தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/தேர் ஓடியது!

தேர் ஓடியது!

தேர் ஓடியது!


PUBLISHED ON : ஏப் 04, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெய்வம் ஒருபோதும் நம்மை கை விடாது; கட்டிக் காக்கும். இடையூறுகளை ஏற்படுத்துவதும் தெய்வமே. அது ஏன் என்பதை விவரிக்கும் நிகழ்வு இது:

தென்காசிக்கு அருகில் உள்ளது, திருமலை முருகன் கோவில். அம்மலை மீது எழுந்தருளியிருக்கும் அழகு முருகனை, தன் சொந்த மகனாகவே பாவித்து, பெருமளவில் திருப்பணிகள் செய்து வந்தவர், சிவகாமி அம்மையார்.

ஒருசமயம், பெரிய பெரிய கருங்கல் துாண்களை மலை மேல் ஏற்ற, ஏராளமான தேங்காய் நார்கள் தேவைப்பட்டன. அதற்காக, திருச்செந்துார் சென்றார்.

மாசி மக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்துாரில் தேரோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அலைகளின் ஓசையையும் மீறி, 'திருச்செந்துாரானுக்கு அரோகரா...' என, ஏராளமானோரின் பேரொலி, ஆகாயத்தில் எதிரொலித்தது.

கும்பலோடு கும்பலாக, நெஞ்சருகே கைகளை கூப்பியபடி, 'ஆறுமுக வள்ளலே... அடியாளுக்கு இரங்கு ஐயா...' என்றபடியே, ஒரு சில வினாடிகள் கண்களை மூடினார், சிவகாமி அம்மையார்.

'சீ, போ அந்தப்பக்கம்... கெழவி கண்ணை மூடிட்டு நிக்கிது பாரு...' என்று, அவரை தள்ளினார், கோவில் பணியாளர் ஒருவர். அவரைத் தாண்டி தேர் போய் விட்டது.

கீழே விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட சிவகாமி அம்மையார், மெல்ல எழுந்து, தன்னை நிலைப்படுத்தி, 'முருகா... நான் செய்த தவறு என்னவென்று தெரியவில்லையே... எதற்காக இந்த தண்டனை...' என்று சொல்லி, கண்ணீர் விட்டார்.

அப்போது, ஓடிக்கொண்டிருந்த தேர் நின்றது. பலவிதங்களில் முயற்சித்தும், பலன் இல்லை.

அங்கிருந்த பக்தர் ஒருவருக்கு ஆவேசம் வந்து, 'என் பக்தை ஒருத்தி, இதோ தேருக்கு பின்னால் கண்கலங்கி நிற்கிறாள். அவள் வந்து வடம் பிடித்து இழுத்தால் தான் தேர் ஓடும்...' என்று கூறி, அப்படியே சாய்ந்தார்.

அனைவரும் தேரின் பின்புறம் ஓடி, சிவகாமி அம்மையாரிடம் மன்னிப்பு கேட்டு, விபரம் சொல்லி அழைத்து வந்தனர். மெய்சிலிர்க்க, அவர்களை பின் தொடர்ந்தவர், மனதார முருகனை கும்பிட்டு, தேர் வடத்தை பிடித்து இழுக்கத் துவங்கினார்.

'திருச்செந்துார் ஆண்டவனுக்கு அரோகரா...' என்று, ஒருமித்த குரலில் ஓலமிட்டு அனைவரும், தேர் வடத்தை பிடித்து, இழுக்கத் துவங்கினர்.

தேர் அசைந்தாடி புறப்பட்டது. அனைவரும் வியந்தனர்.

தேர் நிலையை அடைந்ததும், அனைவரும் சிவகாமி அம்மையாரிடம், அவரை பற்றி விசாரித்தனர்.

தேங்காய் நாருக்காக வந்ததாக கூறினார். அனைவருமாக சேர்ந்து, ஏராளமான தேங்காய் நார்களை மலை மலையாய் குவித்தனர்.

'முருகா... இதற்காக தான் பணியாள் மூலம் என்னை கீழே தள்ளி, திருவிளையாடல் புரிந்தாயா ஐயா...' என்று நெகிழ்ந்தார், சிவகாமி அம்மையார்.

அவர், திருமலை செல்வதற்குள், தேங்காய் நாரை அங்கு கொண்டு போய் சேர்த்திருந்தனர், திருச்செந்துார் அடியார்கள்.

துாய்மையான பக்தி, இடையூறுகளை நீக்கி, இன்பம் அருளும்.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us