப்போது வாங்கவே கூடாது என்று இருந்த நிலைமை மாறி, ஆடி தள்ளுபடியில் வாங்கலாம் என்று காத்திருக்கும் நிலை வந்திருப்பதை எல்லாம், நீங்கள் யோசிக்கவே மாட்டீங்களா?''
''தம்பி... என்ன பண்றீங்க?''
''வேலை தேடிக்கிட்டிருக்கேன். ஆனால், அதுக்காக எந்த சம்பளத்துக்கும் நான் ஒத்துக்குவேன்னு நினைக்காதீங்க... நாணயமா நடந்துக்குவேன்... ஆறே மாசத்தில், உங்க வியாபாரத்தை இரட்டிப்பாக்கும் அளவுக்கு யோசனைகளை என்னால் சொல்ல முடியும்!''
'சாமர்த்தியம்தான்... முயற்சிக்கலாமே...' என்று தோன்றியது நாதனுக்கு. இளைஞனின் குரலில் முழு நம்பிக்கை தெரிந்தது. அது, கர்வமாகப் படவில்லை.
ஆறு மாதங்களில் இல்லையென்றாலும், 10 மாதங்களில் வியாபாரம் இரட்டிப்பானது. கஜா என்ற அந்த இளைஞனின் ஆலோசனைகள், இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன என்பது, நாதனுக்குப் புரிந்தது.
உண்மையாகவே உழைத்துக் கொண்டிருந்தான், மேனேஜர், கஜா.
''சார்... வாஸ்துப்படி, பணம் வாங்குமிடத்தை வடகிழக்கிலே வைப்பது நல்லது. இன்றைய ரொட்டியை எல்லாம் நேற்று வந்த, ரொட்டிக்கு பின்னாலே வையுங்க.
''ஒண்ணு வாங்கினா இன்னொண்ணுன்ற மாதிரி அறிவிப்புகளை, கடைக்குள்ளே வச்சா போதாது... வாசலிலே வைக்கணும்! மழைக்காலம் சார்... குடைகளைப் பாதுகாப்பாக வாங்கி வைக்க, வாசலிலே ஒருத்தரைப் போட்டுடலாம்... 'டோக்கன்' கொடுக்கட்டும்...'' என, பல மாற்றங்களை செய்தான்.
இந்நிலையில் ஒருநாள், ''முதலாளி... ரெண்டு தெரு தள்ளி, நானே ஒரு, 'சூப்பர் மார்க்கெட்' துவங்கலாம்ன்னு இருக்கேன்... வங்கியில், கடன் கொடுப்பதாக கூறினர்... நல்லா வருவேன்னு நம்பிக்கை இருக்கு... உடனே இல்லே, நாலு மாசம் கழிச்சுதான் துவங்கப் போறேன்... அதுக்குள்ளே, நீங்க வேற மேனேஜரை பார்த்துக்குங்க!''
கஜாவை உற்றுப் பார்த்தார், நாதன்.
''இந்த வியாபாரத்திலேயே, நீ கூட்டு சேரலாமே... லாபத்தில், 20 சதவீத பங்கை நீ எடுத்துக்கலாம்!''
கஜா, யோசிப்பது தெரிந்தது.
''என்னப்பா... மனசில்லையா... அதுக்கு மேலே உன் இஷ்டம். சரி, நம்ம கடையிலே வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்துப் போட்டுக்க, 'டிராலி' வச்சிருக்கோமில்லையா... அது இங்கே அதிகமாகவே இருக்கு... நீ வேணா உன் புதிய கடைக்கு,10 'டிராலி'யை எடுத்துக்க... என் அன்பளிப்பு,'' என்றார்.
அப்போதும் கஜா, பதில் பேசாததால், நாதன் வேறொரு சந்தேகத்தை எழுப்பினார்.
''உன் அத்தனை, யோசனைகளையும் என்னிடம் சொல்லி, இந்த, 'சூப்பர் மார்க்கெட்'டை மிக நல்ல நிலைக்கு மாற்றியிருக்கே... அப்ப எப்படி என்னை விட அதிகமாக நீ, 'பிசினஸ்' செய்ய முடியும்?''
''நான் புதுசா ஆரம்பிக்கிற, 'சூப்பர் மார்க்கெட்'டில் நீங்களும் பங்கு வகிக்கலாம் சார்... 60 -- 40. அதாவது, லாபத்திலே, 40 சதவீதம் உங்களுக்கு. ஆனால், 60 சதவீதம் முதல் போடுவது, நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அப்புறம் சார், நீங்க, 'டிராலி'யைப் பற்றிச் சொல்லும்போது, எனக்கு ஒரு யோசனை தோணிச்சு...
''புதுக்கடையிலே பெரிய அளவிலான, 'டிராலி'க்களைத்தான் பயன்படுத்துவேன்... அப்போதான் வாடிக்கையாளர்கள் அதிகப் பொருட்களை வாங்குவாங்க... இல்லேன்னா, 'டிராலி நிரம்பிடுச்சு'ன்னு வேறெதையும் வாங்க மாட்டாங்க... ஏற்கனவே எடுத்து வச்சதில், கொஞ்சத்தை எடுத்து, வேறு பொருளை வைப்பாங்க... சார், நான் சொன்ன, 60 - 40 ஏற்பாடு, உங்களுக்கு, ஓ.கே.,வாங்கறதை, இன்னும் ஒருவாரத்திலே சொல்ல முடியுமா?'' என்றான், கஜா; நிறுத்தி நிதானமாக.
நாதனுக்கு கொஞ்சம் திகைப்பும், அதிக வியப்பும் ஒரு சேர எழுந்தன. தான் முன்னுக்கு வந்த கதையை யோசித்தார். இவன், 'இவன், என்னை மாதிரியே தான்; ஆனா, புதுவிதமா யோசிக்கிறான்...'
கஜாவின் கையைக் குலுக்கியபடி தலையசைத்தார். அந்த தலையசைப்பு, அவர் ஏற்றுக் கொண்டதை அறிவித்தது.
அருண் சரண்யா

