PUBLISHED ON : பிப் 04, 2018

தென் பாண்டி நாட்டில், சேற்றுார் என்ற பகுதியை, குறுநில மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். இவர், அருகிலிருக்கும் தேவதானம் எனும் ஊரில் கோவில் கொண்டுள்ள, நச்சாடை லிங்கர் - பெற்றநாயகி எனும் தெய்வங்கள் மீது பேரன்பும், பக்தியும் கொண்டிருந்தார்.
அதன் வெளிப்பாடாக கோவிலின் முன்புறம், மண்டபம் ஒன்றை கட்ட எண்ணினார். அதற்கேற்ப, அருகிலுள்ள மலை உச்சியில் இருந்த பெரும் பாறை ஒன்று, அவர் கண்ணில் பட்டது.
ஆனால், அப்பாறையை எவ்வாறு கீழே கொண்டு வருவது என்று தெரியவில்லை. அதனால், 'நம் அரசவைக்கு அவ்வப்போது வந்து போகும் சங்கு புலவர், அம்பாளின் அருளைப் பெற்றவராச்சே... அவரால் இக்காரியம் நிறைவேறும்...' என, நினைத்தார்.
மறுநாள், அரசவைக்கு வந்தார், சங்கு புலவர். அவரை வணங்கி வரவேற்ற மன்னர், 'புலவர் பெருமானே... நீங்கள் வாக்கு பலிதம் உள்ளவர் என்பது எல்லாருக்கும் தெரியும். பெற்ற நாயகி திருக்கோவில் பணிக்காக, இம்மலை மீது இருக்கும் பாறை கீழே விழுமாறு நீங்கள் பாட வேண்டும்...' என்று வேண்டினார்.
'மன்னா... நீங்கள் நினைத்தது நடக்க அம்பாள் அருளட்டும்...' என்று வாழ்த்தினார், சங்கு புலவர்.
அன்றிரவு, கோவிலுக்கு சென்று அம்பிகை முன் அமர்ந்து, மலை மீது உள்ள பாறை கீழே விழ வேண்டி துதித்து, மூன்று பாடல்கள் பாடினார், புலவர்.
பின், அப்பாடல்களை ஓர் ஏட்டில் எழுதி, அதை எடுத்து, குறிப்பிட்ட பாறையின் அடியில் வைத்து, மறுபடியும் கோவிலுக்கு வந்தார்.
'அம்மா... அடியேன் கோரிக்கை நிறைவேறச் செய்...' என்று வேண்டி, உண்ணா நோன்பு இருந்தார்.
நள்ளிரவு திடீரென, கடும் காற்றும், பெரு மழையும் பொழிய, மரம், செடிகள் முறிந்து விழ, மலை மீது இருந்த பாறை அப்படியே நழுவி, சிறு விரிசல் கூட இல்லாமல், கீழே வந்து சேர்ந்தது.
மறுநாள் பொழுது புலரும் போது, மழை நின்று விட்டது.
செய்தி அறிந்து வந்த மன்னர், புலவரை வணங்கி, 'அம்பாளின் அருள்பெற்ற புலவரே... வியப்புக்குரிய செயலை செய்த தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்...' என, வேண்டினார்.
'மன்னா... இதில் என் செயல் என்ன இருக்கிறது... எல்லாம் அம்பாள் அருள்; அவளை துதித்து வணங்கு...' என்று வெகுமதியை மறுத்து, வீடு திரும்பினார்.
கடந்த,19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் நடந்த வரலாறு இது!
பக்தியில் சிறந்தவர்களுக்கு உதவ, பரம்பொருள் மறக்காது!
பி.என்.பரசுராமன்
அறிவோம் ஆன்மிகம்!
தர்மத்திற்கு அழிவு இல்லை என்று சொல்கிறார்களே... ஏன்?
என்றும், தான் அழியாமல் நித்தியமாய் இருக்க விரும்பினாள், தர்ம தேவதை. அதற்காக, ரிஷப ரூபம் எடுத்து, சிவனை வணங்கி, தன்னை வாகனமாக ஏற்கும்படி வேண்டினாள். அதன்படி, அதை வாகனமாக்கிக் கொண்டார், சிவபெருமான். தர்மத்தை இறைவனே வாகனமாக கொண்டதால், தர்மத்திற்கு என்றும் அழிவில்லை.
