sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (9)

/

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (9)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (9)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (9)


PUBLISHED ON : ஏப் 03, 2022

Google News

PUBLISHED ON : ஏப் 03, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: மருத்துவமனையில் தருணை பார்க்கும் அவனது காதலி தீப்தி, புவனேஷ் பற்றி விசாரித்தாள். அவளை அங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தான், தருண். இந்நிலையில், ஐ.சி.யூ., வெளியே, புவனேஷின் அண்ணன், அண்ணி, முகிலாவின் அப்பா மற்றும் இன்ஸ்பெக்டர் அமர்ந்திருப்பதை பார்த்து, தருண் அதிர்ச்சியடைய, மொபைலில் அழைத்தான் நண்பன் ஜோஷ் -

மொபைல் போனின் திரையில் ஜோஷின் பெயரைப் பார்த்த விநாடியே, தருணின் இதயத்துடிப்பு சற்றே எகிற, நெற்றிப்பரப்பு வியர்வையின் பிசுபிசுப்புக்கு உட்பட்டது.

'அழைப்பை நிராகரித்து விடலாமா...' என்று யோசித்து, போனின் பக்கவாட்டு பட்டனை அழுத்த முயன்ற விநாடி, ''போனை எடுத்து பேசுங்க. ஏதாவது முக்கியமான விஷயமாய் இருக்கப் போகுது. நாம பேச வேண்டியதை,

10 நிமிஷம் கழிச்சு கூட பேசிக்கலாம். எந்த அவசரமும் இல்லை,'' என, குரல் கொடுத்தார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்.

''நான் வேலை செய்ற வங்கியின் மேனேஜர் போன் பண்றார் சார்,'' என்றான், தருண்.

''விஷயம் என்னான்னு கேளுங்க.''

இயல்பாய் முகத்தை வைத்து, மெல்ல குரலைத் தாழ்த்தி, ''குட்மார்னிங் சார்,'' என்றான், தருண்.

மறுமுனையில் சின்ன சிரிப்பொன்றை உதிர்த்து, ''புரியுது... உனக்குப் பக்கத்துல யாரோ இருக்காங்கன்னு நினைக்கிறேன்,'' என்றான், ஜோஷ்.

''எஸ் சார்... இன்னிக்கு காலைல,

9:00 மணிக்கே, ரெண்டு நாள், 'லீவ்' வேணும்ன்னு, 'லீவ் அப்ளிகேஷனை' உங்களுக்கும், ஆர்.ஓ.,வுக்கும், 'மெயில்' பண்ணிட்டேன். ஏதாவது முக்கிய விஷயமா, சார்?''

ஜோஷின் குரல் மறுமுனையில் வெகுவாய் தாழ்ந்தது.

''முக்கியமான விஷயம் தான்... முகிலாவைப் பத்தின ஒரு விஷயத்தை உன்கிட்ட, 'ஷேர்' பண்ணணும். சொல்லலாமா?''

''சொல்லுங்க சார்.''

''முகிலா இன்னமும் மயக்கத்துலதான் இருக்கா. எப்படியும் அவ கண் முழிச்சுப் பார்க்க மதியானம் ஆயிடும்ன்னு நினைக்கிறேன். ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முந்தி அவகிட்ட இருந்த சூட்கேசை எடுத்து அதுக்குள்ளே என்ன இருக்குன்னு ஆர்வமா, 'செக்' பண்ணிப் பார்த்தேன்.

''ஒரு, 'ஷாக்கிங் நியூஸ்' கிடைச்சது. அது என்னான்னு இப்ப சொல்றேன். நீ உன்னோட முகத்துல எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டிக்காம நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கோ.''

''ஒண்ணும் பிரச்னையில்லை சார்... அந்த பார்ட்டிக்கு, தாராளமாய்,

50 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் தரலாம். அவர் மிகவும் உண்மையானவர், விசுவாசமானவர். நீங்க என்னமோ சொல்ல வந்தீங்களே... சொல்லுங்க சார்.''

ஜோஷ் எதிர்முனையில் குரலை கிசுகிசுப்பாக்கி, ''தருண்... முகிலாவோட சூட்கேசுக்குள்ளே ரெண்டு லட்ச ரூபாய் பணம், நாலு தங்க வளையல், அதோடு ஒரு கவருக்குள்ளே, 'மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட்'டும், சில மாத்திரைகளும் இருந்தது.

''அந்த, 'மெடிக்கல் ரிப்போர்ட்'டை எடுத்து படிச்சுப் பார்த்தேன். போன வாரம் முகிலா, வடகோவை பவர் ஹவுசுக்கு பக்கத்தில் இருக்கிற, டாக்டர் மனோரஞ்சிதத்தைப் போய்ப் பார்த்து, 'க்வாலிடேட்டீவ்

ஹெச்.சி.ஜி.,' பரிசோதனை பண்ணியிருக்கா. அது எதுக்கான பரிசோதனை தெரியுமா?''

''தெரியலை, சொல்லுங்க சார்.''

''ஒரு பெண் கர்ப்பமாய் இருக்காளா இல்லையான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக செய்யற ரத்த பரிசோதனை. முகிலா அதை பண்ணியிருக்கா. பரிசோதனை முடிவு என்ன சொல்லுது தெரியுமா, தருண்... கர்ப்பம் உறுதி. 15 நாள் தள்ளிப் போயிருக்கு.

''இந்த ஒரு காரணத்துக்காகத்தான் புவனேஷும், முகிலாவும் அவசர அவசரமாய் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்து இருக்காங்கன்னு நினைக்கிறேன்.''

அதிர்ச்சியை ஜீரணித்து, வெகு இயல்பான முகபாவத்தோடு பேச ஆரம்பித்தான், தருண்.

''நீங்க சொல்றது சரிங்க, சார்... நான் ரெண்டு நாள், 'லீவ்' முடிஞ்சு வங்கிக்கு வந்த பின், 'பேப்பர்ஸ்' தயார் பண்ணி தர்றேன். அதுவரைக்கும் அவருக்கு கடன் வழங்குவதை நிலுவையில் வையுங்க சார்.''

''ஓ.கே., தருண். இரவு இங்கே வர்றதுக்கு முயற்சி செய். நீ வரும்போது இக்பால் இங்கே இருப்பான். 'பார்ட்டி' வெச்சு கொண்டாடிடுவோம்.''

''ஓ.கே., சார்... தேங்க்யு வெரிமச்.''

மொபைல் போனை அணைத்துவிட்டு, இன்ஸ்பெக்டரை ஏறிட்டபடி செயற்கையாக புலம்பினான், தருண்.

''நான் ஹாஸ்பிடல்ல எது மாதிரியான சூழ்நிலையில் இருக்கேன்னு தெரிஞ்சும், போன் பண்றாங்க சார். இவங்களுக்கு எல்லாம் மனிதாபிமானம்ன்னா என்னான்னு தெரியாது போலிருக்கு. நான் எதுக்காக, 'லீவு' போட்டிருக்கேன்னு, விண்ணப்பத்துல தெளிவா எழுதி இருந்தேன்.''

''சில பேர் அப்படித்தான். அதையெல்லாம் பெரிசா எடுத்துக்காம, இப்ப முகிலாவோட விஷயத்துக்கு வருவோம். முகிலாவோட அப்பா ரத்தினத்தையும், புவனேஷின் அண்ணன் மகேந்திரனையும், அண்ணி சுவர்ணாவையும் ஸ்டேஷனுக்கு வரவழைச்சு பேசினதில், அவங்க தர்ற, 'ஸ்டேட்மென்ட்ஸ்' வித்தியாசமாயிருக்கு.''

தருணின் இரு புருவங்களும் ஒரு மில்லி மீட்டர் உயரத்துக்கு உயர்ந்தன.

''என்ன சார் சொல்றீங்க, வித்தியாசமான, 'ஸ்டேட்மென்ட்'டா?''

''ஆமா... முகிலாவோட அப்பா ரத்தினம் தன்னோட பெண்ணைப் பத்தி என்ன சொல்றார்ன்னு அவர்கிட்டயே கேளுங்க.''

தருண் ஆச்சரியமான பார்வையோடு ரத்தினத்தின் பக்கம் திரும்ப, அவர் தலையசைத்தபடி, ''தம்பி... என் பொண்ணு என்னைப் பத்தி உங்ககிட்ட என்ன சொல்லியிருப்பான்னு எனக்குத் தெரியாது. நான் குடிகாரன் தான். பெத்த பொண்ணு கல்யாண வயசுல இருக்கும்போது, நான் ரெண்டாவதா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பு தான்.

''வயசான காலத்துல எனக்கு ஒரு துணை தேவைப்படும்ங்கிற காரணத்துக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். முகிலாவுக்கு அது பிடிக்கலை, முன்ன மாதிரி முகம் குடுத்து என்கிட்டே பேசறதில்லை. தேவையிருந்தா மட்டும் என்கிட்ட பேசுவா.

''வீட்ல இருக்கும்போது மூணாம் மனுஷி மாதிரிதான் நடந்துக்குவா. எனக்கும் அவளோட நடவடிக்கைகள் எல்லாம் பழகிப் போனதால எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன்.

''அவளுக்கும், புவனேஷுக்கும் இடையே இருக்கிற காதல் விவகாரம் எனக்குத்

தெரியும். ஆறு மாசம் கழிச்சு ரெண்டு பேருக்கும் நானே பேரூர் கோவில்ல

சிம்பிளா கல்யாணம் பண்ணி, ஒரு நல்ல ஹோட்டல்ல, 'ரிசப்ஷன்' வைக்கலாம்ன்னு இருந்தேன்.

''அதுக்குள்ளே இப்படி ஒரு அவசர கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் தயாராவாங்கன்னு நான் நினைச்சுகூட பார்க்கலை. சரி அப்படியே கல்யாணமாகி இருந்தாக் கூட பரவாயில்லை... அதுவும் நடக்கலை.''

தருண் அப்பாவித்தனமாய் முகத்தை வைத்து, ''அய்யா... முகிலாவை யாரும் கடத்திட்டுப் போகலை. பூ மார்க்கெட் கார்னர்ல டாக்சியை நிறுத்தி, சூட்கேசோடு அவதான் இறங்கிப் போயிருக்கா. அந்த ஏரியாவில் உங்களுக்கு சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா?''

''இன்ஸ்பெக்டரும் இதே கேள்வியைத் தான் என்கிட்ட கேட்டார். சொந்தக்காரங்க யாரும் அந்த ஏரியாவில் இல்லையே தம்பி.''

''கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்கய்யா,'' என்று சொன்ன தருண், புவனேஷின் அண்ணன் மகேந்திரனிடம் திரும்பி, மெல்லிய குரலில், ''உங்க தம்பியும், முகிலாவும் காதலிக்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?'' என்றான்.

''தெரியாது. இன்ஸ்பெக்டர் இன்னிக்கு கூப்பிட்டு விசாரிக்கும் போது தான் அந்த விஷயமே தெரிய வந்தது. இந்த காதல் விஷயம் எங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நாங்களே முன்ன நின்னு கல்யாணத்தைப் பண்ணி வெச்சிருப்போம். நாங்க ஒண்ணும் காதலுக்கு எதிரானவங்க இல்லை.''

''அப்படீன்னா, முகிலா காணாம போனதுக்கும், உங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லைன்னு சொல்ல வர்றீங்களா?''

''ஒரு துளி கூட சம்பந்தம் கிடையாது. அவன் எந்த பெண்ணைக் காதலிச்சா எங்களுக்கு என்ன... அது அவனோட சொந்தப் பிரச்னை.''

''உங்களுக்கும், புவனேஷுக்கும், 'டெர்ம்ஸ்' சரியாய் இல்லாத காரணத்தால தான், அவன் வீட்டை விட்டு வெளியேறி, 'மேன்ஷன்'ல போய் தங்கியிருந்தான் இல்லையா?''

''ஆமா.''

''உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்னை?'' என்றான், தருண்.

''என்ன நீங்க, என்னை, கிரிமினல் குற்றவாளியை போலீஸ் விசாரிக்கிற மாதிரி விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க?''

''தப்பா நினைச்சுக்காதீங்க... உங்களை குற்றவாளின்னு யார் சொன்னது... உங்க தம்பி புவனேஷுக்கும், முகிலாவுக்கும் கல்யாணம் நடக்க இருந்த நேரத்துல, அந்தப் பெண் காணாம போயிருக்கா. அந்த அதிர்ச்சியில் புவனேஷுக்கு, 'ஹார்ட் அட்டாக்' வந்து இப்ப, ஐ.சி.யூ.,வில் இருக்கான்.

''அவன் சுய உணர்வுக்கு வந்து கண் முழிச்சு பார்க்கும்போது, முகிலாவை அவன் முன் கொண்டு போய் நிறுத்தணும்... அதுக்கான ஒரு முயற்சிதான் இந்த விசாரணை. என்னை தவறாக நினைச்சுக்காதீங்க, மகேந்திரன்... புவனேஷ், உங்களுக்கு தம்பி; எனக்கு நண்பன். அவனோட உயிரைக் காப்பாத்த வேண்டியது, நம் ரெண்டு பேருக்குமே ஒரு முக்கியமான விஷயம்.''

அதுவரை எதுவும் பேசாமல் மவுனமாயிருந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், ஒரு புன்னகையோடு மகேந்திரனைப் பார்த்து, ''நான் கேட்க நினைச்ச கேள்விகளைத்தான் தருண் உங்ககிட்ட கேட்டுகிட்டு இருக்கார். பதில் சொல்லுங்க, நீங்க எந்த தப்பும் பண்ணலைன்னா பயப்படாதீங்க.''

''சார்... எனக்கும், என் தம்பிக்கும் கிராமத்துல இருக்கிற ஒரு ஏக்கர் விவசாய நிலம் சம்பந்தமாய் பிரச்னை இருந்தது என்னவோ உண்மை. அதனால, அவனுக்கும், எனக்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டதும் உண்மை தான். ஒரு தடவை கைகலப்பு கூட நடந்திருக்கு.

''அதையெல்லாம் காரணம் காட்டி, முகிலா காணாம போனதுக்கு, நானும் என் மனைவியும்தான் காரணம்ன்னு முத்திரை குத்திடாதீங்க.''

மகேந்திரன் சற்றே குரலை உயர்த்தி கோபத்தோடு பேசிக் கொண்டிருக்கும் போதே, ஐ.சி.யூ.,வில் இருந்து வெளிப்பட்ட நர்ஸ், வேக நடையுடன் தருணை நெருங்கினாள். உடம்பில் லேசாய் பதட்டம்.

''சார்... நீங்கதானே, 'பேஷன்ட்' புவனேஷோட நண்பர் தருண்?''

''ஆமா.''

''புவனேஷுக்கு, 'எல்.எஸ்.டி., இஞ்செக் ஷன்' போட்ட அஞ்சு நிமிஷத்துக்குள்ள நினைவு திரும்பிடுச்சு. சுய உணர்வுக்கு வந்து கண் விழிச்சு பார்த்ததுமே, உங்க பேரைச் சொல்லித் தான் கூப்பிட்டார்.'' இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் நாற்காலியிலிருந்து எழுந்து, ''புவனேஷை போய்ப் பார்க்கலாமா?'' என்றார்.

நர்ஸ் தயக்கமாய் குரலை இழுத்து, ''சாரி சார்... ஐ.சி.யூ.,குள் போய், 'பேஷன்ட்'டைப் பார்க்க வெளியாட்கள் யாருக்கும் அனுமதியில்லை.

''ஆனா, 'பேஷன்ட்' ஒரு நபரைப் பார்த்துப் பேச ஆசைப்பட்டா மட்டும், அவரை அனுமதிப்போம். புவனேஷ் இப்போ தருணை மட்டும் பார்த்து ஏதோ பேச விரும்பறதா சொல்றார்.''

தருணின் விழிகளில் வியப்பு உறைந்தது.

''கொஞ்சம் சீக்கிரமா வாங்க. இப்ப அவருக்கு நினைவு இருக்கு. நினைவு தப்புவதற்குள் போய் பார்த்துட்டு வந்துடுங்க.''

நர்ஸ் சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பிக்க, தன்னைச் சுற்றியிருந்த எல்லாரையும் தயக்கத்தோடு பார்த்தான், தருண்.

இன்ஸ்பெக்டர் அவனுடைய தோளின் மீது கையை வைத்து, ''போயிட்டு வாங்க தருண். புவனேஷ் தனிப்பட்ட முறையில் உங்ககிட்ட ஏதோ சொல்ல விரும்பறார்ன்னு நினைக்கிறேன்.''

அதிர்கிற இதயத் துடிப்போடு, ஐ.சி.யூ.,வை நோக்கி நடந்தான், தருண்.

தொடரும்

ராஜேஷ்குமார்







      Dinamalar
      Follow us