தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (8)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (8)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (8)


PUBLISHED ON : மார் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: டாக்சியில் இருந்து முகிலா இறங்கும் கேமரா பதிவு காட்சிகளை, 'லேப்டாப்'பில் காட்டினார், 'மாஜி' எம்.எல்.ஏ., இதயச்சந்திரன். மார்பை பிடித்தபடி புவனேஷ் சாய, 'சிவியர் ஹார்ட் அட்டாக்' வந்திருப்பதாக மருத்துவர் கூறினார். இந்நிலையில், தருணுக்கு மொபைலில் அழைப்பு வர எடுத்து பேசியவன், முகிலா எப்படி இருக்கிறாள் என விசாரித்தான்-

''முகிலா இன்னமும் மயக்கத்துலதான் இருக்கா,'' என்றான், ஜோஷ்.

மொபைல் போனை தன் இடது காதுக்கு இன்னமும் அழுத்தமாய் பொருத்தியபடி, சுற்றும்முற்றும் ஒருமுறை பார்த்தான், தருண்.

சன்னமான குரலில், ''ஜோஷ்... இப்போ, காலை மணி, 10:30. எப்படியும் இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே முகிலாவுக்கு நினைவு வந்துடும்.

''அப்புறம், நிலைமை புரிஞ்சு, கொஞ்ச நேரத்துக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவா. நீ அதை கண்டுக்க வேண்டாம். ரொம்பவும் ஆர்ப்பாட்டம் பண்ணினா, 'பென்டாஜோசின்' ஒரு, 'ஆம்ப்யூல்' போட்டுடு... யோசனை பண்ணிட்டிருக்க வேண்டாம்.''

''சரி.''

''அப்புறம்.... இக்பால் வந்தானா?''

''வரலை.''

''ஏன்?''

''தெரியலை. அவனோட அப்பா, அபுதாபியிலிருந்து இன்னிக்கு வரப்போறதா சொல்லியிருந்தான். போன் பண்ணி பார்க்கட்டுமா?''

''வேண்டாம், அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்.''

''சரி, நீ எப்ப வர்றே?''

''உடனடியாய் முடியாது; இங்கே நிலைமை கொஞ்சம் சரியில்லை. புவனேஷுக்கு, 'ஹார்ட் அட்டாக்' வரும்ன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கலை. டாக்டர் இனிமேல் என்ன சொல்லப் போறார்ன்னு தெரியலை.

''முகிலா காணாம போன விஷயத்துல அந்த டிரைவர் மகுடபதி எப்படியும் மாட்டிக்குவான்னு நினைச்சேன்; எப்படியோ தப்பிச்சுட்டான். இங்கே எல்லாமே எதிர்பாராதவிதமாக நடந்துட்டிருக்கு. நாம அவசரப்படாம நிதானமா காய்களை நகர்த்த வேண்டிய நேரம் இது.''

மறுமுனையில் ஜோஷ் சிரித்தபடியே, ''என்ன தருண்... உன் குரல்ல ஒரு பயம் தெரியுது. நீ எதுக்கும் பயப்பட மாட்டியே?''

''இது பயமில்லை, ஒரு முன்னெச்சரிக்கை. சரி, அப்புறமா பேசறேன். நர்ஸ், என் பேரைச் சொல்லி கூப்பிட்டுக்கிட்டிருக்கா. நான் என்னன்னு போய்ப் பார்க்கிறேன்.''

மொபைல் போனை அணைத்து சட்டைப் பாக்கெட்டில் போட்டபடி, வேகமான நடையில் அந்த நர்சை நெருங்கினான், தருண்.

''புவனேஷோட அட்டெண்டர் தானே நீங்க?'' கேட்டாள், நர்ஸ்.

''ஆமா சிஸ்டர்.''

கையிலிருந்த, 'ப்ரிஸ்கிரிப்ஷனை' நீட்டி, ''இந்தாங்க, 'பேஷன்ட்'டுக்கு உடனடியாய் 'எல்.எஸ்.டி., இஞ்செக் ஷன்' போடணும். ஹாஸ்பிடலோட கீழ் பகுதியில, 'பார்மசி' இருக்கு; போய் வாங்கிட்டு வந்துடுங்க. தாமதம் பண்ணிடாதீங்க... அடுத்த அரைமணி நேரத்துக்குள்ளே அதை, 'பேஷன்ட்'டுக்கு போடணும்.''

''இதோ... 10 நிமிஷத்துக்குள்ள வாங்கிட்டு வந்துடறேன், சிஸ்டர்,'' என்ற தருண், 'ப்ரிஸ்கிரிப்ஷனை' வாங்கி நடந்தான். பக்கவாட்டுப் படிகளில் இறங்கி, 'பார்மசி'யை நோக்கி ஓட்டமும், நடையுமாய் போனான்.

கூட்டமில்லாத கவுன்டரில், 'ப்ரிஸ்கிரிப்ஷனை' கொடுக்க, உள்ளேயிருந்த ஒரு பெண் வாங்கிப் பார்த்து, ''இந்த மருந்து கொஞ்சம், 'காஸ்ட்லி' சார்.''

''எவ்வளவு?''

''ஏழாயிரம் ரூபாய்.''

''நோ ப்ராப்ளம். குடுங்க.''

''பணமா, கார்டா சார்?''

''கார்டு.''

மருந்தை எடுப்பதற்காக, அந்தப் பெண் நகர்ந்த விநாடி, தருணின் முதுகுக்கு பின், ''குட்மார்னிங் என் வருங்கால பிராண நாதரே,'' என, அந்த சாக்லேட் குரல் கேட்டது.

சற்றே திடுக்கிட்டு, திரும்பிப் பார்த்து மலர்ந்தான், தருண்.

''தீப்தி, நீயா?''

''நானே தான்,'' என்று சொல்லி அழகாய் சிரித்த, 23 வயது தீப்தி, ஒரு பெண்ணுக்குத் தேவையான சாமுத்திரிகா லட்சணத்தில் இருந்தாள்.

உடுத்தியிருந்த மெரூன் நிற சேலையும், அதே வண்ண ஜாக்கெட்டும் அவளுடைய ரோஸ் மில்க் நிறத்தை கூட்டிக் காண்பித்தது. லேசாய் தமன்னா ஜாடை. தன் வலதுகையின் ஆள்காட்டி விரலால் அவன் விலாவில் குத்தியபடி, ''தருண், இங்க என்ன பண்ணிட்டிருக்கே... யாருக்கு மருந்து?'' என்றாள்.

''என் நண்பன் புவனேஷுக்கு.''

''என்னாச்சு?''

''ஹார்ட் அட்டாக்.''

தீப்தி முகம் வெகுவாய் மாறியது.

''இன்னிக்குத்தானே அவருக்கு கல்யாணம்ன்னு சொன்னே!''

சிரமமாய் எச்சில் விழுங்கினான், தருண்.

''ஆமா... ஆனா, கல்யாணம் நடக்கலை.''

''என்னது, கல்யாணம் நடக்கலையா... என்ன காரணம்?''

''முகிலாவைக் காணோம்.''

நிதானம் இழந்தவளாய், அவன் தோள்பட்டையை இறுக்கிப் பிடித்தாள், தீப்தி.

''என்னது காணோமா... புரியும்படியா சொல்லு.''

ஒரு நிமிஷம் செலவழித்து, நடந்த சம்பவங்களை சுருக்கமான வார்த்தைகளால் சொல்லி முடித்தான், தருண்; உறைந்து போன பார்வையோடு அவனை ஏறிட்டாள், தீப்தி.

''முகிலா சொன்ன நேரத்துக்கு அந்த விநாயகர் கோவிலுக்கு வராம, பூ மார்க்கெட் கார்னர்ல ஏன் டாக்சியிலிருந்து இறங்கிப் போகணும்?''

''அதான் தெரியலை.''

''சரி, அவளோட மொபைல் போன் இருக்கிற இடத்தை, 'சைபர் க்ரைம் ப்ராஞ்ச்' கண்டுபிடிச்சிட்டாங்களா?''

''இன்னும் இல்லை. 'மானிட்டரிங்' போயிட்டிருக்கு.''

''போலீஸ் என்ன சொல்றாங்க?''

''இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ளே எப்படியும் கண்டுபிடிச்சுடலாம்ன்னு இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் நம்பிக்கை தர்ற மாதிரி சொல்றார்.''

தீப்தி மேற்கொண்டு பேசும் முன், பிளாஸ்டிக்காலான ஒரு சிறிய சைஸ், 'மெடிசன் கிட்' எடுத்து வந்து, தருணுக்கு முன் வைத்து, 'பில்'லை நீட்டினாள், 'பார்மசி' பெண்.

''உங்க கார்டை கொடுங்க சார்.''

தருண் தன், 'டெபிட் கார்டை' எடுத்து நீட்ட, அவள், 'ஸ்வைப்பிங் மிஷினில்' செருகியபடி, ''பேஷன்ட்டுக்கு என்ன வயசு?'' என, கேட்டாள்.

''இருபத்தெட்டு.''

''அப்ப பிரச்னையில்லை. 24 மணி நேரத்துல சரியாயிடும்; கவலைப்படாதீங்க.''

''உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.''

தருணும், தீப்தியும், 'மெடிசன் கிட்'டோடு அங்கிருந்து நகர்ந்தனர்.

''ஆமா, நீ எதுக்காக இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தே?'' கேட்டான், தருண்.

''ரெண்டு நாளைக்கு முந்தி என் அம்மாவை, இங்கே இருக்கிற ஆர்த்தோ டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்தேன். 'மூட்டு மாற்று ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும்'ன்னு டாக்டர் சொல்லி, எம்.ஆர்.ஐ., மற்றும் அல்டரா ஸ்கேனுக்கு எழுதி கொடுத்தார். ஸ்கேன் எடுத்துட்டோம். ஆனா, 'ரிப்போர்ட்ஸ்' இன்னிக்குத்தான் கிடைக்கும்ன்னு சொன்னதால, நான் மட்டும் வந்தேன்.''

''ஆமா, 'ரிப்போர்ட்ஸ்' வாங்கிட்டியா?''

''இன்னும் இல்லை. இப்பத்தான் பார்க்கிங் ஏரியாவில், 'டூ - வீலரை' விட்டுட்டு இந்தப் பக்கம் வந்தேன்; உன்னைப் பார்த்தேன்.''

''சரி... நீ, 'ரிப்போர்ட்சை' வாங்கிட்டு கிளம்பு.''

''தருண்... நான் புவனேஷை பார்க்க வரலாமா?''

''வேண்டாம்.''

''ஏன்?''

''வேண்டாம்ன்னா வேண்டாம் தான். நீ என்ன வேலைக்காக இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தியோ அதைப் பார்த்துட்டு போயிட்டே இரு.''

''ஆமா... எதுக்காக இவ்வளவு டென்ஷன்?'' கேட்டாள், தீப்தி.

மாடிப்படிகளை நோக்கி நடந்து கொண்டிருந்த தருண், ''இதோ பார் தீப்தி... நீயும், நானும் காதலிக்கிற விஷயம் வெளியுலகத்துக்கு தெரியக் கூடாதுன்னு, நான் எத்தனையோ தடவை உன்கிட்டே சொல்லிட்டேன். ஆனா, நீ அதை சீரியசாவே எடுத்துக்க மாட்டேங்கிறே?''

''நான் அதை சீரியசாய் எடுத்துகிட்ட காரணத்தால தான், அடிக்கடி உன்னை நேர்ல சந்திக்காம போன்ல மட்டுமே பேசி, நம் காதலை பொத்தி பொத்தி வளர்த்துட்டு வர்றேன். இன்னிக்கு இந்த ஹாஸ்பிடல்ல யதேச்சையாய் சந்திச்சிருக்கோம். கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்ன்னு நினைச்சேன்.''

''இப்ப நிலைமை சரியில்லை தீப்தி.''

''எனக்குப் புரியுது தருண். சரி, நான் கிளம்பறேன். சாயந்தரமா போன் பண்றேன். புவனேஷ் எப்படியிருக்கார்ன்னு சொல்லு. முகிலா கிடைச்சாளா, இல்லையாங்கிறதையும் எனக்கு, 'அப்டேட்' பண்ணு,'' என்ற தீப்தி, எதிர் திசையில் நடந்து போனாள்.

பெருமூச்சொன்றை வெளியேற்றி, பக்கவாட்டுப் படிகளில் ஏறி, இரண்டு நிமிஷ நடையில், ஐ.சி.யூ.,க்கு வந்த தருண், சின்னதாய் அதிர்ச்சிக்கு உட்பட்டான்.

அங்கு, வெளியே போடப்பட்ட நாற்காலிகளில் புவனேஷின் அண்ணன் மகேந்திரன், அவன் மனைவி சுவர்ணாவும் அமர்ந்திருந்தனர். முகிலாவின் அப்பா ரத்தினம் வெளிறிய முகத்தோடு பின்வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். இவர்கள் மூன்று பேருக்கும் முன், கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருந்தார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்.

தருணைப் பார்த்ததும், ''என்ன தருண்... மருந்து வாங்கப் போனீங்களா?''

''ஆமா சார்.''

''ஐ.சி.யூ.,வில், நர்ஸ் காத்திட்டிருக்காங்க... போய் குடுத்துட்டு வாங்க.''

தருண் வேகமாய் போய், ஐ.சி.யூ., கதவருகே காத்திருந்த நர்சிடம் மருந்தை கொடுத்துவிட்டு, இன்ஸ்பெக்டரிடம் வந்தான்.

அவர் கை காட்டி, ''உட்காருங்க,'' என்றார்.

பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தான், தருண்.

புவனேஷின் அண்ணனை ஏறிட்டபடி, கிண்டலான குரலில், ''புவனேஷுக்கு நீங்க செய்ய வேண்டிய வேலையை எல்லாம் அவரோட நண்பன் தருண் பண்ணிட்டிருக்கார். இதுதான் உண்மையான நட்பு. கூட பொறந்துட்டா மட்டும் போதாது,'' என்றார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்.

தயக்கமான குரலில் இடைமறித்தான், தருண்.

''சார், ஏற்கனவே அவங்க மனக்கஷ்டத்துல இருக்காங்க. நீங்களும் மனசு நோகற மாதிரி பேசாதீங்க, ப்ளீஸ்.''

''மனக்கஷ்டமாவது ஒண்ணாவது. கடந்த ஒரு மணி நேரமா மூன்று பேரையும் ஸ்டேஷன்ல வெச்சு விசாரிச்சுப் பார்த்துட்டேன். ஒரு கேள்விக்கும் சரியான பதில் வரலை; கடப்பாரையை விழுங்கிட்ட மாதிரி மூணு பேரும் முழிக்கறாங்க. எல்லாரையும் துாக்கி உள்ளே வெக்கணும். அப்பத்தான் உண்மை வெளியே வரும்.''

இன்ஸ்பெக்டர் கோபத்தில் பொருமிக் கொண்டிருக்கும் போதே, தருணின் மொபைல் போன், 'வைபரேஷனில்' துடித்தது. லேசாய் கை நடுங்க எடுத்து, அழைப்பது யாரென்று பார்த்தான்.

மறுமுனையில், ஜோஷ்.

தொடரும்

ராஜேஷ்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us