
சமர்த்த ராமதாசர் எனும் மகான், ஒரு ஊருக்குச் சென்றார். இரவு நேரம், அந்த ஊர் சாவித்திரி அம்மன் கோவிலில் உள்ள அம்பிகை, நேருக்கு நேராக மகானுக்குக் காட்சி கொடுத்தாள்.
'ராமதாசா... கவிதைகள் பாடும் நீ, என் மீதும் ஒரு கவி பாடு...' என்றாள்.
'தாயே, எனக்கு முத்துக் கடுக்கன் கொடுத்தால் பாடுகிறேன்...' என்றார், மகான்.
'சரி, தருகிறேன்...' என வாக்களித்த அம்பிகை, சிரித்தபடியே அவர் பார்வையில் இருந்து மறைந்தாள்.
மறுநாள் இரவு, அம்பாள் கோவிலுக்குப் போனார், மகான். மகானின் காதுகளில் கடுக்கன் போட்டாள், அம்பாள். அம்பிகை மீது பாடல்கள் பாடி விட்டுத் திரும்பினார், மகான். அவர் வந்ததோ- போனதோ, யாருக்கும் தெரியாது.
ஆனால், அங்கு நடந்ததை எல்லாம் அம்பாள், மகானின் சீடரும், மன்னருமான வீர சிவாஜியின் கனவில் போய் சொல்லி விட்டாள்.
மறுநாள் பொழுது விடிந்ததும், வழக்கப்படி வந்து கோவிலைத் திறந்து பூஜையை ஆரம்பித்தனர், அர்ச்சகர்கள். அப்போது, அம்பிகையின் முத்து மாலையில் இரு முத்துக்களைக் காணாமல் திகைத்தனர்.
'பூட்டிய கதவு பூட்டியபடியே இருக்க, இது எப்படி நடந்தது...' என்று பதறிப் போய், மன்னரிடம் தகவல் கூறினர்.
தினமும் காலையில் எழுந்ததும், குருநாதரை வணங்குவார், மன்னர். அன்றும், வழக்கம் போல், வணங்கி எழுந்தவரின் பார்வையில், குருநாதரின் காதுகளில் மின்னும் கடுக்கன்கள் தெரிந்தன.
மன்னரின் பார்வையைப் புரிந்து கொண்ட மகான், நடந்த விஷயங்களை எல்லாம் கூறினார்.
'குருதேவா, இப்போது தாங்கள் சொன்ன விஷயங்களை எல்லாம், அம்பாளே கனவில் வந்து சொன்னாள்.
'ஆனால், எனக்குப் புரியாத விஷயம், பூட்டியிருந்த கோவிலுக்குள், எப்படி திறந்து கொண்டு போனீர்கள்... மறுபடியும் எப்படிப் பூட்டினீர்கள் என்பது தான் புரியவில்லை...' என்றார்.
'மன்னா, எங்கும் இறைவனைக் காண்பவர்கள், இவ்வுலகில் மட்டுமல்ல; எந்த உலகங்களுக்கும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்...' என்றார், மகான்.
குருநாதரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, விடை பெற்றார், மன்னர் வீர சிவாஜி.
தெய்வம் வரும், அருள் தரும் என்பதை விளக்கும் இந்நிகழ்வு, 17-ம் நுாற்றாண்டில் நடந்தது. யார் மூலமாவது, யார் வழியாகவாவது தெய்வம், அருள் புரியும். சந்தேகமே வேண்டாம்!
பி. என். பரசுராமன்